MAP

இத்தாலிய ஆயர் பேரவை கூட்டம் இத்தாலிய ஆயர் பேரவை கூட்டம் 

மியான்மாருக்கு இத்தாலிய ஆயர்களின் உடனடி உதவி

அவசரகால நிலையை எதிர்நோக்கிவரும் மியான்மார் நாட்டின் உடனடி மீட்புத் தேவைகளுக்கு உதவும் வகையில் துவக்கத் தவணையாக ஐந்து இலட்சம் யூரோக்களை இத்தாலியத் தலத்திருஅவை அனுப்பியுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மார்ச் மாதம் 28ஆம் தேதி இடம்பெற்ற நில அதிர்ச்சியால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள மியான்மார் மக்கள் மற்றும் அதன் அண்மை நாட்டு மக்களின் துயர்களுடன் தங்கள் ஒருமைப்பாட்டை தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர் இத்தாலிய ஆயர்கள்.

மியான்மார் மக்களுடன் தங்களின் அனுதாபங்களையும் தெரிவிப்பதாகக் கூறும் ஆயர்கள், குழந்தைகள் உட்பட பலியானவர்கள் அனைவரின் குடுமபங்களுக்கு திருஅவையின் ஆதரவை உறுதிப்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.

அவசரகால நிலையை எதிர்நோக்கிவரும் மியான்மார் நாட்டின் உடனடி மீட்புத் தேவைகளுக்கு உதவும் வகையில் துவக்கத் தவணையாக ஐந்து இலட்சம்  யூரோக்களை இத்தாலியத் தலத்திருஅவை அனுப்புவதாகவும், காரித்தாஸ் அமைப்பு மூலம் நிவாரணப் பணிகள் இடம்பெறும் எனவும் அறிவித்தார் இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவரும் பொலோஞ்ஞா பேராயருமான கர்தினால் மத்தேயோ சுப்பி.

மியான்மார் நாட்டில் உள்நாட்டு மோதல்கள், பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் இயற்கை பேரழிவுகளால் ஏற்கனவே மொத்த மக்களுள் மூன்றில் ஒரு பகுதிக்கு மேற்பட்டோர், அதாவது 1 கோடியே 99 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய நில அதிர்ச்சியால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உரைக்கும் கர்தினால் சுப்பி அவர்கள், இத்தாலியின் ஒவ்வொரு மறைமாவட்டமும் பங்குதளமும் மியான்மார் நாட்டை கட்டியெழுப்புவதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு விண்ணப்பித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஏப்ரல் 2025, 15:57