திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – ஆணை மடல் பகுதி 24
மெரினா ராஜ் – வத்திக்கான்
பாவம் அதன் அடையாளத்தை எப்போதும் விட்டுச்செல்கின்றது. அதன் விளைவுகளைக் கொண்டு வருகின்றது. வெளிப்புறமாக மட்டுமல்லாமல் உள்புறமாகவும் பாவத்தின் விளைவுகள் தீமையை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு பாவமும் மிகக்கொடியது, படைப்பிற்கும் அதிலுள்ள உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி ஆரோக்கியமற்ற சூழலை அது ஏற்படுத்துகின்றது. பாவங்களுக்குக் கழுவாயாக தூய்மைப்படுத்துதல் அவசியம். பூமியில் வாழும்போதும், இறப்பிற்குப் பின்னும், நரகத்திற்கு செல்லும்போதும் பாவத்திலிருந்து நம்மையே நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். மன்னிப்பு நிறைந்த அனுபவம் இதயத்தையும் மனதையும் மன்னிப்பதற்காக மட்டுமே திறக்கும். மன்னிப்பு கடந்த காலத்தை மாற்றாது, ஏற்கனவே நடந்ததை மாற்ற அதனால் முடியாது. ஆனால், மன்னிப்பு எதிர்காலத்தை மாற்ற உதவுகின்றது.
கடந்த சிறப்பு யூபிலி ஆண்டில் நிறுவப்பட்ட இறைஇரக்கத்தின் மறைப்பணியாளர்கள் ஒரு முக்கியமான பணியைச் செய்து வருகிறார்கள். திறந்த இதயத்துடனும் மனந்திரும்பிய ஆன்மாவுடனும் அவர்களிடம் பாவமன்னிப்பு பெற வரும் மக்களின் எதிர்நோக்கை மீட்டெடுத்து அவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கி வருகின்றார்கள். தொடர்ந்து நல்லிணக்கத்தின் கருவிகளாக இருக்கும் மறைப்பணியாளர்கள் இறைத்தந்தையின் இரக்கத்திலிருந்து வரும் நம்பிக்கை நிறைந்த இதயத்துடன் எதிர்காலத்தைப் பார்க்க மக்களுக்கு உதவுகின்றார்கள். சிறைச்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் மனித மாண்பு பாதிக்கப்படும் இடங்கள், மிகவும் பின்தங்கிய சூழ்நிலைகள், மிகப்பெரிய இழிவுபடுத்தும் சூழல்கள் போன்ற எதிர்நோக்கு சோதிக்கப்படும் இடங்களுக்கு மறைப்பணியாளர்களை அனுப்புவதன் வழியாக ஆயர்கள் தங்களது பணியின் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ளலாம். இதனால் கடவுளின் மன்னிப்பையும் ஆறுதலையும் பெறும் வாய்ப்பை யாரும் இழக்காமல் இருக்க நாம் உதவலாம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்