MAP

என் ஆயன் ஆண்டவர் என் ஆயன் ஆண்டவர்  

பாஸ்கா காலம் 4-ஆம் ஞாயிறு : தியாகமேற்கும் நல்லாயர்களாய் வாழ்வோம்

மக்கள் பணிகளால் தம் தலைமைப் பணியை அலங்கரித்துக் கொண்ட நல்லாயனாம் இயேசுவின் வழியில், நாமும் தியாகமேற்கும் நல்லாயர்களாய் வாழ்ந்திடுவோம்.
‘தியாகமேற்கும் நல்லாயர்களாய் வாழ்வோம்’

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I. திப 13: 14, 43-52 II. திவெ 7: 9, 14b-17  III. யோவா 10: 27-30)

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமையை இன்று நாம் கொண்டாடுகின்றோம். நம் அன்னையாம் திருஅவை இஞ்ஞாயிறை 'நல்லாயன் ஞாயிறு' என்று சிறப்பிக்கின்றது. தலைமைப்பொறுப்பில் உள்ளவர்கள் ஆடுகளாகிய மக்களின் துயரங்களை அறிந்த ஆயர்களாக வாழ்வதற்கு இன்றைய வாசகங்கள் அழைப்புவிடுக்கின்றன. ஒருநாள் சாலையோரமாக இருந்த மரத்தடி நிழலில் சிறுவன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவனுடைய கையில் அப்போதுதான் மேலிருந்து கீழே தவறி விழுந்து, சிறகு முறிந்துபோன ஒரு பறவை இருந்தது. சிறுவன் தன் கையிலிருந்த அந்தச் சிறகு முறிந்துபோன பறவையை வாஞ்சையோடு தடவிக்கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அந்த வழியாகப் பெண் ஒருவர் வந்தார். இயல்பிலேயே இரக்கக்குணம் நிறைந்த அவர், மரத்தடியில் சிறுவன் அமர்ந்திருப்பதையும் அவனுடைய கையில் சிறகு முறிந்துபோன பறவை ஒன்று இருப்பதையும் கண்டார். சிறுவனின் அருகே சென்ற அந்தப் பெண், ``தம்பி! உன் கையிலிருக்கும் சிறகு முறிந்துபோன இந்தப் பறவையை என்னிடம் தருகிறாயா? அதை நான் வீட்டுக்குக் கொண்டுபோய், அதற்கு மருத்துவம் பார்த்து, அது குணமடைந்ததும் உன்னிடமே திரும்பவும் கொடுத்துவிடுகிறேன்” என்றார். அதற்கு அந்தச் சிறுவன் அவரிடம், ``வேண்டாம் அம்மா! இந்தப் பறவையை நானே பார்த்துக்கொள்கிறேன், ஏனென்றால், இந்தப் பறவையை என்னைவிட சிறப்பாக வேறு யாராலும் கவனித்துக்கொள்ள முடியாது’’ என்றான். ``உன்னைப்போல அந்தப் பறவையை வேறு யாராலும் அவ்வளவு சிறப்பாகக் கவனித்துக்கொள்ள முடியாது என்று எதை வைத்துச் சொல்கிறாய்’’ என்று அவர் கேட்க, சிறுவன் மெல்ல எழுந்து நின்றான். அப்போதுதான் அந்தச் சிறுவனின் ஒரு கால் ஊனம் என்பதை அவர் கவனித்தார். அவருக்குக் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. இருந்தாலும் அதை அடக்கிக்கொண்டு, ``ஆமாம் தம்பி! நீ சொல்வதும் சரிதான். இந்தப் பறவையை உன்னைவிட வேறு யாராலும் அவ்வளவு சிறப்பாகக் கவனித்துக்கொள்ள முடியாது’’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

ஓர் உண்மையான ஆயருக்கு அல்லது தலைவனுக்கு இருக்கவேண்டிய முதன்மையான தகுதி என்பது, துன்புறும் சக மனிதரின் துன்பத்தை தன்னுள் ஏற்று, அவர்களுடைய துன்பத்தை இன்பமாக மாற்ற முயல்வதே ஆகும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, மக்களின் துன்பத்தைத் தன்னுடைய துன்பமாகவே ஏற்கும் ஒரு நல்ல ஆயராக வாழ்ந்தார்  அது மட்டுமன்றி, அவர்களுடைய துன்பத்தைப் போக்க தன் உயிரைக் கையளிப்பதற்கும் துணிந்து முன்வந்தார். இப்படியாக இயேசு பரிவிரக்கம் கொண்ட ஒரு நல்லாயனாகத் திகழ்ந்தார். “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” (மத் 11:28-30) என்ற இயேசுவின் வார்த்தைகள், அவர் ஒரு நல்ல ஆயர் என்பதற்குச் சான்றாக அமைகின்றன. இப்படிப்பட்ட நல்லாயனின் அன்பு மக்களாய் வாழ்வதில் நாம் பெருமிதம் கொள்வோம். இன்றையப் பதிலுரைப் பாடலும், “நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்” என்கிறது (காண்க. திபா 100:3).

இஸ்ரயேல் மக்களின் நல்லாயராக இறைத்தந்தை

பழைய ஏற்பாடு நூல்கள் முழுவதும் இறைத்தந்தை தான் தேர்ந்துகொண்ட மக்களின் உண்மை ஆயராக இருப்பதைப் பார்க்கின்றோம். எடுத்துக்காட்டாக, வயது முதிர்ந்த நிலையில் இருந்த யாக்கோபிடம் ஆசி பெற, யோசேப்பு தனது இரு பிள்ளைகள் எப்ராயிம் மற்றும், மனாசேக்கை அழைத்துக்கொண்டு வருகிறார். அப்போது முதலில் யோசேப்புக்கு ஆசி வழங்கும் யாக்கோபு, “என் தந்தையரான ஆபிரகாமும் ஈசாக்கும் எந்தக் கடவுள் திருமுன் நடந்து வந்தனரோ அந்தக் கடவுளே இன்று வரை என் வாழ்நாள் முழுவதும் எனக்கு ஆயராக விளங்கி வருகிறார். (காண்க. தொநூ 48:15) என்று உரைக்கின்றார். தாவீது அரசரும், ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார் (காண்க. திபா 23:1-3) என்று பாடுகிறார்.

ஆடுகளைப் பலிகொடுக்கும் ஆயர்கள்

தன்னை நம்பி இருக்கும் மக்களாகிய ஆடுகளைக் காப்பாற்ற இன்றைக்கு எத்தனை ஆயர்கள் தயாராக இருக்கிறார்கள்? ஆடுகளை முன்னால் அனுப்பி பலிகொடுத்துவிட்டு பின்னால் இருந்துகொண்டு கூப்பாடு போடுகிற ஆயர்கள்தாம் இன்று நம் மத்தியில் அதிகம். ஆடுகளைப் பலிகொடுத்து தங்களின் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவே  விரும்புகின்றனர் இன்றைய ஆயர்கள். ஆட்சி, அதிகாரம், ஆள்பலம், ஆடம்பரம், செல்வாக்கு, ஆகியவற்றில்தான் அவர்களின் ஒட்டுமொத்த கவனமும் குவிந்திருக்கின்றது. ஆனால் பணிவு, எளிமை, ஏழ்மை, இரக்கம், பிறரன்பு, தியாகம் ஆகிய தலைமைத்துவத்துக்குரிய நற்பண்புகளை அவர்களிடத்தில் அதிகம் பார்க்க முடிவதில்லை. சுகபோகமான வாழ்வும், சுருட்டுகின்ற குணமும் அவர்களின் வாழ்வில் மொத்தமாக ஒட்டிக்கொண்டிருக்கின்றன. புலித் தோலைப் போர்திக்கொண்டு ஆடுகளை வேட்டையாடும் இரக்கமற்ற அரக்கமனம் கொண்ட ஆயர்களாகவே வாழ்கின்றனர்.

இவ்வாறுதான் பழைய ஏற்பாட்டின் காலத்திலும் நிகழ்ந்தது. சாலமோன் அரசருக்குப் பிறகு இஸ்ரயேல் மக்களை ஆட்சிசெய்த அரசர்கள் அவர்களை மிகவும் கொடுமையாக நடத்தினர். இதனைக் கண்டு வேதனையுற்ற கடவுள், இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக அவர்களைக் கடுமையாகக் கண்டித்தார். "தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; தாங்களே மேய்ந்துகொள்ளும் இஸ்ரயேலின் ஆயர்களுக்கு ஐயோ கேடு! ஆயர்கள் மந்தையையன்றோ மேய்க்க வேண்டும்! நீங்கள் கொழுப்பானதை உண்டு, ஆட்டு மயிராடையை உடுத்தி, மந்தையில் சிறந்ததை அடிக்கிறீர்கள். மந்தையையோ மேய்ப்பதில்லை. நீங்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தவில்லை; பிணியுற்றவற்றிற்குக் குணமளிக்கவில்லை. காயமுற்றவற்றிற்குக் கட்டுப்போடவில்லை; வழிதப்பியவற்றைத் திரும்பக் கூட்டி வரவில்லை. காணாமல் போனவற்றைத் தேடவில்லை. ஆனால், அவற்றைக் கொடுமையுடனும் வன்முறையுடனும் நடத்தினீர்கள். ஆயன் இல்லாமையால் அவை அலைந்து திரிந்தன. அப்போது எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் அவை இரையாயின" (காண்க. எசே 4:1-5) என்று வேதனைப்பொங்க உரைப்பதைப் பார்க்கின்றோம்.

இயேசுவே நிலைவாழ்வளிக்கும் ஆயர்

ஓர் ஆயர் என்பவர் மக்களுக்காகத் தனது இன்னுயிரையே இழக்கக்கூடியவராக இருக்க வேண்டும். இயேசு அதனை நிரூபித்துக்காட்டினார். உயிர்த்தியாகமின்றி தலைமைத்துவம் சிறக்காது. ஆனால் இன்றையச் சூழலில், தங்களைத் தலைவர்களாகக் காட்டிக்கொள்ளும் பலர் எவ்விதத் தியாகமும் செய்யாமலேயே தலைவர்களாகிவிட வேண்டுமென விரும்புகின்றனர். நல்ல ஆயர்கள் துயருறும் மக்களுக்காக வெறுமனே அனுதாபப்படாமல் அவர்களுடைய நிலையில் தன்னைப் பொருத்திப் பார்த்து பிரச்சனையை அணுகுவார்கள். அதிகாரத்தின் வழியாகப் பிறரைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலமாட்டார்கள். அனைத்து நற்காரியங்களுக்கும் கட்சிபேதமின்றி ஒத்துழைப்பு நல்குவார்கள். புதிய சூழலில், பலவிதமான மனிதர்களோடு இணைந்து செயல்படுவார்கள். இன்றைய நற்செய்தியில், தன்மீது நம்பிக்கைகொள்ளாமலும், அவரது உண்மையான  தலைமைத்துவத்தைப் புரிந்துகொள்ளாமலும் இருந்த யூதர்களுக்கு, தான் ஒரு நல்ல ஆயர் என்பதை விளக்க முயல்கிறார் இயேசு. ‘ஆட்டுக் கொட்டில்’ பற்றிய உவமை வழியாக, தான் அனைவருக்கும் நிலைவாழ்வு அளிக்க வந்த ஆயர் என்பதை அவர் எடுத்துக்கூறியும் கூட அவர்களின் மந்தமான மனநிலை மாறாத காரணத்தாலேயே நல்லாயர் பற்றிய கருத்துக்களை மீண்டும் அவர்களுக்கு வலியுறுத்திக் கூறுகின்றார். மேலும் இப்படிப்பட்ட மனநிலை கொண்ட அவர்கள் தனது மந்தையை சேர்ந்தவர்கள் அல்ல என்பதையும் துணிவுடன் எடுத்துக்காட்டுகின்றார். ஆனால் அதேவேளையில், "என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன, அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன், அவற்றை எனது கையிலிருந்தும் எனது தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ள முடியாது, நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” (வச. 27-30) என்று தனக்கு செவிசாய்க்கும் ஆடுகளின் நற்பண்புகள் குறித்தும், ஓர் ஆயரின் பொறுப்புணர்வு குறித்தும் எடுத்துக்காட்டுகிறார் இயேசு.

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் நாளன்று, இத்தாலியிலுள்ள சிலிசியாவின் அர்மினிய கத்தோலிக்க வழிபாட்டு முறையின் ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது தலைமைத்துவம் குறித்து அவர்களுக்கு வழங்கிய படிப்பினைகள் மிகவும் நம் கருத்தில் கொள்ளத்தக்கவை. அவர் கூறியவற்றில் ஒருசிலவற்றை இப்போது நம் உள்ளத்தில் இருத்துவோம். "உங்கள் அன்பான மக்களின் குழந்தைகளுக்கு ஆயர்களாகிய உங்களின் உடனிருப்புத் தேவைப்படுகிறது. ஆகவே தனிமையும் ஒதுக்கப்படுதலும் நிறைந்த இவ்வுலகில், நம் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டவர்கள் நல்ல மேய்ப்பரின் நெருக்கத்தையும், சொந்த தந்தைக்குரிய நம் அக்கறையையும், உடன்பிறந்த உறவின் அழகையும், கடவுளின் கனிவிரக்கத்தையும் உணர்வதை நாம் உறுதி செய்ய வேண்டும். உங்கள் திருஅவைக்கு நாளைய ஆயர்களை வழங்குவது, ஆயர் பேரவையின் மிகப்பெரிய பொறுப்புகளில் ஒன்றாக இருப்பதால் அவர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். அப்போதுதான், அவர்கள் மந்தைக்குத் தங்களை முழுதுமாக அர்ப்பணிப்பவர்களாகவும், மேய்ப்புப் பணியில் உண்மையுள்ளவர்களாகவும், தனிப்பட்ட சுயநல இலட்சியத்தால் ஆட்கொள்ளப்படாதவர்களாகவும் இருப்பார்கள். ஓர் ஆயர் என்பவர், புதிய பணிகளையும் அல்லது, பதவி உயர்வுகளையும் பெறுவதற்காக அவர் நேரத்தை வீணடிக்கும்போது, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மேய்ப்புப் பணிக்குரிய செயல்களில் அவர் அக்கறைகாட்ட மறக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். ஆயர்கள் சந்தையில் வாங்கப்படுவதில்லை; கிறிஸ்துவே அவர்களைத் தம்முடைய திருத்தூதர்களின் வழித்தோன்றல்களாகவும், அவருடைய மந்தையின் மேய்ப்பர்களாகவும் தேர்ந்தெடுக்கிறார். அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், இருபால் துறவியர், மற்றும், உங்கள் திருச்சபையின் அனைத்து விசுவாசிகளுடனும் இணைந்த நிலையில், நீங்கள் ஆற்றவேண்டிய பெரியதொரு பொறுப்பு உங்களுக்கு உள்ளது. வெறுப்பு, பிரிவு, வன்முறை மற்றும் பழிவாங்கும் இருளைப் பெரும்பாலும் விரும்பும் இவ்வுலகில், நீங்கள் கிறிஸ்தவ இறைவாக்கின் கதிர்களைப் ஒளிரச்செய்ய அழைக்கப்பட்ட ஒரு விடியலாகத் திகழ்கிறீர்கள். நமது இன்றைய உலகில், குருமாணவர்கள் மற்றும் துறவு வாழ்வில் உருவாகி வருபவர்கள் யாவரும், இன்று எப்பொழுதையும் விட, பதவியைப் பெறத்தூண்டும் எந்தவொரு ஆசையிலிருந்தும் விலகி, ஓர் உண்மையான கிறிஸ்தவ வாழ்வுக்குரியவற்றில் உறுதியாக இருக்க வேண்டும்"

நல்ல தலைவர் நல்ல கண்ணு

ஐயா நல்ல கண்ணு அவர்கள் கடந்த 2024-ஆம் ஆண்டு, டிசம்பர் 26-ஆம் நாளன்று, தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினார். 85 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியையே எப்போதும் தனது தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னலமற்ற தகைசால் தமிழர் என்றால் அது மிகையாகாது. தனது முதிர்ந்த வயதில் தனக்குக் கட்சி கொடுத்த 1 கோடி ரூபாய் நிதியையும் மக்கள் பணியாற்ற கட்சிக்கே திருப்பிக் கொடுத்தவர். தனக்கு வரும் பரிசுகளையும் நன்கொடைகளையும் கட்சிக்கும் நற்பணிகள் ஆற்றிடவும் வழங்கியவர். தனது நலன்களுக்கென்று அவர் எப்போதும் கட்சியிலிருந்து சொந்தமாக ஒரு பைசா கூட எடுத்தவர் அல்ல. 10 வயதிலே போராட களத்திற்கு வந்தவர் அவர். சுதந்திரத்திற்காக சிறை சென்றிருக்கின்றார், அடிவாங்கி இருக்கின்றார், அதற்கான தழும்புகள் அவரது முகத்தில் உள்ளன. சுதந்திர இந்தியாவில் ஒரு கம்யூனிஸ்டாக அவர் போராடினார். எங்கெல்லாம் மக்கள் பாதிக்கபட்டார்களோ அங்கெல்லாம் போராடினார். தமிழகத்தில் அவர் பங்குபெறாத போராட்டமே இல்லை. அதில் பல வெற்றியும் பெற்றன‌. சாதி ஒழிப்பு முதல் பல போராட்டங்களை நடத்தியவர் அவர். ஏராளமான புத்தகங்களையும் எழுதியிருக்கின்றார். அகில இந்திய அளவில் பெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என அறியப்பட்டாலும், மிக எளிய வாழ்க்கையே வாழ்பவர்.  இன்றும் அவருக்கு கார் கிடையாது. எந்தவொரு கூட்டத்திற்கும் ‘ஆட்டோவில்தான் செல்கின்றார். அரசியலில் கையூட்டுப் பெற்றவர்’ எனக் கூற முடியாத அளவிற்கு ஓர் அப்பழுக்கற்ற மனிதராக வாழ்ந்து வருகிறார். தியாகி ஓய்வூதியம் உட்பட சொற்ப வருமானமே பெறுகிறார். ஒருமுறை சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளதின்போது மக்களுடன் சேர்ந்து மாடியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மீட்புப் படையினர், "ஐயா, நீங்கள் முதலில் வாருங்கள், உங்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்கிறோம்" என்று அழைத்தனர். ஆனால் அவரோ, "நீங்கள் முதலில் மக்களைக் காப்பற்றி பாதுகாப்பாக நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். கடைசியில் வந்து என்னைக் கூட்டிச் செல்லுங்கள். அதுவரையிலும் நான் இங்கேயே இருக்கிறேன்" என்று கூறிவிட்டார். ஆனால் மீட்புப் படையினர் எவ்வளவோ வற்புறுத்தியும் கூட அவர் முதலில் செல்ல மறுத்துவிட்டார். அவர் மக்களுக்கான தலைவர் என்பதற்கு இதுவொரு சிறந்த எடுத்துகாட்டு. இப்படி இன்னும் எத்தனையோ நல்ல தலைவர்கள் நல்லாயர்களாக நம்மத்தியில் வாழ்ந்து சென்றுள்ளனர் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. ஆகவே, மக்கள் பணிகளால் தன் தலைமைப் பணியை அலங்கரித்துக் கொண்ட நல்லாயனாம் இயேசுவின் வழியில், நாமும் தியாகமேற்கும் நல்லாயர்களாய் வாழ்ந்திடுவோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறையருள்வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 மே 2025, 10:48