MAP

திருவிவிலியத்தை கையில் வைத்துள்ள குழந்தைகள் திருவிவிலியத்தை கையில் வைத்துள்ள குழந்தைகள்  

குழந்தைகளுக்கான திருவிவிலியத்தின் சிறப்புப் பதிப்பை வெளியிடுகிறது

ACN எனப்படும் தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் அமைப்பு உரோமையில் இடம்பெறவிருக்கும் குடும்பங்களின் யூபிலி விழாவின்போது மரியா லோசானோ அவர்கள் எழுதிய "குழந்தைகளுக்கான திருவிவிலியத்தின் சிறப்புப் பதிப்பினை வெளியிட இருக்கிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மே மாதம் 30 முதல் ஜூன் மாதம் 1 வரை உரோமையில் இடம்பெறவிருக்கும் குடும்பங்கள், குழந்தைகள், தாத்தா பாட்டி மற்றும் முதியோர்களின் யூபிலியின் ஒரு பகுதியாக, கடந்த 1979-ஆம் ஆண்டில் முதலில் வெளியிடப்பட்ட  குழந்தைகளுக்கான திருவிவிலியத்தின் சிறப்புப் பதிப்பினை ACN எனப்படும் தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் அமைப்பு மீண்டும் புதுப்பித்து வெளியிட இருப்பதாக செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மே 31, சனிக்கிழமையன்று, புனித ஜான் இலாத்தரன் பெருங்கோவிலில் இடம்பெறவிருக்கும் முக்கிய நிகழ்வில், குடும்ப விழா மற்றும் திருவிழிப்பு இறைவேண்டலின்போது அதன் பங்கேற்பாளர்களுக்கு இத்தாலி, ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு மற்றும் போர்த்துகீசியம் ஆகிய ஐந்து மொழிகளில் 10,000 திருவிவிலியப் பிரதிகளை விநியோகிக்கும் என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

45 ஆண்டுகளுக்குப் பிறகு, குழந்தைகளுக்கான திருவிவிலியத்தின் வடிவமைப்பைப் புதுப்பிக்க முடிவு செய்துள்ள இவ்வமைப்பு, வாசகர்களால் மிகவும் விரும்பப்படும் அம்சங்களில் ஒன்றான அசல் விளக்கப்படங்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன என்றும், இப்புதிய பதிப்பு இப்போது முழு பக்க வடிவத்தில் மிகவும் நவீனமான மற்றும் பார்வையை ஈர்க்கும் தளவமைப்போடு தோற்றமளிக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

குழந்தைகளுக்கான திருவிவிலியம் 190-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதுடன், உலகளவில் 5 கோடியே 10 இலட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 மே 2025, 12:13