அரசின் உதவிகள் இல்லையென்றாலும் திருஅவைப் பணிகள் தொடரும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
குழந்தைகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான பணிகளை அமெரிக்க ஐக்கிய நாட்டு ஒன்றிய அரசுடன் இணைந்து ஆற்றுவது குறித்த ஒப்பந்தங்களை புதுப்பிக்கப் போவதில்லை என அந்நாட்டு ஆயர்கள் அறிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்காகவும் புலம்பெயர்ந்தோருக்காகவும் ஒன்றிய அரசுடன் இணைந்து பணியாற்றும் ஒப்பந்தங்களை புதிப்பிக்கப் போவதில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவிப்பதாகக் கூறும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் கத்தோலிக்க ஆயர்கள், வன்முறைகளிலிருந்தும் சித்ரவதைகளிலிருந்தும் அடைக்கலம் தேடும் நம் சகோதர சகோதரிகளை குடியமர்த்தும் திருஅவையின் திட்டங்களுக்கு மறுப்புத் தெரிவித்து, அதற்கு வேறு வழிகளைத் தேடுமாறு ஒன்றிய அரசு கட்டாயப்படுத்தியதைத் தொடர்ந்து, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அரசால் அனுமதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த மக்களை குடியமர்த்த ஓரளவு உதவிகளை அரசிடமிருந்து தலத்திருஅவை பெற்று வந்த நிலையில், தற்போது அரசின் நிதியுதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், அரசுடனான ஒத்துழைப்பு ஒப்பந்தமும் புதுப்பிக்கப்படவில்லை எனக் கூறும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் திமோத்தி ப்ரோலியோ அவர்கள், இதுவரை ஆற்றிவந்த பணிகளைத் தொடர வேறு நிதியுதவிகளை தலத்திருஅவை தேட வேண்டியுள்ளது என உரைத்தார்.
புலம் பெயர்ந்து அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் நுழைந்த மக்களைக் குடியமர்த்த அரசின் நிதியுதவிகள் குறைவாக இருந்தாலும், கத்தோலிக்க சமூகங்களே பெரிய அளவில் இதுவரை உதவி வந்த நிலையில், தற்போது அரசின் அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட்டதால், பொதுமக்களின் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகிறது என்றார் பேராயர் ப்ரோலியோ.
கடந்த 50 ஆண்டுகளாக அரசின் நிதியுதவியுடன், புலம்பெயர்ந்த மக்களை குடியமர்த்தும் பணிகளை ஆற்றிவந்த தலத்திருஅவை, அப்பணிகளை அப்படியேக் கைவிட முடியாது, ஏனெனில், எங்கு தேவையோ அங்கெல்லாம் நம்பிக்கையைக் கொணர வேண்டிய நிலையில் இருக்கும் திருஅவை பொதுமக்களின் உதவியுடன் இப்பணிகளைத் தொடர திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ப்ரோலியோ அழைப்பு விடுத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்