நாடு விளிம்பு நிலையில் உள்ளதாக உகாண்டா ஆயர்கள் எச்சரிக்கை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உகாண்டாவின் கத்தோலிக்க ஆயர்கள், வளர்ந்து வரும் அரசியல் மற்றும் சமூக நிலைத்தன்மையற்ற நிலையை நிவர்த்தி செய்யுமாறு நாட்டுத் தலைவர்களை வலியுறுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அதேவேளை, நாடு ஒரு ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக, 2026 -ஆம் ஆண்டுத் தேர்தல்களுக்கு முன்னதாக, வன்கொடுமை, ஊழல், அதிகார முறைகேடு, சமத்துவமின்மை மற்றும் அதிகரித்து வரும் அரசியல் வன்முறை போன்ற பிரச்சனைகளையும் இவ்வறிக்கையில் முன்னிலைப்படுத்தியுள்ளனர் ஆயர்கள்.
அதிகாரத்தைத் தேடுவதை விட பொது நன்மைக்காகச் சேவை செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள ஆயர்கள், நீதி, உரையாடல் மற்றும் தார்மீக ஒருமைப்பாடு ஆகியவற்றின் மதிப்பீடுகளின்படி வாழ்வதற்கும் அழைப்பு ஒன்றையும் விடுத்துள்ளனர்.
மேலும் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை அமைதி, பொறுப்புக்கூறல் மற்றும் பொது நன்மையை ஊக்குவிக்க அழைப்பு விடுத்துள்ள ஆயர்கள், அதேவேளை, மெத்தனம், பழங்குடிவாதம் மற்றும் அரசியல் வன்முறைக்கு எதிராகவும் எச்சரித்துள்ளனர்.
உகாண்டாவின் எதிர்காலம் இன்று செய்யப்படும் தேர்வுகளைப் பொறுத்தது என்பதை உணர்ந்து, அனைத்து உகாண்டா மக்களும் உண்மையையும் தேசிய ஒற்றுமையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தங்கள் அறிக்கையை நிறைவு செய்துள்ளனர் ஆயர்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்