MAP

சீனாய் மலையடிவாரத்தில் கடவுளின் திருப்பிரசன்னம் சீனாய் மலையடிவாரத்தில் கடவுளின் திருப்பிரசன்னம்  

விவிலியத் தேடல் : திருப்பாடல் 68-3, மகத்துவம் நிறைந்தது மறுவாழ்வுப் பணி!

நாமும் நம்மால் முடிந்த அளவிற்கு நோய்களாலும் பல்வேறு சமூகத் தீமைகளாலும் அடிமைத்தளையில் உழலும் மக்களுக்கு மறுவாழ்வுப் பணிகளை வழங்க முன்வருவோம்.

 

விவிலியத் தேடல்:திருப்பாடல் 68-3, மகத்துவம் நிறைந்தது மறுவாழ்வுப்பணி!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில் 'கடவுள் திக்கற்றப் பிள்ளைகளின் தந்தை!' என்ற தலைப்பில் 68-வது திருப்பாடலில் 5 முதல் 6 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிதோம். இவ்வாரம் 9,10 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறை ஒளியில் அவ்வார்த்தைகளை வாசிப்போம். “கடவுளே! நீர் உம்முடைய மக்கள் முன்சென்று பாலைவெளியில் நடைபோட்டுச் செல்கையில், சீனாயின் கடவுள் வருகையில், பூவுலகு அதிர்ந்தது; இஸ்ரயேலின் கடவுள் வருகையில் வானம் மழையைப் பொழிந்தது. கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்; வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர். உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன; கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர்" (வச. 9-10).

இன்று நாம் தியானிக்கும் இறைவசனங்களில் மூவிதமான கருத்துக்களை முன்மொழிகின்றார் தாவீது அரசர். முதலாவதாக, “கடவுளே! நீர் உம்முடைய மக்கள் முன்சென்று பாலைவெளியில் நடைபோட்டுச் செல்கையில், சீனாயின் கடவுள் வருகையில், பூவுலகு அதிர்ந்தது; இஸ்ரயேலின் கடவுள் வருகையில் வானம் மழையைப் பொழிந்தது" என்கின்றார். இங்கே பழைய ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றை நினைவுகூர்ந்து இவ்வாறு உரைக்கின்றார் தாவீது. எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடந்து சீனாய் மலையருகில் வந்தபோது, அங்கே ஆண்டவராம் கடவுளின் வருகை ஆற்றல் வாய்ந்ததாகவும், மக்களுக்குப் பேரச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது. அதனை மனத்தில்கொண்டுதான் தாவீது இவ்வாறு உரைக்கின்றார். சீனாய் மலையடிவாரத்தில் நிகழ்ந்தவற்றை இப்போது நம் மனக்கண்முன் கொண்டு வருவோம். 'மூன்றாம் நாள் பொழுது புலரும் நேரத்தில் பேரிடி முழங்கியது. மின்னல் வெட்டியது. மலைமேல் மாபெரும் கார்மேகம் வந்து கவிழ்ந்தது. எக்காளப் பேரொலி எழுந்தது. இதனால் பாளையத்திலிருந்த அனைவரும் நடுநடுங்கினர். கடவுளைச் சந்திப்பதற்காக மோசே மக்களைப் பாளையத்திலிருந்து வெளிவரச் செய்தார். அவர்களும் மலையடிவாரத்தில் வந்து நின்றார்கள். சீனாய் மலை முழுவதும் புகைந்து கொண்டிருந்தது. ஏனெனில், ஆண்டவர் அதன்மீது நெருப்பில் இறங்கி வந்தார். அதன் புகை தீச்சூளையிலிருந்து எழும் புகைபோல் தோன்றியது. மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. எக்காள முழக்கம் எழும்பி வர வர மிகுதியாயிற்று. மோசே பேசியபோது கடவுளும் இடிமுழக்கத்தில் விடையளித்தார். ஆண்டவர் சீனாய் மலைமேல் மலையுச்சியில் இறங்கி வந்தார். அப்போது ஆண்டவர் மோசேயை மலையுச்சிக்கு அழைக்க, மோசே மேலே ஏறிச்சென்றார் (காண்க. விப 19:16-20).

அடுத்து, "இஸ்ரயேலின் கடவுள் வருகையில் வானம் மழையைப் பொழிந்தது" என்ற தாவீதின் வார்த்தை பாலைநிலத்தில்  பசியால் வாடிய மக்களுக்கு மன்னா என்ற உணவை வானிலிருந்து பொழிந்ததை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன்" (காண்க. விப 16:4) என்று கூறியதாக நாம் வாசிக்கின்றோம். இதுமட்டுமன்றி, தாகத்தால் வாடிய இஸ்ரயேல் மக்களுக்குப் பாறையிலிருந்து ஆண்டவராம் கடவுள் தண்ணீர் அருளினார் அல்லவா? இதனையும் மனதில் கொண்டவராக தாவீது இவ்வாறு கூறியிருக்கலாம் என்றும் நாம் யூகிக்கலாம். 'ஆண்டவர் மோசேயிடம், “இஸ்ரயேல் தலைவர்கள் சிலரை உன்னோடு அழைத்துக்கொண்டு மக்கள் முன் செல்; நைல்நதியை அடித்த உன் கோலையும் கையில் எடுத்துக் கொண்டு போ. இதோ நான் அங்கே ஓரேபில் உள்ள பாறையில் உனக்குமுன் நிற்பேன். நீ பாறையை அடி; மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும்” என்றார். இஸ்ரயேல் தலைவர்கள் காண மோசே அவ்வாறே செய்தார்' (காண்க விப 17:5-6). மேலும் "அவர்கள் உண்பதற்காக மன்னாவை மழையெனப் பொழியச் செய்தார்; அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்" என்றும், அவர் இறைச்சியைத் துகள்துகளென அவர்கள்மீது பொழிந்தார்; இறகுதிகழ் பறவைகளைக் கடற்கரை மணலென வரவழைத்தார்" (காண்க. திபா 78:24,27) என்றும் தாவீது 78-வது திருப்பாடலில் உரைப்பது இதற்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

இரண்டாவதாக, "கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்; வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர்" என்று கூறுகின்றார் தாவீது. இவ்விடத்தில்  "மழைபொழியச் செய்தீர்" என்று அவர் குறிப்பிடுவது கானான் நாட்டைக் குறிப்பிடுகிறது. இந்நாட்டில் கடவுள் வழங்கவிருக்கும் அருள்வளங்களையும், செல்வச்செழிப்புகளையும் பற்றி குறிப்பிடுவதாக அமைந்துள்ளது.  "நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளுமாறு கடந்து சென்றடையவிருக்கும் நாடு, மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த நாடு; வானத்தின் மழை நீரையே குடிக்கும் நாடு! உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கண்காணிக்கும் நாடு! ஆண்டின் தொடக்கம் முதல் ஆண்டின் முடிவுவரை உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கண் காத்திடும் நாடு!" (காண்க. இச 11:11-12) என்று ஆண்டவராம் கடவுள் உரைப்பவற்றிலிருந்து நாம் அறிந்துகொள்கின்றோம். மேலும், "அவர் புல்வெளியில் பெய்யும் தூறலைப்போல் இருப்பாராக; நிலத்தில் பொழியும் மழையைப் போல் விளங்குவாராக" (காண்க. திபா 72:6) என்று மற்றுமொரு திருப்பாடலில் தாவீதும் உரைக்கின்றார்.   

மன்றாவதாக, "உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன; கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர்" என்று கூறுகின்றார் தாவீது. இங்கே "உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன" என்ற வார்த்தைகள், கடவுள் தனது அருள்மழையால் வளமாக்கிய கானான் நாட்டில் வாழும் அவர்தம் மக்களைக் குறிக்கின்றது. இறுதியாக, ஒடுக்கப்பட்டோருக்கு வாழ்வளித்த கடவுளை நல்லவர் என்கின்றார். இங்கே நல்லவர் என்பது எகிப்தில் அடிமைத்தளையில் உழன்ற மக்களைக் கண்ணுற்று, அவர்களுடன் இணைந்து துன்புற்று அவர்களுக்கு முழுவிடுதலை அளித்த செயலைத்தான் (காண்க. விப 3:7-10) இங்கே எடுத்துக்காட்டுகின்றார் தாவீது. ஓர் உண்மை நிகழ்வுடன் இவ்வார நமது விவிலியத்தேடல் நிகழ்ச்சியை நிறைவு செய்வோம்.

கடந்த 67 ஆண்டுகளாக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நடத்திவந்த சாந்தா அம்மாளின் மறைவு (19, ஜனவரி, 2021) மருத்துவ உலகம் மட்டுமன்றி அனைத்துத் துறையினரையும் பாதித்தது குறித்து செய்தித்தாள்கள் எழுதியிருந்தன. அவர் பலருக்கு மறுவாழ்வு வழங்கியவர் என்று போற்றப்படுகிறார். காரணம், புற்றுநோயும் அதனால் ஒதுக்கப்பட்டு வாழ்ந்த மக்களின் வாழ்வும் ஓர் அடிமை வாழ்வுபோலதான் இருந்தது. அதற்கொரு விடியலைக் கண்டவர் சாந்தா அம்மா என்றால், அது மிகையாகாது. இளம் வயதில் நன்றாகப் படித்த சாந்தா, தனது விருப்பப்படியே மருத்துவர் ஆனார். முதலில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றினார். பெரும் முயற்சிக்குப் பிறகு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் தொடங்கிய புற்றுநோய் நிறுவனத்தில் தானும் இணைந்தார். அதற்காகவே, அரசு மருத்துவர் பணியில் இருந்து விலகினார். 1954-ஆம் ஆண்டு, இரண்டு படுக்கை, இரண்டு மருத்துவர்கள் மற்றும் நான்கு ஊழியர்களுடன் ஒரு குடிசையில் தொடங்கப்பட்டதுதான் இந்தப் புற்றுநோய் நிறுவனம். புற்றுநோய்க்கான மேம்பட்ட சிகிச்சை முறைகளை வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தி, மத்திய மாநில அரசுகளுக்கு இணைப்புப் பாலமாகவும் இருந்தவர் சாந்தா அம்மாள். ஆயிரக்கணக்கான திறமையான மருத்துவர்களையும் செவிலியர்களையும் உருவாக்கி மருத்துவ ஆசிரியராகவும் திகழ்ந்தார். இப்படிப்பட்ட உ.யர்ந்ததொரு சேவையை செய்ய வேண்டும் என்பதற்காகவே, அவர் திருமணம் உள்ளிட்ட தனது தனிப்பட்ட நலன்களைத் தவிர்த்தார். முத்துலட்சுமி மற்றும் கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்குப் பிறகு, 1997-ஆம் ஆண்டு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவரானார் சாந்தா அம்மாள். புற்றுநோயாளர்களைக் குணப்படுத்துவதில் பெரும் முனைப்பு காட்டினார். அரசு மற்றும் தனியாரிடமிருந்து நிதியுதவி பெற்று, இந்தப் புற்றுநோய் நிறுவனத்தை அவர் படிப்படியாக விரிவுபடுத்தினார்.

மருத்துவ வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்தில், புற்றுநோய் வருவதற்கான காரணமும், உரிய சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களுக்கே அதிகம் தெரியவில்லை. இதனால், குழந்தைகள் உட்பட பலரும் உயிரிழப்பது அதிகமாக இருந்தது. அதைக் கண்டு பெரிதும் வருந்திய சாந்தா அம்மாள், உயரிய சிகிச்சை முறைகளைக் கற்றுக்கொண்டார். இன்று 130 மருத்துவர்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் ஆண்டுக்கு ஒன்றரை இலட்சம் பேர் சிகிச்சைபெறும் அளவுக்கு மிகப்பெரும் விருட்சமாக வேரூன்றி வளர்ந்துள்ளது இந்தப் புற்றுநோய் மருத்துவமனை. இத்தனை மாற்றங்களை நிகழ்த்திக் காட்டினாலும், எளிமை, எல்லோரிடமும் மென்மையாகப் பழகக்கூடிய தன்மை, முதுமையைப் பொருட்படுத்தாத இடைவிடாத உழைப்பு, அர்ப்பணிப்புடன் கூடிய மருத்துவச் சேவை ஆகியவைதான் டாக்டர் சாந்தாவின் 67 ஆண்டுக்கால பணியின் அடையாளங்கள். ஆசியாவின் உயரிய விருதான மகசேசே விருது, மற்றும் இந்தியாவின் உயரிய பத்ம விருதுகள் அனைத்தையும் வென்றவர். இந்தியாவின் உயரிய விருதான `பாரத ரத்னா' விருதையும் இவருக்கு வழங்குவதற்கு மத்திய அரசு பலமுறை முயன்றும் சாந்தா அதனைப் பெற மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தனக்குக் கிடைக்கும் பரிசு, பணம் உள்ளிட்ட அனைத்தையும் புற்றுநோய் நிறுவனத்துக்கே பயன்படுத்தினார். அதிகாலை 4.30 மணிக்கு எழுந்தால், இரவு 10 மணிவரை அவரது சிந்தனை எல்லாம் மருத்துவம் சார்ந்த பணிகளைப் பற்றிதான் இருக்கும். ஒரு வேலையைக் கையில் எடுத்து விட்டால் வெற்றி கிடைக்கும் வரை அவர் இடைவிடாமல் போராடுவார். மேலும் முதுமையைப் பொருட்படுத்தாமல், திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் புற்றுநோயாளர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கி வந்தார். தனது இலக்குப்படியே இறுதி மூச்சு வரை புற்றுநோய் நிறுவனத்துக்காகவே வாழ்ந்து மறைந்துள்ளார் சாந்தா அம்மாள்.

அன்னை தெரேசா, அன்னை ஐடா ஸ்கெடர் போன்றோரின் வழியில் அன்னை சாந்தாவும் மருத்துவப் பணிகள் வழியாக மக்கள் பலருக்கு மறுவாழ்வு வழங்கியுள்ளார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. கடவுளின் வழியில் மக்களுக்கு மறுவாழ்வு வழங்கும் அனைவருமே அவர்தம் அன்புக்குரிய மக்கள்தாம். ஆகவே, நாமும் நம்மால் முடிந்த அளவிற்கு நோய்களாலும் பல்வேறு சமூகத் தீமைகளாலும் அடிமைத்தளையில் உழலும் மக்களுக்கு மறுவாழ்வுப் பணிகளை வழங்க முன்வருவோம். இதற்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஏப்ரல் 2025, 10:33