தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் யூபிலி திருப்பயணம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கம் தனது இளைஞர் உருவாக்க பணியின் ஒரு பகுதியாக இந்த யூபிலி ஆண்டு கொண்டாட்ட தவக்காலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு திருப்பயணம் மேற்கொண்டது.
சமூக நீதிப் போராளியான இளைஞர் இயேசுவைப் போல இறை வேண்டலுடன் சேர்த்து சமூக நீதி போராட்டங்கள் நடைபெற்ற இடங்களுக்கு ஏப்ரல் மாதம் 5, 6 ஆகிய இரண்டு நாட்கள் மேற்கொண்ட இந்த திருப்பயணம் மதுரை மறைமாவட்டம் சமயநல்லூரில் உள்ள புனித யோசேப்பு கோவிலில் இருந்து தொடங்கி டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற பகுதிகளை பார்வையிட்டது.
"இது போன்று சமூக நீதி போராட்டங்களில் ஈடுபட்டவர்களை தேடி வந்து எங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு சாதி மதம் கடந்து உடன் பயணிக்க விரும்பும் இளைஞர்கள் குறித்து மிக்க மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது" என போராட்ட குழுவை ஒருங்கிணைத்த திரு. செல்வராஜ் கூறினார்.
திருப்பரங்குன்றம் மலையில் இரு வேறு மதங்களின் வழிபாட்டு தலங்கள் இருப்பினும் அனைத்து மக்களும் ஒற்றுமையாக தங்களின் கடவுளை வணங்கி வந்த நிலையில், அண்மையில் இந்த ஒற்றுமையை குலைக்க சில மதவாத இயக்கங்கள் முயன்ற இடத்தையும் சென்று பார்வையிட்டனர் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தினர்.
இரண்டாம் நாளில் கொடைக்கானலில் உள்ள தூய அன்னாள் சபை சகோதரிகளின் சில்வா விடுதியில் நற்கருணை ஆராதனையோடு தொடங்கிய தியானத்தில் இயேசு எவ்வாறு எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடினார் என்பது பற்றி இளைஞர் இயக்கத்தின் இயக்குனர் அருள்பணி எடிசன் அவர்கள் விளக்கமளித்தார். பின்னர் நடைபெற்ற இளைஞர் சிலுவைப்பாதையில் இயேசுவின் பாடுகளோடு நிகழ்கால சமூக நீதி போராளிகளான இயேசுசபை அருள்பணி ஸ்டேன் சுவாமி, புனித ஆஸ்கர் ரொமேரோ போன்றவர்களின் வாழ்க்கையையும் தியானித்ததோடு, திருப்பலி மறையுரை வேளையில் இளையோர் தங்களது கள அனுபவம் பற்றியும் அதன்வழி உண்மைக் கிறிஸ்தவர்களாக வாழ ஏற்பட்ட உந்துதல் பற்றியும் பகிர்ந்து கொண்டனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்