தடம் தந்த தகைமை : கடுஞ்சினமுற்ற அரசர் நெபுகத்னேசர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அந்நாள்களில் தானியேலும் அவரது தோழர்களும் மீண்டும், “அரசர் அந்தக் கனவைத் தம் பணியாளர்களுக்குச் சொல்லட்டும்; அப்பொழுது அதன் உட்பொருளை விளக்கிக் கூறுவோம்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அரசன் மறுமொழியாகக் கூறியது: “நான் முடிவெடுத்துவிட்டேன் என்பதை அறிந்தே நீங்கள் காலம் தாழ்த்த முயலுகிறீர்கள்; இது எனக்குத் திண்ணமாய்த் தெரியும். கனவு இன்னதென்று உங்களால் தெரிவிக்க இயலாதெனில், உங்கள் எல்லாருக்கும் ஒரே தீர்ப்புதான். சூழ்நிலை மாறும்வரை பொய்யும் புரட்டுமான வீண் கதைகளைச் சொல்ல உங்களுக்குள் உடன்பட்டிருக்கிறீர்கள். ஆதலால் கனவை முதலில் சொல்லுங்கள்; அப்பொழுது தான் அதன் உட்பொருளையும் உங்களால் விளக்கிக் கூறமுடியும் என்பதை நான் அறிந்துகொள்ள இயலும்.” கல்தேயர் மறுபடியும் அரசனை நோக்கி, “அரசரே! உமது விருப்பத்தை நிறைவேற்றக்கூடியவன் இவ்வுலகில் ஒருவனுமில்லை; வலிமையுடைய எந்தப் பேரரசனும் இத்தகைய காரியத்தை எந்த மந்திரவாதியிடமாவது மாயவித்தைக்காரனிடமாவது, கல்தேயனிடமாவது இதுகாறும் கேட்டது கிடையாது. ஏனெனில், நீர் கேட்கும் காரியம் செயற்கரிய ஒன்று; தெய்வங்களாலன்றி வேறெவராலும் அரசருக்கு அதனைத் தெரிவிக்க முடியாது; ஆனால், மானிடர் நடுவில் தெய்வங்கள் இருத்தலில்லையே!” என்று மறுமொழி கூறினார்கள்.
அரசன் இதைக் கேட்டுக் கடுஞ்சினமுற்றுச் சீறி எழுந்து பாபிலோனில் இருந்த எல்லா ஞானிகளையும் அழித்து விடும்படி ஆணையிட்டான். ஞானிகள் கொலை செய்யப்படவேண்டும் என்ற ஆணையின்படி தானியேலையும் அவருடைய தோழர்களையும் கொலை செய்யத் தேடினார்கள். அரசனுடைய காவலர்த் தலைவன் அரியோக்கு பாபிலோனிய ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்டு வந்தான். தானியேல் முன்னெச்சரிக்கையுடனும் விவேகத்துடனும் அரசனுடைய காவலர்த் தலைவனாகிய அரியோக்கிடம், “அரசனின் ஆணை இவ்வளவு கடுமையாயிருப்பது ஏன்?” என்று கேட்டார். அதற்குரிய காரணத்தை அரியோக்கு தானியேலுக்குத் தெரிவித்தான். உடனே தானியேல் அரசனிடம் போய், கனவின் உட்பொருளை அவனுக்கு விளக்கிக்கூறத் தமக்குச் சில நாள் கெடு தருமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்