எதிர்நோக்கை உருவாக்கியுள்ள அமைதிக்கான விண்ணப்பம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் முன் தோன்றி வழங்கிய முதல் உரையிலும் அதனைத் தொடர்ந்த உரைகளிலும் அமைதிக்கான விண்ணப்பத்தை அதிகமாக வலியுறுத்தியுள்ளார் என்றும், இது மக்கள் இதயத்தில் எதிர்நோக்கினை உருவாக்கியுள்ளது என்றும் எடுத்துரைத்தார் ஆயர் Nikolaj Gennad'evič Dubinin.
மே 22, வியாழன் புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த நேர்காணலின்போது இவ்வாறு கூறிய இரஷ்யாவின் மோஸ்கா உயர்மறைமாவட்ட துணை ஆயர் Nikolaj Gennad'evič Dubinin அவர்கள், ஆயுதங்களை அமைதிப்படுத்துவதற்கான திருத்தந்தையின் அழைப்பு மிக முக்கியமானது என்றும் எடுத்துரைத்தார்.
திருத்தந்தையாகப் பணியேற்கும் திருப்பலி நிகழ்வில் ஆற்றிய மறையுரையின்போது ஏறக்குறைய 8 முறையாவது ஒன்றிப்பு என்ற வார்த்தையைத் திருத்தந்தை அவர்கள் பயன்படுத்தினார் என்று எடுத்துரைத்த ஆயர் அவர்கள், இது திருஅவைக்கு மட்டுமல்லாது அகில உலக முழு திருஅவைக்கும் ஒரு முக்கியமான அறிவுரையாகத் திகழ்கின்றது என்றும் கூறினார்.
உரையாடல், ஒற்றுமை மறைப்பணி ஆகியவை பற்றிய திருத்தந்தையின் பிற கருத்துக்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் தொடர்ந்து பின்பற்றுபவர் திருத்தந்தை 14-ஆம் லியோ என்பதை எடுத்துரைக்கின்றன என்றும், மக்களுக்கு மிகுந்த ஆறுதலையும் புதிய உத்வேகத்தையும் இது ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார் ஆயர் Nikolaj.
இளமையாகவும், சுறுசுறுப்பாகவும், மனித மாண்பில் மிகவும் விருப்பம் கொண்டவராகவும் இருக்கும் ஒரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுத்ததில் இரஷ்ய மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்றும், மக்களின் இதயங்களைத் திறக்கத் தெரிந்த திறந்த நல்இதயம் கொண்ட ஒரு மனிதராக புதிய திருத்தந்தைக் கருதப்படுகிறார் என்றும் எடுத்துரைத்தார் ஆயர் Nikolaj.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்