விவிலியத் தேடல்:திருப்பாடல் 68-6, மாபெரும் சபையில் இறைப்புகழ்
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில் 'சீயோன் மலையே ஆண்டவரின் உறைவிடம்!' என்ற தலைப்பில் 68-வது திருப்பாடலில் 19 முதல் 23 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 24 முதல் 27 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளை பக்திநிறை மனதுடன் வாசிப்போம். "கடவுளே! நீர் பவனி செல்வதை, என் கடவுளும் அரசருமானவர் தூயகத்தில் பவனி செல்வதை, அனைவரும் கண்டனர். முன்னால் பாடகரும் பின்னால் இசைக் கருவிகளை வாசிப்போரும், நடுவில் தம்புரு வாசிக்கும் பெண்களும் சென்றனர். மாபெரும் சபை நடுவில் கடவுளைப் போற்றுங்கள்; இஸ்ரயேலர் கூட்டத்தில் ஆண்டவரை வாழ்த்துங்கள். அதோ! இளையவன் பென்யமின், அவர்களுக்கு முன்னே செல்கின்றான்; யூதாவின் தலைவர்கள் கூட்டமாய்ச் செல்கின்றார்கள்; செபுலோன் தலைவர்களும் நப்தலியின் தலைவர்களும் அங்குள்ளார்கள்" (வச. 24-27).
முதலில் ஓர் அழகான கதையுடன் நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். அரசர் ஒருவர் தன்னுடைய நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தார். அவர் தன்னுடைய மக்களுக்குத் தேவையானதை, அவர்கள் கேட்கும் தருணத்தில் ‘இல்லை’ என்று கூறாமல் கொடுத்து வந்தார். அதனால் அவர் மீது மக்களுக்கு அளவுகடந்த அன்பு ஏற்பட்டது. அந்த அரசருக்கும் மக்களின் மீது பெரும் பாசம் இருந்தது. ஒரு நாள் அரசருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. “ஏதாவதொன்று வேண்டும் என்றாலும் மக்கள் என்னைச் சந்தித்துதான் பெற்றுச் செல்கின்றனர். அப்படி அவர்கள் என்னை சந்திந்து, அதற்கான விளக்கத்தை அளித்து அந்தப் பொருட்களை பெற்றுச் செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே தலைநகரில் ஒரு பொருள்காட்சியை அமைத்து, அதில் எல்லா பொருள்களையும் வைத்துவிட்டால், யாருக்கு எந்தப் பொருள் வேண்டுமோ அதை மக்கள் இலவசமாக அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு எடுத்துச் செல்லலாம் அல்லவா” என்று எண்ணினார். தனக்குத் தோன்றிய அந்த யோசனையை தன்னுடைய அமைச்சர்களிடம் பேசி கருத்துக் கேட்டார் அரசர். அவர்களும் மனம் மகிழ்ந்து அவரது கருத்தை ஒப்புக்கொண்டனர். இதை அடுத்து தலைநகரில் பிரமாண்டமான ஒரு பொருள்காட்சி மையம் உருவாக்கப்பட்டது. அதில் அனைத்துப் பொருள்களும் கிடைக்கும் வகையில் அரசர் ஏற்பாடு செய்திருந்தார். அதுவும் அனைவருக்கும் போதும் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பொருள்கள் அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்தன.
பின்னர் மக்களுக்கு இதுபற்றி முரசறைந்து அறிவிக்கப்பட்டது. பின் நல்லதொரு நாளில் அந்தப் பொருள்காட்சியை அரசர் திறந்து வைத்தார். அந்த நாட்டு மக்கள் அனைவரும் வந்து தங்களுக்குத் தேவையான பொருள்களை, தங்களின் தேவைக்கு ஏற்றவாறு எடுத்துச் சென்றனர். சிலர் பொன், சிலர் உடை, சிலர் வீட்டு உபயோகப் பொருள்கள், சிலர் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருள்கள் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு சென்றனர். அப்போது அந்தப் பொருள்காட்சிக்கு ஒரு மூதாட்டியும் வந்திருந்தார். அவர் அங்கு வந்து சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர, எந்தப் பொருளையும் எடுத்துக் கொள்ளவில்லை. அங்கிருந்த அரண்மனை அதிகாரிகள், அந்த மூதாட்டியிடம் வந்து “அம்மா.. உங்களுக்குத் தேவையான பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். ஏன் தயங்கி நிற்கிறீர்கள். அரசரை நேரில் சந்தித்து நீங்கள் கேட்கத் தயங்குவீர்கள் என்பதால்தான், அவரும் இதுபோன்ற ஓர் ஏற்பாட்டை செய்திருக்கிறார். எனவே தயங்காமல் உங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றனர். அதற்கு அந்த மூதாட்டி, “இங்கிருக்கும் எந்தப் பொருளும் எனக்குத் தேவையில்லை. ஆனால் எனக்கு அரசரைப் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்றார். உடனே அரண்மனை அதிகாரிகள், மூதாட்டியின் விருப்பத்தை அமைச்சர்களிடம் கூறினர். அவர்கள் வந்து மூதாட்டியிடம் பேசியும் கூட, அவர் “எனக்கு எந்தப் பொருளும் வேண்டாம். அரசரைத்தான் பார்க்க வேண்டும்” என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். இதை அடுத்து அந்தத் தகவல் அரசருக்குச் சொல்லப்பட்டது. உடனே அரசர் தன்னுடைய யானையின் மீது ஏறி, அந்த இடத்திற்கு வந்தார். யானையின் மீது அமர்ந்தபடியே பாட்டியிடம், “தாயே.. உங்களுக்கு என்ன வேண்டும். நான் வந்து விட்டேன். வேண்டியதைக் கேளுங்கள்” என்றார். அதற்கு அந்த மூதாட்டி, “அரசே.. எனக்கு நீதான் வேண்டும்” என்றார். அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. “தாயே.. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.. அதைத் தெளிவாகக் கூறுங்கள்” என்றார் “மன்னா.. எனக்கு இந்தப் பொருள்காட்சியில் இருக்கும் எந்தப் பொருளும் தேவையில்லை. எனக்கு நீதான் வேண்டும். நான் உனது தாயாக வேண்டும். உன்னை என் மகனாக அடைந்தால், நான் இந்த நாட்டையே அடைந்தவளாக ஆகிவிடுவேன்” என்றார். அதைக் கேட்ட அரசர், அந்த மூதாட்டியின் கோரிக்கையை ஏற்று, அவரைத் தன்னுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அவரது கடைசி காலம் வரை அவரை எந்தக் குறையும் இல்லாமல் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார் அரசர்.
இங்கே அரசர் என்பவர் கடவுள். அவர், தான் படைத்த மக்களுக்காக இந்த உலகத்தில் ஏராளமான பொருள்களையும், பணம், பதவி, ஆட்சி, அதிகாரம் என எல்லாவற்றையும் படைத்திருக்கின்றார். பலர் கடவுள் படைத்த பொருள்களைக் கண்டு மயங்கி அவற்றில் இன்பத்தைப் பெறத்துடிக்கின்றனர். ஆனால் வெகு சிலரே இந்த உலகத்தைப் படைத்த கடவுளை அடைய வழி தேடுகின்றனர். இப்படிப்பட்ட பக்திக்கு ‘அனன்ய பக்தி’ என்று பெயர். இது இறைவனைத் தவிர வேறு எதையும் கேட்காத பக்தியாகும். இதன் அடிப்படையில் பார்க்கின்றபோது, தான் இம்மண்ணுலகில் மட்டுமே அரசர் என்பதையும், ஆனால் ஆண்டவாராம் கடவுளோ மண்ணுலகுக்கும் விண்ணுலகுக்கும் அரசர் என்பதையும் மிகவும் தாழ்மையான மனதுடன் ஏற்றுக்கொண்டு அவரை மட்டுமே என்றும் வாழும் தனது ஒப்பற்ற அரசராகத் தேர்ந்துகொள்கின்றார் தாவீது. அதனால்தான், "கடவுளே! நீர் பவனி செல்வதை, என் கடவுளும் அரசருமானவர் தூயகத்தில் பவனி செல்வதை, அனைவரும் கண்டனர்" என்றும், "மாபெரும் சபை நடுவில் கடவுளைப் போற்றுங்கள்; இஸ்ரயேலர் கூட்டத்தில் ஆண்டவரை வாழ்த்துங்கள்" என்றும் கூறி கடவுளைப் போற்றி மகிமைப்படுத்துகின்றார். இங்கே கடவுள் பவனி செல்வதை மக்கள் அனைவரும் கண்டதாகக் கூறுகின்றார். அப்படியென்றால், தனது அன்பராம் கடவுள் ஓரிடத்தில் மட்டுமே தங்காமல் மக்களுடன் மக்களாகப் பவனி வருபவர் என்றும், அவர் மிகுந்த சுறுசுறுப்புடனும், ஆற்றலுடனும், வலிமையுடனும், வல்லமையுடனும் பூவுலகு முழுதும் பயணிப்பவர் என்றும் எடுத்துரைக்கின்றார் தாவீது. அடுத்து, "முன்னால் பாடகரும் பின்னால் இசைக்கருவிகளை வாசிப்போரும், நடுவில் தம்புரு வாசிக்கும் பெண்களும் சென்றனர்" என்று கூறும் தாவீதின் வார்த்தைகள் உடன்படிக்கைப் பேழை எருசலேமுக்குக் கொண்டுவரப்பட்டபோது நிகழ்ந்தவற்றை நமக்கு நினைவூட்டுகிறது. அப்பகுதியை இப்போது வாசிப்போம். தாவீது அனைத்து இஸ்ரயேலிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பதாயிரம் பேரை மீண்டும் ஒன்றுதிரட்டினார். தாவீதும் அவரோடு இருந்த மக்கள் அனைவரும் கடவுளின் பேழையைக் கொண்டுவர, பாலை யூதாவுக்குச் சென்றனர். இது கெருபுகளின்மீது வீற்றிருக்கும் படைகளின் ஆண்டவர் பெயரால் அழைக்கப்படுகிறது. குன்றின்மீது இருந்த அபினதாபின் இல்லத்திலிருந்து கடவுளின் பேழையை ஒரு புதிய வண்டியில் வைத்துக்கொண்டு வந்தார்கள். அபினதாபின் புதல்வர்கள் உசாவும் அகியோவும் அப்புது வண்டியை நடத்திவந்தார்கள். குன்றின்மீது இருந்த அபினதாபின் இல்லத்திலிருந்து கடவுளின் பேழையை அவர்கள் கொண்டு வந்தார்கள். அகியோ பேழைக்கு முன்னால் சென்றான். தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் தேவதாரு மரத்தாலான இசைக்கருவிகளோடும், யாழ், வீணை, சுரமண்டலம், மேளம், தாளம் ஆகியவற்றோடும் ஆண்டவருக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டு வந்தனர். (காண்க. 2 சாமு 6:1-5) இதன்பிறகு ஆண்டவரின் பேழை எருசலேமிற்கு உடனே கொண்டுவரப்படவில்லை. அங்கிருந்து கித்தியனான ஓபேது ஏதோமின் இல்லத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கே மூன்று மாதங்கள் வைக்கப்பட்டது. அதன்பிறகுதான், ஆண்டவரின் பேழை அங்கிருந்து எருசலேம் திருநகருக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது, ஆண்டவரின் பேழையை ஏந்தியவர்கள் ஆறு அடிகள் எடுத்து வைத்ததும் தாவீது ஒரு காளையையும் ஒரு ஆட்டுக் கிடாயையும் பலியிட்டார். மேலும் நார்ப்பட்டால் நெய்யப்பட்ட ஏபோத்தை அணிந்துகொண்டு, தாவீது தம் முழு வலிமையோடு ஆண்டவர் முன்பாக நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத்தோடும் எக்காள முழக்கத்தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள் (வச.13-15). ஆக, இந்நிகழ்வை மீண்டும் நினைவுகூரும் விதமாகத்தான், "மாபெரும் சபை நடுவில் கடவுளைப் போற்றுங்கள்; இஸ்ரயேலர் கூட்டத்தில் ஆண்டவரை வாழ்த்துங்கள்" என்றும் பாடுகின்றார் தாவீது.
இரண்டாவதாக, "அதோ! இளையவன் பென்யமின், அவர்களுக்கு முன்னே செல்கின்றான்; யூதாவின் தலைவர்கள் கூட்டமாய்ச் செல்கின்றார்கள்; செபுலோன் தலைவர்களும் நப்தலியின் தலைவர்களும் அங்குள்ளார்கள்" என்று உரைக்கின்றார் தாவீது அரசர். அவரது ஆட்சியின் தொடக்கத்தில் யூதாவிற்கும் பென்யமீனுக்கும் இடையே நீண்ட போர் நடந்து வந்தது. ஆனால் அதன்பின்பு அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து தங்களின் பொது எதிரிகள் மீது கொண்ட வெற்றியைக் குறித்து மகிழ்ந்தார்கள். இதன் காரணமாகவே, தாவீது அரசர் மேற்கண்டவாறு கூறுகின்றார். அதனைத் தொடர்ந்து, செபுலோன் மற்றும் நப்தலி குலங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றார் தாவீது. வடக்கு நோக்கி அமைந்துள்ள இவ்விரு குலங்களும் சிரியர்கள் மற்றும் அவர்களைத் துன்புறுத்திய பிற அண்டை நாடுகளின் ஊடுருவல்களுக்கு அதிகம் ஆளாகியிருக்கலாம், எனவே அவர்கள் மீதான இந்த வெற்றிகளுக்கு ஒரு குறிப்பிட்ட முறையில் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பியதால்தான், "செபுலோன் தலைவர்களும் நப்தலியின் தலைவர்களும் அங்குள்ளார்கள்" என்று தாவீது உரைக்கின்றார். ஆகவே தாவீதைப் போன்று, ஆண்டவராம் கடவுள் நமக்குப் பல்வேறு சூழல்களில் உதவியுள்ளதை நினைவுகூர்ந்து அவருக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். இவ்வருளுக்காக இந்நாளில் மான்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்