MAP

பிலிப்பீன்ஸ் தேர்தல் பிரச்சாரங்கள் பிலிப்பீன்ஸ் தேர்தல் பிரச்சாரங்கள்  (ANSA)

தேர்தலை விவேகமுடன் சந்திக்க பிலிப்பீன்ஸ் ஆயர்கள் வேண்டுகோள்

பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி பிலிப்பீன்ஸில் துவக்கப்பட்ட தேர்தல் பிரச்சாரங்கள், பகைமை உணர்வுகளுக்கு வித்திட்டு விரோத பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது தலத்திருஅவை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இவ்வாண்டு மே மாதத்தில் பிலிப்பீன்சில் இடம்பெறவிருக்கும் இடைக்காலத் தேர்தலில், பகைமை விரோத பேச்சுக்களையும் பொய்ச் செய்திகளையும் கைவிட்டு அனைவரும் முன்மதியுடனும் விவேகத்துடனும் செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

சட்டமன்றத்திற்கும், தல அவைகளுக்கும் என 18 ஆயிரம் பேர் போட்டியிடும் மே 12ன் தேர்தல் குறித்து மக்களுக்கு வழிகாட்டல்களை வழங்கியுள்ள தலத்திருஅவை, ஏறக்குறைய 7 கோடி பிலிப்பீன்ஸ் மக்கள் பங்குபெறும் இந்த தேர்தலில் விவேகமுடன் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது அவசியம் என அழைப்புவிடுத்துள்ளது.

முன்னாள் அரசுத்தலைவர் Rodrigo Duterte அவர்களுக்கும் தற்போதைய அரசுத்தலைவர் Ferdinand Marcos ஜூனியர் அவர்களுக்கும் இடையேயான உடன்பாட்டின் கீழ் துத்ரெத்தேயின் மகள் சாரா துத்தெர்தே அவர்கள் துணை அரசுத்தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், இந்த இடைக்காலத் தேர்தல் தற்போதைய அரசுத்தலைவரின் ஆதரவை நிரூபிக்க உள்ளதாக நோக்கப்படுகிறது.

முன்னாள் அரசுத்தலைவர் துத்தெர்தே அனைத்துலக குற்றவியல் வழக்காடு மன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளதும், துணை அரசுத் தலைவர் சாராவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு பதவி நீக்கத்திற்கான முயற்சிகள் இடம்பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கன.

பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி துவக்கப்பட்ட தேர்தல் பிரச்சாரங்கள், பகைமை உணர்வுகளுக்கு வித்திட்டு விரோத பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக ஆழ்ந்த கவலையை வெளியிடும், பிலிப்பீன்சின் வாக்கெடுப்பிற்கு பொறுப்பான பங்குதள மேய்ப்புப்பணி அவை, கடவுள் பயம், நேர்மை, கல்வி ஆதரவு, ஒழுக்கம், உதவும் மனப்பான்மை, அக்கறை, பொதுநலனுக்கான அன்பு போன்றவைகளின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வுச் செய்யப்பட வேண்டுமேயொழிய பகை பேச்சுக்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்கள் வழியாக அல்ல என விண்ணப்பித்துள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட ஆயர்களின் மேய்ப்புப்பணி சுற்றறிக்கையும், சுதந்திரத்தையும் பொதுநலனையும் உயர்த்திப் பிடிக்கும் தலைவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஏப்ரல் 2025, 15:15