MAP

கடுகு விதைகள் கடுகு விதைகள் 

தடம் தந்த தகைமை - விண்ணரசு கடுகு விதைக்கு ஒப்பாகும்

இயேசுவின் பார்வையில் ஏழையர், துன்புறுவோர், சமூகத்தால் ஒதுக்கப்பட்டோரே சின்னஞ் சிறியவர்கள். அத்தகு சிறியோரே விண்ணரசில் பெரியோர். மிகச் சிறியவர்களாலும் மாபெரும் மாற்றங்கள் சாத்தியமே.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும் (மத் 13:31&32) என்றார் இயேசு.

உளமொன்றி மன்றாட கடுகு நம் கண்களுக்குமுன் மிகச் சிறியதொரு தானியம். நம் மத்தியில் அது செடியாக வளர்ந்தாலும் பாலஸ்தீனத்தில் மரமாக உயர வளரும் தன்மை கொண்டது. சிறிய தானியமெனும் கடுகு மிகச் சிறந்த, சீரான மருந்து. அதன் எண்ணெய் நலமளிக்கும் குணம் கொண்டது. அதனை ஈயும் மரங்கள் பெரிதாய் வளர்ந்து நிழல் தருவதாயும், வானப் பறவைகள் கூடு கட்டி வாழ அடைக்கலம் அளிப்பதாயும் உள்ளன. சிறியது என எதையும், எவரையும் ஒதுக்காமல் வாழ்வதே சிறந்த மனநிலை. இயேசுவின் இயக்கம் வெறுமனே பன்னிருவரைக் கொண்ட ஒரு சிறிய குழுமம். அவர் வெளிப்படையாக, சமூகத்தில் முழுமையாக, மூன்று ஆண்டுகள் கூடப் பணிபுரிய முடியவில்லை. அவரால் எடுத்தாளப்பட்ட சின்னச் சின்னச் சிந்தனைகள் வரலாற்றையே மாற்றியுள்ளன. அவரது பார்வையில் ஏழையர், துன்புறுவோர், சமூகத்தால் ஒதுக்கப்பட்டோரே சின்னஞ் சிறியவர்கள். அத்தகு சிறியோரே விண்ணரசில் பெரியோர்.

அவர்களாலே மண்ணெங்கும் மாபெரும் மாற்றங்கள் நிகழ்வாகின்றன என்பதை மறுக்கவியலாது. மிகச் சிறியவர்களாலும் மாபெரும் மாற்றங்கள் சாத்தியமே.

இறைவா! சக மனிதரையும் அவர்களது நற்செயல்களையும் சிறிதெனக் கருதுவதும், நடத்துவதும் உம்மைச் சிறுமைப்படுத்துவதென ஏற்கிறேன். எல்லாரையும் சிறப்பாய் அணுக அருள் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 மே 2025, 15:17