MAP

சீயோன் மலை சீயோன் மலை  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 68-4, சீயோன் மலையே ஆண்டவரின் உறைவிடம்!

அயராது கண்விழித்து இஸ்ரயேல் மக்களைப் பாதுகாத்த இறைவன் நம்மையும் கைவிடாது பாதுகாப்பார் என்ற ஆழமான மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அவரது இல்லத்திற்குச் செல்வோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 68-4, சீயோன் மலையே ஆண்டவரின் உறைவிடம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில் 'மகத்துவம் நிறைந்தது மறுவாழ்வுப் பணி!' என்ற தலைப்பில் 68-வது திருப்பாடலில் 9,10 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 11 முதல் 18 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளை பக்தி கமழும் மனதுடன் வாசிப்போம். “என் தலைவர் செய்தி அறிவித்தார்; அச்செய்தியைப் பரப்பினோர் கூட்டமோ பெரிது; ‛படைகளையுடைய அரசர்கள் ஓடினார்கள்; புறங்காட்டி ஓடினார்கள்’! வீட்டில் தங்கியிருக்கும் பெண்கள் கொள்ளைப்பொருள்களைப் பகிர்ந்து கொண்டார்கள். நீங்கள் தொழுவங்களின் நடுவில் படுத்துக்கொண்டீர்களோ? வெள்ளியால் மூடிய புறாச் சிறகுகளும், பசும்பொன்னால் மூடிய அதன் இறகுகளும் அவர்களுக்குக் கிடைத்ததே! எல்லாம் வல்லவர் அங்கே அரசர்களைச் சிதறடித்தபோது, சல்மோன் மலையில் பனிமழை பெய்தது. ஓ மாபெரும் மலையே! பாசானின் மலையே! ஓ கொடுமுடி பல கொண்ட மலையே! பாசானின் மலையே! ஓ பல முடி கொண்ட மலைத் தொடரே! கடவுள் தம் இல்லமாகத் தேர்ந்துகொண்ட இந்த மலையை நீ ஏன் பொறாமையோடு பார்க்கின்றாய்? ஆம், இதிலேதான் ஆண்டவர் என்றென்றும் தங்கி இருப்பார். வலிமைமிகு தேர்கள் ஆயிரமாயிரம், பல்லாயிரம் கொண்ட என் தலைவர் சீனாய் மலையிலிருந்து தம் தூயகத்தில் எழுந்தருள வருகின்றார். உயர்ந்த மலைக்கு நீர் ஏறிச் சென்றீர்; சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றீர்; மனிதரிடமிருந்தும் எதிர்த்துக் கிளம்பியவரிடமிருந்தும் பரிசுகள் பெற்றுக் கொண்டீர்; கடவுளாகிய ஆண்டவர் அங்கேதான் தங்கியிருப்பார்” (வச 11-18).

முதலில் “என் தலைவர் செய்தி அறிவித்தார்; அச்செய்தியைப் பரப்பினோர் கூட்டமோ பெரிது; ‛படைகளையுடைய அரசர்கள் ஓடினார்கள்; புறங்காட்டி ஓடினார்கள்’! வீட்டில் தங்கியிருக்கும் பெண்கள் கொள்ளைப்பொருள்களைப் பகிர்ந்து கொண்டார்கள். நீங்கள் தொழுவங்களின் நடுவில் படுத்துக்கொண்டீர்களோ? வெள்ளியால் மூடிய புறாச் சிறகுகளும், பசும்பொன்னால் மூடிய அதன் இறகுகளும் அவர்களுக்குக் கிடைத்ததே! எல்லாம் வல்லவர் அங்கே அரசர்களைச் சிதறடித்தபோது, சல்மோன் மலையில் பனிமழை பெய்தது" என்ற வார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இங்கே இறைவனின் வெற்றிக் குறித்துப் பேசுகிறார் தாவீது. எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரயேல் மக்கள் முதலில் செங்கடலைக் கடந்து சென்ற வேளையில் கரையில் செத்துக் கிடந்த எகிப்திய படை வீரர்களின் உடல்களைக் கடற்கரையில் கண்டு அச்சம் மேலிட்டவர்களாய்க் கடவுளின் அச்சத்திற்குக்குரிய செயல்களை எண்ணி வியக்கின்றனர் மற்றும் அவரையே தங்களுக்கு வெற்றியளித்த உன்னதத் தலைவராகக் கொண்டாடுகின்றனர். மேலும் கடவுளின் இந்த வெற்றிச் செய்தியைப் பரப்புகின்றனர். அப்பகுதியை இப்போது வாசிப்போம். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர் அனைவரும் கடலில் சென்று கொண்டிருக்க, ஆண்டவர் அவர்கள்மேல் கடல் நீர்த்திரளைத் திருப்பிவிட்டார். இஸ்ரயேல் மக்களோ கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர். இறைவாக்கினரும் ஆரோனின் தங்கையுமான மிரியாம் கஞ்சிரா ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டாள். பெண்டிர் அனைவரும் கஞ்சிரா கொட்டிக் கொண்டும் நடனமாடிக்கொண்டும் அவள்பின் சென்றனர். அப்போது மிரியாம், “ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றி பெற்றார்; குதிரையையும் குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்” என்று பல்லவியாகப் பாடினாள் (காண்க. விப 15:19-21).

இரண்டாவதாக, இஸ்ரயேல் மக்களை அச்சுறுத்தும் கோலியாத்தைக் கொன்றொழித்துவிட்டு சவுல் மன்னரிடம் திரும்புகின்றார் இளைஞானான தாவீது. அப்போது என்ன நிகழ்கிறது என்பதைக் காண்போம். தாவீது பெலிஸ்தியனைக் கொன்ற பின், வீரர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இஸ்ரயேலின் எல்லா நகர்களிலிருந்தும் பெண்கள் ஆடல் பாடலுடன் அரசர் சவுலை சந்திக்க வந்தனர். அவர்கள் கஞ்சிராக்களோடும் நரம்பிசைக் கருவிகளுடனும் மகிழ்ச்சிப் பாடல் எழுப்பினர். அப்பெண்கள் அப்படி ஆடிப்பாடுகையில் “சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார்” என்று பாடினார் (காண்க. 1 சாமு 18:6-7). இங்கே தாவீது பெற்ற வெற்றி என்பது இறைவன் பெற்ற வெற்றி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். காரணம், பெலிஸ்தியன் கோலியாத்தை தாவீது எதிர்கொள்கையில், “நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்; நானோ, நீ இகழ்ந்த இஸ்ராயேலின் படைத்திரளின் கடவுளாகிய, படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன்" (காண்க. 1 சாமு 17:45) என்று கூறும் தாவீதின் வார்த்தைகள் இதனை நமக்கு உறுதிப்படுத்துகின்றன. ஆக. இதனையெல்லாம் நினைவுகூர்ந்தவராக, "என் தலைவர் செய்தி அறிவித்தார்; அச்செய்தியைப் பரப்பினோர் கூட்டமோ பெரிது; ‛படைகளையுடைய அரசர்கள் ஓடினார்கள்; புறங்காட்டி ஓடினார்கள்’! வீட்டில் தங்கியிருக்கும் பெண்கள் கொள்ளைப்பொருள்களைப் பகிர்ந்து கொண்டார்கள்" என்று உரைக்கின்றார். அவ்வாறே, இயேசு சாவை வென்று வெற்றிவீரராய் உயிர்த்தெழுந்த செய்தியைப் பெண்களே முதலில் சென்று சீடர்களிடம் அறிவித்தனர் என்பதையும் இதனுடன் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம் (காண்க. மத் 28:8).

அடுத்து, "ஓ மாபெரும் மலையே! பாசானின் மலையே! ஓ கொடுமுடி பல கொண்ட மலையே! பாசானின் மலையே! ஓ பல முடி கொண்ட மலைத் தொடரே! கடவுள் தம் இல்லமாகத் தேர்ந்துகொண்ட இந்த மலையை நீ ஏன் பொறாமையோடு பார்க்கின்றாய்? வலிமைமிகு தேர்கள் ஆயிரமாயிரம், பல்லாயிரம் கொண்ட என் தலைவர் சீனாய் மலையிலிருந்து தம் தூயகத்தில் எழுந்தருள வருகின்றார். உயர்ந்த மலைக்கு நீர் ஏறிச் சென்றீர்; சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றீர்; மனிதரிடமிருந்தும் எதிர்த்துக் கிளம்பியவரிடமிருந்தும் பரிசுகள் பெற்றுக் கொண்டீர்; கடவுளாகிய ஆண்டவர் அங்கேதான் தங்கியிருப்பார்” என்கின்றார் தாவீது. இங்கே, ஆண்டவராம் கடவுள் நிலையாகத் தங்கியிருந்து அவர்தம் மக்களை ஆசீர்வதித்துக்கொண்டிருக்கும் சீயோன் மலையைத்தான் தாவீது குறிப்பிடுகின்றார் என்பதைப் புரிந்துகொள்வோம். மேலும் "சீயோனில் தங்கியிருக்கும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய செயல்களை மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்” (காண்க. திபா 9:11) என்றும், “ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார்” என்று கூறியதுடன் 'இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன்'" என்று கடவுள் கூறியதையும் (காண்க. திபா 132:13-14) வேறுசில திருப்பாடல்களிலும் எடுத்துரைக்கின்றார்.

மேலும் "வலிமைமிகு தேர்கள் ஆயிரமாயிரம், பல்லாயிரம் கொண்ட என் தலைவர் சீனாய் மலையிலிருந்து தம் தூயகத்தில் எழுந்தருள வருகின்றார்" என்ற தாவீதின் வார்த்தைகளில் உள்ளதொரு கருத்தை நம் உள்ளத்தில் உளாவாங்கிக்கொள்ள வேண்டும். அதாவது, கடவுளின் வானதூதர்களைத்தான் அவரது படைவீரராகக் குறிப்பிடுகின்றார் தாவீது. மேலும் இஸ்ரயேல் மக்கள் தங்கள் எதிரிகளால் அச்சுறுத்தப்பட்ட போதெல்லாம் கடவுள் தனது பெருந்திரளான வானதூதர்களை அனுப்பி அவர்களுக்கு வெற்றிகளைக் குவித்தார் என்பதும் நம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். நமதாண்டவர் இயேசுவின் வாழ்விலிருந்து  இதற்கோர் எடுத்துக்காட்டை நாம் தருவிக்கலாம். இயேசு கெத்சமனித் தோட்டத்தில் கைதுசெய்யப்படும் வேளை, இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், “உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர். நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே" (காண்க. மத் 26:51-53) என்று வாசிக்கின்றோம்.

வாதூதர்கள் யார்?

வானதூதர்கள் என்போர் மிகவும் சுறுசுறுப்பானவர்கள் மற்றும் கடவுளால் தனது தூதர்களாகவும், போர்வீரர்களாகவும், ஊழியர்களாகவும் பயன்படுத்தப்படுபவர்கள் என்று திருவிவிலியம் நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. "வானதூதர்" என்ற வார்த்தை "ஏஞ்சலோஸ்" (angelos) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. வானதூதர்கள் சதை மற்றும் எலும்புகள் இல்லாத ஆன்மிக மனிதர்கள், இருப்பினும் அவர்கள் மனித வடிவத்தில் தோன்றும் திறனைக் கொண்டுள்ளனர் (தொநூ 19:1-22). மேலும் அவர்கள் கடவுளைப் புகழ்ந்தனர் (திபா 103:20), உலகத்திற்குத் தூதர்களாகப் பணியாற்றினர் (லூக்1:11-20, 26-38; 2:9-14), கடவுளுடைய மக்களைப் பாதுகாத்தனர் (திபா 91:11-12), சில வேளைகளில் கடவுளின் நீதித் தீர்ப்பின் கருவிகளாகவும் செயல்பட்டனர் (மத். 49-13). இதன் காரணமாகவே, "தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்" (காண்க திபா 91:10-12) என்று உரைக்கின்றார் தாவீது.

ஆகவே, சீயோன் என்னும் திருமலையில் உறைந்திருக்கும் ஆண்டவராம் கடவுளிடம் நிலையான நம்பிக்கைக்கொள்வோம். தாவீது அரசர் கூறியதுபோன்று, அவரையே நமது அரணாகவும், கோட்டையாகவும், கற்பாறையாகவும், கேடயமாகவும், நம்பிக்கையாகவும், புகலிடமாகவும் கொள்வோம். என்னைக் காக்கும் கடவுள் என்னோடு இருக்க, எதைக் குறித்து நான் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று உறுதியான மனமுடன் சொல்வோம். அயராது கண்விழித்து இஸ்ரயேல் மக்களைப் பாதுகாத்த இறைவன் நம்மையும் கைவிடாது பாதுகாப்பார் என்ற ஆழமான மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அவரது இல்லத்திற்குச் செல்வோம். என்றென்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 ஏப்ரல் 2025, 12:58