MAP

இறுதித்தீர்வை நாள் இறுதித்தீர்வை நாள் 

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 - ஆணை மடல் பகுதி 23

அன்பு நிறைந்த கடவுளின் தீர்ப்பு எப்போதும் அன்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.

மெரினா ராஜ் - வத்திக்கான

நிலை வாழ்வுடன் தொடர்புடைய மற்றொரு எதார்த்தம், நமது வாழ்வின் முடிவிலும் காலத்தின் முடிவிலும் வர இருக்கும் கடவுளின் நீதித்தீர்வை. காலத்தின் இறையியலைக் கருத்தில் ஏற்றுக்கொள்வதன் வழியாகவும், பார்ப்பவர் கண்களுக்கு ஒரு பிரமிப்பு உணர்வை வெளிப்படுத்துவதன் வழியாகவும் கலைகள் பெரும்பாலும் அதை முன்னிலைப்படுத்த முயற்சித்துள்ளது. சிஸ்டைன் சிற்றாலயத்தில் உள்ள மைக்கேல் ஆஞ்சலோவின் வண்ண ஓவியங்களின் வேலைப்பாட்டை நாம் நம் கவனத்தில் கொள்வோம். நமது இருப்பை மீண்டும் நினைவுபடுத்தும் நேரத்திற்கு மிகுந்த விழிப்புணர்வுடனும், தீவிரத்துடனும் நம்மை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. அதே நேரத்தில் நம்பிக்கையின் பரிமாணத்தில், நமது வாழ்க்கையை நிலைநிறுத்தி, பயத்தில் விழாமல் இருக்க அனுமதிக்கும் ஓர் இறையியல் நல்லொழுக்கமும் நமக்கு மிக அவசியமாகிறது. அன்பான கடவுளின் தீர்ப்பு எப்போதும் அன்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. மிகவும் தேவையிலிருப்பவர்களுக்கு அன்பு செலுத்துவதில் நாம் அதனை எப்படிக் கடைபிடிக்கின்றோம், அவர்களை எப்படி அன்பு செய்கின்றோம் என்பதன் அடிப்படையில் மட்டுமே நமக்கான நீதித்தீர்வை இருக்க முடியும், ஏனெனில் கிறிஸ்துவே அத்தகையோருக்கு நீதித்தீர்வை அளிப்பவராக இருக்கிறார்.

இந்த நீதித்தீர்வையானது, மனிதர்கள் மற்றும் பூமிக்குரிய நீதிமன்றங்களின் தீர்ப்பிலிருந்து வேறுபட்ட தீர்ப்பாகும்; இது கடவுளது அன்புடனும், இறைஇரக்கத்தின் புரிந்துகொள்ள முடியாத மறைபொருளில் தன்னுடனும், உள்ள உண்மை உறவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பாக திருவிவிலியத்தில் உள்ள சாலமோனின் ஞானநூல்கள், “நீதிமான்கள் மனிதநேயம் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்பதை இச்செயல்கள் வாயிலாக உம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்; நாங்கள் தீர்ப்பு வழங்கும்போது உமது நன்மையை நினைவுகூரவும், நாங்களே தீர்ப்புக்கு உள்ளாகும்போது உமது இரக்கத்தை எதிர்பார்க்கவும் இவ்வாறு செய்கிறீர். (சா.ஞானம் 12:19, 22) என்று எடுத்துரைக்கின்றன. மறைந்த திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் வலியுறுத்துவது போல,"நீதித்தீர்வை நேரத்தில், உலகத்திலும் நம்மிலும் உள்ள அனைத்து தீமைகளின் மீதும் அவருடைய அன்பு மேலோங்குவதை நாம் அனுபவித்து வரவேற்கிறோம். அன்பின் வலி நமது மீட்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாறுகிறது".

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 ஏப்ரல் 2025, 09:49