MAP

சூடானில் போரால் பாதிப்பு சூடானில் போரால் பாதிப்பு   (AFP or licensors)

சூடானில் அமைதிக்கான நீண்டகால ஆதரவும் முதலீடும் அவசியம்!

சூடானில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், தேவையான அமைதியை உருவாக்கவும் பாதுகாக்கவும், மோதலைத் தூண்டக்கூடிய நிதி அல்லது இராணுவ ஆதரவை பிற நாடுகள் வழங்குவதைத் தடுக்கவும் தேசிய மற்றும் அனைத்துலக அமைதி செயல்முறைகளில் தீவிரமான தூதரக உறவுகளுக்கான முதலீடு நமக்குத் தேவை : ஜேம்ஸ் வானி

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"ஒரு மனிதத்தன்மையற்ற மோதலுக்கு மத்தியில், சூடான் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வறுமை மற்றும் இறப்பின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர்” என்று கூறினார் ஜூபாவை தளமாகக் கொண்டு செயல்படும் தெற்கு சூடானுக்கான கிறிஸ்தவப் பிறரன்பு நிறுவனத்தின் இயக்குநர் ஜேம்ஸ் வானி.

சூடானில் நிகழ்ந்துவரும் மோதலின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இலண்டனில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாமி ஆப்பிரிக்க ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மூத்த பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய பிறகு இவ்வாறு தனது கருத்தை வெளிப்படுத்தினார் வானி.

“இது சூடான் மட்டுமல்ல, கொடூரமான வன்முறையிலிருந்து தப்பிக்க 10 இலட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் மற்றும் திரும்பி வந்தவர்கள் தெற்கு சூடானுக்குள் எல்லையைக் கடந்து சென்றுள்ளனர்” என்று தனது கவலையை வெளிப்படுத்திய வானி அவர்கள், “கிறிஸ்தவப் பிறரன்பு அமைப்பின் உள்ளூர் துணைவர்கள் 1,00,000-க்கும் மேற்பட்ட மக்களுக்குப் பணம், அவசரகால பொருட்கள் மற்றும் தண்ணீர் மற்றும் நலவாழ்வு வசதிகளை வழங்கியுள்ளனர்” என்றும் குறிப்பிட்டார்.

"கடந்த நவம்பரில் சூடான் மற்றும் தெற்கு சூடானுக்கு இங்கிலாந்து அரசு அறிவித்த நிதி வரவேற்கத்தக்கது என்றாலும், அந்நாட்டிற்கான அதனின் நீண்டகால ஆதரவுத் தேவைப்படுகிறது” என்று சுட்டிக்காட்டிய வானி அவர்கள், “வளர்ச்சி செலவினங்களைக் குறைப்பதற்கான இங்கிலாந்து அரசின் முடிவு, அதற்குப் பதிலாக நிச்சயமற்றத் தன்மையை உருவாக்கியுள்ளது” என்றும் எடுத்துக்காட்டினார்.

“முக்கியமாக, சூடானில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், தேவையான அமைதியை உருவாக்கவும் பாதுகாக்கவும், மோதலைத் தூண்டக்கூடிய நிதி அல்லது இராணுவ ஆதரவை பிற நாடுகள் வழங்குவதைத் தடுக்கவும் தேசிய மற்றும் அனைத்துலக அமைதி செயல்முறைகளில் தீவிரமான தூதரக உறவுகளுக்கான முதலீடு நமக்குத் தேவை” என்றும் கூறினார் வானி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 ஏப்ரல் 2025, 15:01