MAP

சீன கத்தோலிக்கர்கள் சீன கத்தோலிக்கர்கள் 

பலமுறை சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள புதிய திருத்தந்தை

கர்தினால் Chow : மற்றவர்களுக்கு செவிமடுப்பதில் மிகுந்த ஆர்வமுடைய ஒரு திருத்தந்தையை கர்தினால்கள் தேர்ந்தெடுத்துள்ளனர், இத்தகைய திருத்தந்தையே இக்கால உலகிற்கு தேவை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தையாவதற்கு முன்னர் பலமுறை சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், சீன கலாச்சாரத்தையும் உண்மை நிலைகளையும் நன்கு அறிந்தவர் என்றார் ஹாங்காங் ஆயர், கர்தினால் Stephen Chow Sau-yan.

திருத்தந்தை 14ஆம் லியோ குறித்து ஹாங்காங் மறைமாவட்ட வார செய்தி இதழுக்கு  நேர்முகம் வழங்கிய இயேசு சபை கர்தினால் Chow அவர்கள், தான் திருத்தந்தை 14ஆம் லியோவைச் சந்தித்தபோது அவருக்கு சிறு Sheshan மரியன்னை திருவுருவச் சிலையை வழங்கியதோடு சீனத் திருஅவையையும் மக்களையும் மறக்க வேண்டாம் என கேட்டதாகவும் கூறினார்.

முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நடந்த பாதையிலேயே புதிய திருத்தந்தையும் நடைபோடுவார் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்ட கர்தினால், பலவீனமானவர்களின் குரலாக ஒலிக்க திருத்தந்தையோடு இணந்து தன் குரலையும் இணைத்துக் கொள்ள தான் ஆவலாக இருப்பதாக மேலும் தெரிவித்தார்.

 மற்றவர்களுக்கு செவிமடுப்பதில் மிகுந்த ஆர்வமுடைய ஒரு திருத்தந்தையை கர்தினால்கள் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், இத்தகைய திருத்தந்தையே இக்கால உலகிற்கு தேவை எனவும் உரைத்தார் கர்தினால் Chow.

வாழ்வில் ஓரங்கட்டப்பட்டவர்களுடனும் பலவீனர்களுடனும் இணைந்து நடைபோடும் புதிய திருத்தந்தையுடன் நடைபோட ஹாங்காங் திருஅவை பொதுநிலையினருடன் தயாராக இருப்பதாகவும் மேலும் கூறினார் ஹாங்காங் கர்தினால்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 மே 2025, 15:20