இந்தியா பாகிஸ்தானிடையே அமைதிக்காக கர்தினால் அழைப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
காஷ்மீர் பகுதியில் பதட்ட நிலைகள் நிலவிவரும் இன்றைய காலக்கட்டத்தில் நீடித்த அமைதியின் பாதையை இந்தியாவும் பாகிஸ்தானும் கண்டுகொண்டு செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்தார் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியாஸ்.
ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பகுதியில் 26 பொதுமக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற பதட்ட நிலைகளும் இராணுவத் தாக்குதல்களும் தற்போது இடைக்காலப் போர் நிறுத்தத்தால் அமைதி அடைந்துவரும் நிலையில், நிரந்தர அமைதிக்கான பாதை எடுக்கப்பட வேண்டும் என இரு நாடுகளையும் கேட்டுக்கொண்டார் மும்பையின் முன்னாள் பேராயர் கர்தினால் கிரேசியாஸ்.
காஷ்மீரில் அமைதி ஏற்படும் நோக்கத்தில் முழு அளவிலான ஓர் ஒப்பந்தம் இடம்பெற வேண்டியது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல உலக அமைதிக்கும் பங்களிப்பதாக இருக்கும் என அழைப்பு விடுத்த கர்தினால், பழைய கால விரோதங்களை கை விட்டு அமைதிக்காக உழைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என மேலும் கூறினார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே கலாச்சாரத்தையும், பாரம்பரியங்களையும், எண்ணப்போக்குகளையும், உணர்வுகளையும் பொதுவாகக் கொண்டிருப்பதால், நேரடியாக உட்கார்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வது இரு நாடுகளுக்கும் இலகுவாக இருக்கும் என தன் ஆவலை வெளியிட்டார் கர்தினால் ஆஸ்வால்டு.
இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தலையீடுகள் வழி பன்னாட்டு சமூகம் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே அமைதியை ஏற்படுத்த உதவ வேண்டும் என அழைப்பு விடுத்தார் கர்தினால் ஆஸ்வால்டு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்