வன்முறைகள் எப்போதும் தோல்வியை மட்டுமே தரும்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டு வரும் மோதல்கள் மற்றும் துப்பாக்கிச்சண்டைகள் குறித்து மக்களிடம் அச்சம் நிலவுகின்றது என்றும், வன்முறை எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா நேரங்களிலும் தோல்வியை மட்டுமே ஏற்படுத்துகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார் கப்புச்சின் சபை அருள்பணியாளர் Qaisar Feroz.
காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் ஏப்ரல் 22, அன்று வன்முறையாளர்கள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் அதன் விளைவாக இந்திய பாகிஸ்தான் மக்களிடையே ஏற்பட்டு வரும் அச்சம் ஆகியவை குறித்து பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்கு இவ்வாறு பதிலளித்துள்ளார் Signis பாகிஸ்தான் அமைப்பின் தலைவரும், பாகிஸ்தான் ஆயர் பேரவையின் சமூக தொடர்பு ஆணைய நிர்வாகச் செயலாளர் அருள்பணி கெய்சர் ஃபெரோஸ் (OFM)
அமைதி வார்த்தைகளும், பகுத்தறிவும் மக்களின் நன்மையைப் பற்றிய சிந்தனையின் அடிப்படையில் உரையாடல்களும் நமக்குத் தேவை என்று வலியுறுத்தியுள்ள அருள்பணியாளர் ஃபெரோஸ் அவர்கள், வன்முறை எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா நேரங்களிலும் தோல்வியை மட்டுமே ஏற்படுத்துகின்றது என்றும் கூறியுள்ளார்.
அமைதிக்கான உரையாடல்கள் மற்றும் செபங்கள் கத்தோலிக்கர்களால் அதிகமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன என்றும் வன்முறையில் ஈடுபடுவதை விடுத்து அமைதிக்கான முயற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ள அருள்பணி ஃபெரோஸ் அவர்கள், போர் வருவதற்கான அபாயமாக மக்கள் இச்சூழலைக் கருதுகின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், நாட்டு மக்களின் பாதுகாப்பு சார்ந்த போர்க்கால ஒத்திகையை மேற்கொள்ள இந்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வருகின்ற மே 7, புதன்கிழமை இந்தப் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், மே 7ஆம் தேதி தொடங்கி மே 9ஆம் தேதி வரை பயிற்சி தொடரும் என்றும் இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்