தடம் தந்த தகைமை - மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம்….
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும். (லூக் 12:48) என்றார் இயேசு.
வாழ்க்கை எனும் வாய்ப்பில் நாம் பெற்றுள்ள செல்வங்கள் ஏராளம். உயிர் வாழ இப்பூமி, பாரம்பரியச் சொத்து, கைநிறைய செல்வங்கள், நீண்ட ஆயுள், எண்ணற்ற திறமைகள், களிப்பூட்டும் கலைகள், சுற்றம் சூழ உறவுகள், நுண்ணறிவுமிக்க நூல்கள், பற்பல பணிகள், ஊதியங்கள் என எல்லாம் பெற்றவர்கள், பெற்றதையெல்லாம் தனக்கெனத் தக்க வைப்பது தவறு. எவ்வளவுக்குப் பெற்றுள்ளோமோ அவ்வளவுக்கு ஈவதற்கான கடமையும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
வாழ்வில் பெறும் பணம், பொருள் தவிர பல பொறுப்புகள்கூட நம்மிடம் ஒப்படைக்கப்படலாம். அப்பொறுப்புக்களைப் பொறுப்பாக, பொறுமையாக, பொதுமை மனப்பாங்குடன் செயல்படுத்துகையில் அப்பொறுப்புக்கு நாம் சிறப்பு சேர்க்கின்றோம். பெற்ற வாழ்வு, வாய்ப்பு, வசதிகள், திறன்கள் யாவற்றிற்கும் நன்றி செலுத்துவதெனில் அவற்றைத் திட்டமிட்டுப் பயன்படுத்துவதும், அப்பயன்படுத்தலால் பிறரை வாழச் செய்வதுமே நிறை மகிழ்வூட்டும். குறைவாயிருக்கிறதே எனக் குறைபடுவதைவிட, குறைவை நிறைவாக்கத் துணிபவரே நிறைவானவர்.
இறைவா! நீர் எனக்கெனத் தந்த ஒவ்வொன்றையும் பிறர் நலனுக்கென ஈயும் மனம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்