MAP

புலம்பெயர்ந்தோர் புலம்பெயர்ந்தோர்   (ANSA)

ஜெர்மன் புலம்பெயர்ந்தோர்க்கு வழிகாட்டுதல் வழங்கும் அருள்சகோதரி

எதிர்காலம் கடவுளின் கைகளில் உள்ளது, நாம் அனைவரும் அவரது பணியில் ஈடுபட்டிருக்கின்றோம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

புலம்பெயர்ந்தோர் அனைவரும் தாங்கள் இருக்கும் நிலையிருந்து மீண்டு, நல்ல பாதையை நோக்கிச் செல்ல விரும்புகின்றார்கள் என்றும், சூழல்கள் எதுவும் மாறாது என்றாலும், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஆலோசனைகளைக் கேட்டுத் தன்னம்பிக்கையுடனும் மனநிறைவுடனும், நன்றியுணர்வுடனும் செல்கின்றார்கள் என்றும் கூறியுள்ளார் அருள்சகோதரி சாந்த்ரா.

ஜெர்மனியில் புலம்பெயர்ந்தோருக்கு ஆற்றிவரும் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் பணிகள் பற்றியக் கருத்துக்கள் குறித்து ஏப்ரல் 7, திங்கள் கிழமை, வத்திக்கான் செய்திகளிடத்தில் பகிர்ந்து கொண்டபோது இவ்வாறு தெரிவித்துள்ளார் அருள்சகோதரி சாந்த்ரா.

பின்தங்கிய சூழலில் வாழும் மக்களுக்கு கிறிஸ்துவின் போதனைகளையும் அது தரும் ஆற்றலையும் பகிர்ந்து கொள்ளுதல், திருநற்கருணையில் இயேசுவின் சகோதரிகள் சபையின் முக்கியமான பணிகளில் ஒன்று என்றும், காலத்தின் அறிகுறிகளை அடையாளம் காணவும், சில சமயங்களில், புதிய பொறுப்புகளைக் காணவும் நமக்குத் தொடர்ந்து சவால் விடுகிறது என்றும் கூறியுள்ளார் அருள்சகோதரி சாந்த்ரா.

புலம்பெயர்ந்தோர் தாங்கள் ஒதுக்கப்பட்டதாக கருதும் இடங்களில் பயம் அதிகரித்ததால், அருள்சகோதரிகள் புலம்பெயர்ந்தோர்க்காக பணியாற்றுவதைத் தங்களது வாழ்வின் தனிவரமாக மாற்றி அவர்களுக்குப் பணியாற்றினர் என்றும், நிச்சயமற்ற எதிர்காலம், பயம், நிராகரிப்பு, அதிகப்படியான கோரிக்கைகள், பணித்தடைகளின் சுமை, முறையற்ற கல்வி, பிரிவு, அதிர்ச்சி, மொழி, கலாச்சாரம், தவறான புரிதல்கள், போன்றவற்றை புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்கின்றனர் என்றும் கூறியுள்ளார் சகோதரி சாந்த்ரா.

எதிர்காலம் கடவுளின் கைகளில் உள்ளது, நாம் அனைவரும் அவரது பணியில் ஈடுபட்டிருக்கின்றோம் என்று வலியுறுத்தியுள்ள அருள்சகோதரி சாந்த்ரா அவர்கள், திருநற்கருணையில் இயேசுவின் சகோதரிகள் சபையினர் வாழும் திருநற்கருணை முன்பாக அமர்ந்து அதன்படி தங்களது வாழ்வையும் பணியையும் அர்ப்பணித்து வாழ்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது ஆன்மிக ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை நாடுபவர்களை வலுப்படுத்தவும், அறிவூட்டவும், அவர்களின் கண்ணோட்டத்தை மாற்றவும், அவர்களின் சூழ்நிலையை ஆழமாகப் புரிந்துகொள்வதன் வழியாக அவர்கள் செயல்படத் தகுதியுள்ளவர்களாக மாற உதவவும் தான் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் எடுத்துரைத்துள்ளார் அருள்சகோதரி சாந்த்ரா.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 ஏப்ரல் 2025, 13:28