சூடான் போர் உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த இரண்டு ஆண்டுகளாக சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே தொடர்ந்து இடம்பெற்று வரும் மோதல்கள், அங்கு மிகப்பெரும் நெருக்கடி நிலைகளை ஏற்படுத்தியுள்ளன என்று கவலை தெரிவித்துள்ளன காரித்தாஸ் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.
இப்போரால் 5 கோடியே 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று உரைக்கும் அதன் அறிக்கைகள், இச்சூழலால் பரவலான வறுமை ஏற்பட்டுள்ளது என்றும், 1 கோடியே 3 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளன.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அமைதிப் பேச்சுவார்த்தைகளை வலியுறுத்துவதற்காக இலண்டனில் இடம்பெற்ற அனைத்துலக மாநாடு ஒன்றில், சூடானில் அமைதியை மீட்டெடுக்க உலகளாவிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்துலகக் காரித்தாஸ் அமைப்பும் அதன் தோழமை அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நெருக்கடிகள் குறித்த உண்மைத் தகவல்களை உடனுக்குடன் கொடுக்கும் நிலையில் அங்குள்ள ஊடகங்கள் இல்லை என்றும், இப்போரால் அண்டை நாடுகளும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன என்றும் தெரிவிக்கும் அவற்றின் அறிக்கைகள், ஏறத்தாழ 40 இலட்சம் சூடானியர்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளதால் மனிதாபிமான நெருக்கடிகள் அங்கு மிகவும் மோசமாக அதிகரித்துள்ளதாகவும் எடுத்துக்காட்டுகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்