விவிலியத் தேடல் : திருப்பாடல் 68-5, இறைவனே நமக்கு மீட்பளிப்பவர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில் 'சீயோன் மலையே ஆண்டவரின் உறைவிடம்!' என்ற தலைப்பில் 68-வது திருப்பாடலில் 11 முதல் 18 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 19 முதல் 23 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளை அமைதிநிறைந்த உள்ளமுடன் வாசிப்போம். “ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக் கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு. நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்; நம் தலைவராகிய ஆண்டவர்தாம் இறப்பினின்று விடுதலை தர வல்லவர். அவர் தம் எதிரிகளின் தலையை உடைப்பார்; தம் தீய வழிகளில் துணிந்து நடப்போரின் மணிமுடியை நொறுக்குவார். என் தலைவர், ‛பாசானிலிருந்து அவர்களை அழைத்து வருவேன்; ஆழ்கடலிலிருந்து அழைத்து வருவேன். அப்பொழுது உன் கால்களை இரத்தத்தில் தோய்ப்பாய்; உன் நாய்கள் எதிரிகளிடம் தமக்குரிய பங்கைச் சுவைக்கும்’ என்று சொன்னார்” (வச 19-23).
நாம் தியானிக்கும் இந்த ஐந்து இறைவார்த்தைகளும் மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டுள்ளன. முதலாவதாக, “ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக் கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு. நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்; நம் தலைவராகிய ஆண்டவர்தாம் இறப்பினின்று விடுதலை தர வல்லவர்" என்கின்றார் தாவீது அரசர். இந்த இறைவார்த்தைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக இப்போது கதை ஒன்றிற்குச் செவிமடுப்போம். “கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. தன்னுடைய தூதர்களை அனுப்பாமல் ஏன் அவரே நேரடியாக வரவேண்டும்?” என்று பேரரசர் அக்பர், தன் ஆலோசகரான பீர்பாலைப் பார்த்து ஒருமுறை கேட்டார். அதற்கு பீர்பால், “இதற்கு உடனே விடை கூற முடியாது, சில நாட்கள் கழித்து கூறுகிறேன்” என்று கூறினார். சில நாட்களுக்குப்பின் ஒரு மாலையில், பீர்பாலுடன் படகு சவாரிச் செய்யத் திட்டமிட்டிருந்தார் அக்பர். படகுத்துறைக்கு சிறிது காலதாமதமாக வந்த பீர்பால், கையில் ஒரு கனமான துணியில் ஒரு குழந்தையை பொதிந்து எடுத்து வந்திருந்தார். 'அது என்ன கையில்', என அக்பர் கேட்க, பீர்பாலோ, 'சக்ரவர்த்தி அவர்களே!, இது உங்கள் பேரன்தான். நம்மோடு வர வேண்டும் என அடம்பிடித்து அழுதான். அதுதான் அவனை சமாதானப்படுத்தி அழைத்துவர நேரமாகிவிட்டது. இரதத்தில் வரும் வழியில் தூங்கிவிட்டான்' எனப் பதிலளித்தார். படகு ஆழமான பகுதியில் சென்றபோது, சற்றும் எதிர்பாராதத் தருணத்தில், அக்பரின் பேரனை, பீர்பால், கங்கை நதியில் தூக்கி எறிந்தார். ஆத்திரம் மேலிட அக்பர் உடனே ஆற்றில் குதித்து, தனது பேரனைக் காப்பாற்றினார். ஆனால், அது குழந்தையல்ல, ஒரு குழந்தை பொம்மை. பீர்பாலை பார்த்து “முட்டாளே! ஏன் இக்காரியத்தைச் செய்தாய்?” என கோபமாகக் கேட்டார் அக்பர். அதற்கு பீர்பால், “பேரரசே! உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். குழந்தை தண்ணீரில் விழுந்த பொழுது, படைத் தளபதியையோ, என்னையோ, மற்ற வீரர்களையோ நோக்கி, ‘குழந்தையைக் காப்பாற்று’ என்று ஆணையிடாமல் நீங்கள் குதித்தது ஏன்?”, என்று கேட்டார். அதற்கு அக்பர் “குழந்தையைக் காப்பாற்றுவது என் கடமையா?, அல்லது, ஆணையிட்டுக் கொண்டிருப்பது பெருமையா?”, எனப் பதிலுக்குக் கேட்டார். பீர்பால் அமைதியாகக் கூறினார், “சக்ரவர்த்தி அவர்களே! நீங்கள் என்னிடத்தில், பக்தர்களைக் காக்க கடவுளே வருவது ஏன்? தூதர்கள் இல்லையா? என்று கேட்டீர்கள். எத்தனை பேர் இருந்தாலும், நீங்களே குழந்தையைக் காக்க நினைத்ததுபோல, ஆபத்து காலத்தில், இறைவனே முன்வந்து மக்களைக் காப்பார்” என்றார்.
தாவீது கூறும் மேற்கண்ட இறைவார்த்தைகளில் இறைவன் வழங்கும் மீட்பு என்பது எக்காலத்திற்கும் நிலையானது என்பதையும், அவர்தம் மக்களை அவர் எப்போதும், குறிப்பாக, அவர்களின் துன்ப துயரங்களின்போது இடைவிடாது தாங்கிக்கொள்கின்றார் என்பதையும் நமக்கு எடுத்தியம்புகிறது. அடுத்து, "நம் தலைவராகிய ஆண்டவர்தாம் இறப்பினின்று விடுதலை தர வல்லவர்" என்ற வார்த்தைகள் நமது இறப்பிற்குப் பிறகு எல்லாம்வல்ல கடவுள் நமக்கு வழங்கவிருக்கும் நிலைவாழ்வை அர்த்தப்படுத்துகிறது. இன்னும் சிறப்பாகச் சொல்லவேண்டுமெனில், தீமையிலிருந்து நன்மைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், இறப்பிலிருந்து வாழ்விற்கு நம்மை அழைத்துச் சொல்லக்கூடியவர் கடவுள் ஒருவர் மட்டுமே என்பதையும் இந்த வரிகளில் அமைந்துள்ள இறைவார்த்தைகள் நமக்குப் புலப்படுத்துகின்றன.
இரண்டாவதாக, "அவர் தம் எதிரிகளின் தலையை உடைப்பார்; தம் தீய வழிகளில் துணிந்து நடப்போரின் மணிமுடியை நொறுக்குவார்" என்கின்றார் தாவீது. இந்த இறைவார்த்தைகள் அவரது எதிரிகளைக் குறித்து அமைவதாக உள்ளது. இங்கே 'தலையை உடைப்பார்' என்பது ஆணவம், கர்வம், செருக்கு, திமிர் ஆகியவற்றைத் தங்களது கவசமாகக் கொண்டுள்ள அவர்களை இல்லாதொழிப்பார் அல்லது அழித்தொழிப்பார் என்று அர்த்தப்படுகிறது. இதுபோன்ற வார்த்தைகளைத் தாவீது பல்வேறு திருப்பாடல்களில் பயன்படுத்தியிருக்கின்றார். எடுத்துக்காட்டாக, "ஆண்டவரே, எழுந்தருளும்; என் கடவுளே, என்னை மீட்டருளும்; என் எதிரிகள் அனைவரையும் கன்னத்தில் அறையும்!" (திபா 3:7) என்றும், "என் உயிரைக் குடிக்கத் தேடுவோர், மானக்கேடுற்று இழிவடையட்டும்; எனக்குத் தீங்கிழைக்க நினைப்போர், புறமுதுகிட்டு ஓடட்டும். ஆண்டவரின் தூதர் அவர்களைத் துரத்திட, அவர்கள் வழி இருளும் சறுக்கலும் ஆகட்டும். ஏனெனில், காரணமின்றி எனக்குக் கண்ணி வைத்தனர்; காரணமின்றி எனக்குக் குழி தோண்டினர். அவர்களுக்கு அழிவு எதிர்பாராமல் வரட்டும்; அவர்களுக்கு வைத்த கண்ணியில் அவர்களே சிக்கிக் கொள்ளட்டும்; அவர்கள் தோண்டிய குழியில் அவர்களே விழட்டும்" (திபா 35:4, 6-8) என்று உரைக்கின்றார் தாவீது.
இந்த இறைவார்த்தைகள் அவரது வார்த்தைகள், தாவீது எப்படிப்பட்ட சூழலில் வாழ்ந்தார் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. மேலும் அவர் கூறும் "தம் தீய வழிகளில் துணிந்து நடப்போரின் மணிமுடியை நொறுக்குவார்" என்ற வார்த்தைகளில் 'மணிமுடி' என்பது அரசர்கள் தங்களின் தலைகளில் அணிந்துகொள்ளும் மகுடத்தைக் குறிப்பிடுவதாக நாம் உணர்ந்துகொள்ளலாம். ஆக, அவர்களின் மணிமுடியை நொறுக்குவது என்பது அவர்களை அவர்தம் அரசப் பதவியிலிருந்து அகற்றுவதைக் குறிப்பிடுகிறது. இது சவுல் மன்னரைக் குறிப்பிடுகின்றதா அல்லது இஸ்ரயேல் நாட்டைச் சுற்றியுள்ள எதிரி மன்னர்களைக் குறிப்பிடுகின்றதா என்பது தெரியவில்லை. ஆனாலும் தாவீது எதிரிகளின் கரங்களில் சிக்கித் தவித்திருக்கிறார் என்பது நமக்குத் தெரியவருகிறது.
இறுதியாக, "என் தலைவர், ‛பாசானிலிருந்து அவர்களை அழைத்து வருவேன்; ஆழ்கடலிலிருந்து அழைத்து வருவேன். அப்பொழுது உன் கால்களை இரத்தத்தில் தோய்ப்பாய்; உன் நாய்கள் எதிரிகளிடம் தமக்குரிய பங்கைச் சுவைக்கும்’ என்று சொன்னார்” என்று கூறுகின்றார். இங்கே 'பாசான் நாடு' என்பது யோர்தானுக்கு அப்பால் இருந்த நாட்டைக் குறிக்கிறது. அங்குதான் இஸ்ரயேல் மக்கள் சீகோனுடனும் ஓக்குடனும் போர் செய்தார்கள், அங்கிருந்து அவர்கள் அடுத்த முறை கானானுக்குச் சென்றனர். எனவே, இந்த வெற்றிக்குப் பின்பு அவர்களைப் பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குக் கடவுள் அழைத்துச் சென்றதைக் குறிக்கும் விதமாகவே இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார் தாவீது. மேலும், "ஆழ்கடலிலிருந்து அழைத்து வருவேன்" என்ற இறைவார்த்தைகள், எகிப்தில் அடிமைத்தளைகளில் உழன்றுவந்த இஸ்ரயேல் மக்களை விடுவித்து செங்கடலின் ஆழமான பகுதி வழியாக அழைத்து வந்ததை எடுத்துக்காட்டுகின்றது.
அடுத்து, "உன் கால்களை இரத்தத்தில் தோய்ப்பாய்; உன் நாய்கள் எதிரிகளிடம் தமக்குரிய பங்கைச் சுவைக்கும்" என்று கடவுள் சொன்னதாக உரைக்கின்றார் தாவீது. இந்த இறைவார்த்தைகள் தங்கள் எதிரிகள்மீது இஸ்ரயேல் மக்கள் பெறும் வெற்றியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. அதாவது, தங்கள் எதிரிகள் சிந்தும் இரத்தத்தில் இஸ்ரயேல் மக்கள் தங்களின் வெற்றியை நிலைநிறுத்துவார்கள் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம். அத்துடன், இந்த வார்த்தைகள் இறப்பிலிருந்து நிலைவாழ்வுக்குக் கடந்து செல்வதையும் அர்த்தப்படுத்துகிறது. குறிப்பாக, இது உலகின் முடிவில் நிகழும் பொதுத்தீர்வையையும் குறிப்பிடுகின்றது. எடுத்துக்காட்டாக, நெருப்பின்மேல் அதிகாரம் கொண்டிருந்த இன்னுமொரு வானதூதர் பலிபீடத்திலிருந்து வெளியே வந்தார். அவர் கூர்மையான அரிவாளை வைத்திருந்தவரிடம், “உமது கூர்மையான அரிவாளை எடுத்து மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்திடும்; ஏனெனில், திராட்சை கனிந்துவிட்டது” என்று உரத்த குரலில் கூறினார். ஆகவே, அந்த வானதூதர் மண்ணுலகின்மீது தம் அரிவாளை வீசி மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்தார்; கடவுளின் சீற்றம் என்னும் பெரிய பிழிவுக்குழியில் அவற்றைப் போட்டார். நகருக்கு வெளியே இருந்த அந்தப் பிழிவுக்குழியில் அவை மிதிக்கப்பட்டன. அந்தப் பிழிவுக்குழியிலிருந்து இரத்த வெள்ளம் ஏறத்தாழ இரண்டு மீட்டர் ஆழம், முந்நூறு கிலோ மீட்டர் தொலைக்குப் பாய்ந்தோடியது (திவெ 14:18-20) என்று திருவெளிப்பாடு நூலில் வாசிக்கின்றோம். மேலும் "உன் நாய்கள் எதிரிகளிடம் தமக்குரிய பங்கைச் சுவைக்கும்" என்று தாவீது கூறும் இறைவார்த்தைகள், பொதுவாகப் போர்களத்தில் போரின் முடிவில் கொல்லப்பட்ட எதிரிகளின் உடல்களை நாய்கள் தின்னும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. ஆகவே, எந்நாளும் நம்மைத் தாங்கி நமக்கு மீட்பு அளிப்பவர் நமது ஆண்டவராம் கடவுள் மட்டுமே என்பதை உணர்ந்து வாழ்ந்திடுவோம். தொடர்ந்து அவரதுத் தூய அன்பில் என்றும் நிலைபெற்று வாழ்ந்திட இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்