நேர்காணல் – இயேசுவின் பாடுகளை எடுத்துரைக்கும் பாஸ்கா விழா
மெரினா ராஜ் – வத்திக்கான்
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மீது கொண்ட அன்பினால் தனது உயிரையே நமக்காகக் கையளித்தார். அவர் அன்று அனுபவித்த துன்பங்களை இன்று நாம் நினைவுகூரும் விதமாக பாஸ்கா கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழிப்பு நிகழ்வுகள் சிறப்பிக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் ‘பாஸோவர்’ (passover) என்றும், தமிழில் ‘பாஸ்கா’ என்றும் அழைக்கப்படுகின்ற இந்த விழா ‘பெஷாக்’ எனும் எபிரேய வார்த்தையிலிருந்து உருவானது. கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் கொண்டாடும் விழாக்கள் அனைத்தும் அர்த்தம் நிறைந்தவை. நமது முன்னோர்கள் கடந்து வந்த காலத்தால் அழியாத வரலாற்றை நாம் முழுமையாக அறிந்து கொள்ளவும், அவ்வரலாறுகள் எடுத்துரைக்கும் ஆன்மிக ஆழங்களை நாமும், நமக்குப் பின்வரும் தலைமுறைகளும் சுமந்து செல்லவும் நாம் கொண்டாடும் விழாக்கள் உதவுகின்றன. விவிலியத்தில் நாம் காணும் விழாக்கள் அனைத்தும் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்தும் நிகழ்வுகளாகவே இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று பாஸ்கா பண்டிகை. இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்த தங்களைக் கடவுள் மீட்டு செங்கடலைக் கடக்கச்செய்த நிகழ்வினை நினைவுகூரும் விதமாக கடத்தல் என்னும் பாஸ்கா விழாவினைக் கொண்டாடினர்.
இன்று நாமும் நமது பழைய பாவ இயல்பிலிருந்து புதிய வாழ்வை அடையும் விதமாக இயேசுவின் பாஸ்கா விழாவினை ஆண்டுதோறும் கொண்டாடுகின்றோம். இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, பிறப்பு, உயிர்ப்பை எட்டுத்திக்கும் பறைசாற்றும் விதமாக 1691 ஆம் ஆண்டு முதல் மேடை நாடகம், பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்ற கலைகள் வாயிலாக பாஸ்கா திருவிழா உலகெங்கும் நடந்து வருகிறது. அவ்வகையில் தென்தமிழகத்தின் மதுரை உயர்மறைமாவட்டத்தைச் சார்ந்த திருவில்லிபுத்தூர் இயேசுவின் திரு இருதய ஆண்டவர் ஆலய மக்களால் பாஸ்கா விழாவானது அண்மையில் கொண்டாடப்பட்டது. புனித வாரத்தில் நுழைய சில நாள்களே இருக்கின்ற இக்காலத்தில் இன்றைய நம் நேர்காணலில் இயேசுவின் பாடுகளின் பாஸ்கா விழா பற்றி நம்மிடத்தில் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்தந்தை சந்தன சகாயம். கிறிஸ்தவஇயலில் முதுகலைப்பட்டமும் இந்திய இளங்கலை சட்டப்படிப்பும் பயின்றுள்ளார் அருள்தந்தை சா.சந்தன சகாயம். பங்குத் தந்தையாகவும் மறைவட்ட அதிபராகவும் திருவில்லிபுத்தூர் இயேசுவின் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் சீரும் சிறப்புமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். மதுரை உயர் மறைமாவட்ட அருள்பணியாளரான தந்தை அவர்கள் குருத்துவ வாழ்வில் 13 ஆண்டுகளாக இறைப்பணியாற்றிக் கொண்டிருக்கின்றார் தந்தை அவர்களை, இயேசுவின் பாடுகளின் பாஸ்கா விழா பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்