தடம் தந்த தகைமை - எதை உண்போம்? எதைக் குடிப்போம்?
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள்
இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாய்ச் செய்யமாட்டாரா?
ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? என கவலைக்
கொள்ளாதீர்கள் (மத் 6:30&31) என உரைத்தார் இயேசு.
அநீதிக் கோட்டைக்குள் அடிமைப்பட்டுக் கிடந்த இயேசு கால ஏழையரின் மனம் அச்சம், கவலை, ஏமாற்றம், ஏக்கம் என்ற உணர்வுகளுக்குள் ஆட்பட்டுக் கிடந்தது. அகவாழ்விலும் புறவாழ்விலும் அமைதியற்று, ஆறுதலற்று, ஆனந்தமிழந்து, அடுத்து என்ன நிகழுமோ என்ற பதட்டத்துள் வாழ்ந்தனர். அந்த ஏழையர்க்கு இயேசு சுட்டிய காட்டுப்புல் மீதான கடவுளின் காப்புறுதி கலங்கரை போன்று ஒளிர்ந்தது. கோடையில் வாடிப் போனாலும் வசந்தம் வந்ததும் வளமை சூடி நிற்கும் காட்டுப் புற்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகள் வாழும் வலுப்பெற்றவை. அவற்றின் வேர்களும், சிறு கிழங்குகளும் வீரியமானவை. ஏழைகளை எவ்வளவுதான் முதலாளித்துவச் சம்மட்டி கொண்டு ஒடுக்கினாலும் அவர்களுக்குள் கனன்று கொண்டிருக்கும் விடுதலைப் பிழம்பை யாராலும் ஒருபோதும் எளிதாக அணைத்துவிட முடியாது. ஏனெனில் கடவுளே அவர்களது அரணும் வலிமையும். கடவுளின் செயல்பாடுகள் அனைத்தும் அவரது கருணைமிக்க அன்பிலிருந்தே புறப்படுகின்றன.
இறைவா! உம் கருணை மழையில் நான் நனைய வேண்டுவதோடு பிறரையும் நனைக்கும் மனம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்