MAP

நேர்காணல் – நலவாழ்வுப் பணியாளர்களின் தன்னார்வப் பணி

Living Hope அறக்கட்டளையானது இலாப நோக்கமற்ற அறக்கட்டளையாக செயல்பட்டு வருகிறது. திரு. ஜோசப் டெரன்ஸ் சாமுவேல் அவர்களால் தொடங்கப்பட்டு அவர்களின் தலைமையின் கீழ் இந்த நிறுவனம் மிக சிறப்பாக மக்களுக்கான தொண்டுப் பணிகளைச் செய்து வருகிறது.
நேர்காணல் - திருமதி லிடியா

மெரினா ராஜ் - வத்திக்கான்

இறைஅன்பின் வல்லமையால் தூண்டப்பட்டு கடமையுணர்வுடன் தங்களுக்கு அடுத்திருப்போருக்கு தன்னலமின்றி பணிபுரிவோரே தன்னார்வலர்கள் நலவாழ்வுப் பணியாளர்கள். மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவரை, இரக்கத்துடன் கண்ணோக்கி, அவரின் காயங்களை, தனது காயங்களாக எண்ணி அவருக்கு உதவியவர் நற்செய்தியில் நாம் காணும் நல்ல சமாரியர். பிறருக்கு உதவும் நல்மனம் கொண்ட நல்ல சமாரியர்களாலே இவ்வுலகம் புதிய சமுதாயமாகக் கட்டி எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. “உங்களின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ள நோயாளிகள், முதலில் மனிதர்கள் என்பதை கருத்தில் கொண்டவர்களாக அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கி வாழ்வில் அவர்களைத் தூக்கி நிறுத்துபவர்களாகச் செயல்படுங்கள்" என்று வலியுறுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களுக்கிணங்க ஏராளமான தன்னார்வலர்கள் நோயாளர்களுக்காகப் பணியாற்றி வருகின்றனர்.

இயேசுவின் கட்டளைகளை நம்பிக்கையுடன் ஏற்று, கடைபிடித்து, புதுப்பிக்கப்பட்ட உணர்வுடன், நோயாளிகள் மற்றும் அவர்களுக்குப் பணிபுரிவோர்க்கு திருஅவை ஆற்றும் பணி தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. அவ்வகையில் எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற இந்த யூபிலி ஆண்டில் வருகின்ற ஏப்ரல் 5 சனிக்கிழமை முதல் 6 ஞாயிற்றுக்கிழமை வரை நோயாளர்களுக்கான யூபிலி நாளாக திருஅவையில் கொண்டாடப்பட இருக்கின்றது. எனவே நம் நேர்காணலில், நோயாளர்களுக்குத் தன்னார்வம் மனம் கொண்டு உழைக்கும் அறக்கட்டளைகளுள் ஒன்றாக தென்தமிழகத்தின் திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் லிவிங் ஹோப் அறக்கட்டளையினரின் பணிகள் மற்றும் அனுபவங்கள் பற்றி இன்று நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் திருமதி லிடியா சாம்.

Living Hope அறக்கட்டளை 

Living Hope அறக்கட்டளையானது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருநெல்வேலியில் அமைந்துள்ளது. இது ஒரு இலாப நோக்கமற்ற அறக்கட்டளையாக செயல்பட்டு வருகிறது. திரு. ஜோசப் டெரன்ஸ் சாமுவேல் அவர்களால் தொடங்கப்பட்டு அவர்களின் தலைமையின் கீழ் இந்த நிறுவனம் மிக சிறப்பாக மக்களுக்கான தொண்டு பணிகளைச் செய்து வருகிறது.

Living Hope அறக்கட்டளையின் வழியாக கல்வி, நலவாழ்வு மற்றும் மருத்துவ ஆதரவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரிடர் கால அவசர உதவிகள், திறன் மேம்பாடு, அனாதைகள் மற்றும் முதியோருக்கான ஆதரவு, வறுமை ஒழிப்பு திட்டங்களை வழங்குதல் போன்றவற்றின் வழியாக, பாதிக்கப்படக்கூடிய நபர்களை மேம்படுத்துவதில் இந்த அமைப்பு கவனம் செலுத்தி வருகின்றது. 

குறிப்பாக பசிக்கு எதிரான போராட்டம் (Fight Against Hunger), புற்று நோய்க்கு எதிரான போராட்டம் (Fight Against Cancer) ஆகிய பணிகளைச் செய்து வருகிறது. இந்த பசிக்கு எதிரான போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். பசியில்லா தமிழகத்தை  உருவாக்குவதைத் தங்களது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. 

புற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் (Fight Against Cancer) Living Hope  அறக்கட்டளை மக்களுக்காக புற்று நோய் விழிப்புணர்வு முகாம்களையும் மற்றும் இலவச புற்று நோய் மருத்துவ முகாம்களையும் ஏற்படுத்தி வருகிறது. புற்றுநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதில் பல முயற்சிகளை  எடுத்து வருகிறது.

காலம் காலமாக, திருஅவை, நோயாளிகளுக்கு ஆற்றிவருவது, மருத்துவப் பணி மட்டுமல்ல, அது மனிதர்களை மையமாகக் கொண்டு ஆற்றும் பணி. பிறரன்பு பணிகளை ஆற்ற, ஒவ்வொரு கிறிஸ்தவரும் அழைப்புப் பெற்றுள்ளனர் என்பதை உணர்ந்தவர்களாய் நம் அருகில் வாழும் நோயாளர்களை இறைவனின் இரக்கத்துடன் காண முயல்வோம். அவர்களில் வாழும் இயேவை நாம் காணவும், நம்மிடத்தில் உள்ள இயேசுவை அவர்கள் காணச்செய்யவும் முயல்வோம். நலவாழ்வுப் பராமரிப்புகளைப் பெறுவதற்கான உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டதாக ஒவ்வோர் அரசும் செயல்பட ஊக்குவிப்போம். நோயாளிகளை கவனிக்காத ஒரு சமுதாயத்துக்கு வருங்காலம் என்பது இல்லை என்பதை உணர்ந்தவர்களாய் தன்னார்வ மனம் கொண்டு அவர்களுக்கு உதவுவோம். அவர்களது நலவாழ்விற்காக செபிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 ஏப்ரல் 2025, 09:07