MAP

இரஷ்யாவின் காசான் அன்னை மரியா இரஷ்யாவின் காசான் அன்னை மரியா 

அன்னை ஓர் அதிசயம்–Kazan & Meritxell அன்னைமரியா திருத்தலங்கள்

லெனின்கிராட் நகரம் முற்றுகையிடப்பட்டபோது அந்நகரின் கோட்டைகளைச் சுற்றி Kazan அன்னைமரி திருஓவியத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று அன்னையின் அருள் வேண்டினர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

&Բ;அன்னைமரியா&Բ;திருத்தலம்,&Բ;இரஷ்யா

இரஷ்யாவின் Tatarstan குடியரசின் தலைநகராகவும், பெரிய நகரமாகவும் அமைந்திருப்பது Kazan.  ஐரோப்பிய இரஷ்யாவில் வோல்கா மற்றும் காசன்கா ஆறுகள் சேரும் இடத்தில் இந்நகர் அமைந்துள்ளது. உலகப் பாரம்பரிய வளங்கள் கொண்ட நகரமாக, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள Kazan, கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் முக்கியமான இடமாகும். இங்கு இவ்விரு மதத்தவரும் அமைதியில் வாழ்ந்து வருகின்றனர். Kazan, இரஷ்யாவின் பெரிய மற்றும் வளமையான நகரங்களில் ஒன்றாகும். இந்நகரில் போற்றப்பட்டுவரும் Kazan அன்னைமரியா திருவுருவ ஓவியம், Kazan Theotokos அதாவது Kazan அன்னைமரியா எனவும் அழைக்கப்படுகிறது. இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையிலுள்ள மிகவும் உயரமான திருவுருவ ஓவியமாகவும் இது உள்ளது. இவ்வன்னைமரியா, Kazan நகரப் பாதுகாவலராகவும், அந்நகரைக் காப்பவராகவும் போற்றப்பட்டு வருகிறார். இத்திருவுருவத்தின் பிரதிகள் கத்தோலிக்க ஆலயங்களிலும் வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றன. மாஸ்கோவிலும், செயின்ட் பீட்டர்ஸ்பர்கிலும் Kazan அன்னைமரியாவுக்கென இரு பெரும் பேராலயங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இரஷ்யாவில் இன்னும் எண்ணற்ற Kazan அன்னைமரியா ஆலயங்கள் உள்ளன.  இவ்வன்னையின் விழா ஜூலை 21ஆம் தேதியும், நவம்பர் 4ஆம் தேதியும் சிறப்பிக்கப்படுகின்றது. நவம்பர் 4, தேசிய ஒன்றிப்பு நாளாகும்.

Matrona என்ற சிறுமி, Kazan நகரின் பாதாளப் பகுதியில், 1579ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதியன்று இந்த Kazan அன்னைமரியா திருவுருவ ஓவியத்தைக் கண்டெடுத்தார். அவ்விடத்தில் அவ்வோவியம் இருப்பதாக Theotokos, அதாவது புனித கன்னிமரியே அச்சிறுமிக்கு காட்சியில் வெளிப்படுத்தியதாகப் பாரம்பரியமாகச் சொல்லப்பட்டு வருகிறது. இத்திருஓவியம் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் நினைவாக கட்டப்பட்ட Kazan Theotokos துறவு இல்லத்தில், இத்திரு ஓவியத்தின் மூலப்பிரதி வைக்கப்பட்டுள்ளது. இத்திரு ஓவியம் இந்தத் துறவு இல்லத்தில் 1904ஆம் ஆண்டுவரை வைக்கப்பட்டிருந்தது.  இவ்வன்னையின் பெயரால் பிற ஆலயங்கள் எழுப்பப்பட்ட பின்னர் இதன் பிரதிகள் அவ்வாலயங்களில் வைக்கப்பட்டன. இரஷ்ய இராணுவத் தளபதிகள் Dmitry Pozharsky, Mikhail Kutuzov ஆகிய இருவரும் Kazan அன்னைமரியாவிடம் செபித்ததன்பேரில், 1612ஆம் ஆண்டில் போலந்தின் ஆக்ரமிப்பிலிருந்தும், 1709ஆம் ஆண்டில் சுவீடனின் ஆக்ரமிப்பிலிருந்தும், 1812ஆம் ஆண்டில் நெப்போலியனின் ஆக்ரமிப்பிலிருந்தும் இரஷ்யா காப்பாற்றப்பட்டதாக நம்பப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக வைக்கப்பட்டிருந்த Kazan Theotokos துறவு இல்லத்திலிருந்து 1904ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி இரவில் இந்த திருஓவியம் திருடப்பட்டது. இவ்வோவியம் வைக்கப்பட்டிருந்த சட்டம், தங்கத்தால் பல விலைமதிப்பற்ற ஆபரணங்களால் அழகு செய்யப்பட்டிருந்தது. திருடர்கள் இவற்றுக்காகவே இதனைத் திருடிச் சென்றுள்ளனர்.

பல ஆண்டுகள் கழித்து இரஷ்ய காவல்துறை திருடர்களைக் கண்டுபிடித்தது. இவ்வோவியம் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு எரிக்கப்பட்டுவிட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். ஆயினும் ஒரு திருடர், இது சைபீரியாவில் காட்டுப்பகுதியிலுள்ள ஒரு துறவு இல்லத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் இதில் உண்மையில்லை என நம்பப்பட்டதால் இரஷ்ய காவல்துறையும் இதனைக் கண்டுபிடிக்க மறுத்துவிட்டது. போலியான திருவுருவத்தை வணங்குவது துரதிஷ்டம் என்று சொல்லி காவல்துறை இதனைத் தேடுவதற்கு முயற்சிக்கவில்லை. அச்சமயத்தில் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும், இந்த அன்னைமரியா திருஓவியம் காணாமற்போனது இரஷ்யாவுக்கு வரப்போகும் ஆபத்துக்களின் அடையாளம் என எச்சரித்தது. உண்மையில், 1905ஆம் ஆண்டில் இடம்பெற்ற புரட்சிகளின் தீமைகளுக்கும், இரஷ்ய-ஜப்பான் போரில் இரஷ்யா தோற்கடிக்கப்பட்டதற்கும் இதுவே காரணம் எனச் சிலர் நம்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று அச்சிறுமி கண்டெடுத்த இந்த அன்னைமரியா திருஓவியம் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் இருப்பதாக, 1917ஆம் ஆண்டின் இரஷ்ய புரட்சிக்குப் பின்னர் கூறப்பட்டது. லெனின்கிராட் நகரம் முற்றுகையிடப்பட்டபோது அந்நகரின் கோட்டைகளைச் சுற்றி இந்த Kazan அன்னைமரி திருஓவியத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று அன்னையின் அருள் வேண்டினர். பின்னாள்களில் இத்திருவுருவ ஓவியம், Bolsheviks என்பவர்களால் விற்கப்பட்டுவிட்டது என்றும் கூறப்படுகிறது. எனினும், போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவில் 1970களில் வைக்கப்பட்ட இவ்வோவியம், அதன் மூலப் பிரதி என்றே சொல்லப்படுகிறது. பாத்திமாவில் உள்ள இவ்வோவியம் 1730ஆம் ஆண்டைச் சேர்ந்தது என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பாத்திமாவில் உள்ள Kazan அன்னைமரி திருஓவியம் 1993ஆம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ஆம் ஜான் பால் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. இவர் இதனை தனது அறையில் 11 ஆண்டுகள் வைத்து வணங்கி வந்தார். மாஸ்கோ அல்லது காசனுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு இதனை இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையிடம் ஒப்படைக்க விரும்பினார் திருத்தந்தை 2ம் ஜான் பால். ஆனால் அப்பயணத்துக்கு இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை தடையாக இருந்தார். எனவே,  2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயப் பீடத்தில் Kazan அன்னைமரி திருஓவியம் வைக்கப்பட்ட பின்னர் மாஸ்கோவுக்கு நிரந்தரமாக அளிக்கப்பட்டுவிட்டது. 2005ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி, இவ்வன்னையின் விழாவன்று இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை 2ஆம் அலெக்சிஸ், Tatarstan குடியரசுத் தலைவர் Mintimer Shaymiev ஆகிய இருவரால் Kazan Kremlin மங்களவார்த்தை பேராலயத்தில் Kazan அன்னைமரி திருஓவியம் ஆடம்பரமாக வைக்கப்பட்டது.

Kazan அன்னைமரி கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்புக்கு உதவுவாராக. கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்காக Kazan அன்னைமரியிடம்  செபிப்போம்.

Meritxell அன்னைமரியா திருத்தலம்

அந்தோரா நாட்டின் Meritxell நமதன்னை பேராலயம்
அந்தோரா நாட்டின் Meritxell நமதன்னை பேராலயம்

Andorra, தென்மேற்கு ஐரோப்பாவில், இஸ்பெயின் மற்றும் பிரான்சை எல்லைகளாகக் கொண்டுள்ள ஒரு குட்டி நாடாகும். ஐரோப்பாவிலுள்ள ஆறாவது சிறிய நாடாக, 181 சதுர மைல் பரப்பளவை இது கொண்டுள்ளது. 2012ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி இந்நாட்டின் மக்கள்தொகை 85 ஆயிரம். இந்நாட்டின் தலைநகராகிய Andorra la Vella, ஐரோப்பாவிலே உயரமான இடத்தில் அமைந்துள்ள தலைநகராக உள்ளது. கடல்மட்டத்தைவிட 1,023 மீட்டர் உயரத்தில் உள்ள இந்நகர், இஸ்பெயினின் பார்செலோனாவுக்கு வடக்கே ஏறக்குறைய 135 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கிழக்கு Pyrenees மலைகளில் அமைந்துள்ள இந்த Andorra நாட்டில் இஸ்பானியம், ப்ரெஞ்ச், போர்த்துக்கீசியம் ஆகிய மொழிகள் பொதுவாகப் பேசப்பட்டாலும், நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி Catalan என்பதாகும். 988ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பின் மூலம், முடியாட்சி போன்ற ஓர் அமைப்பு இந்நாட்டில் உள்ளது. இந்நாட்டை Urgell ஆயரும், ப்ரெஞ்ச் அரசுத்தலைவரும் தலைமை வகித்து நடத்துகின்றனர். சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இந்நாட்டுக்குச் செல்வதால் வளமையான நாடாகவும் இது உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய ஒரு கோடியே 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் Andorra செல்கின்றனர்.

Andorra ஒரு கத்தோலிக்க நாடாகும். அதனால் இந்நாட்டின் முக்கிய கொண்டாட்டங்கள், முக்கியமான புனிதர்களின் விழாக்களைக் கொண்டாடுவதாக இருக்கின்றன. இவ்விழாக்களில் புனித ஜார்ஜ் தினம், புனித யோவான் தினம், புனித ஸ்தேவான் தினம், புனித லூசியா தினம் போன்றவை முக்கியமானவை. Andorra நாட்டுக்குச் செப்டம்பர் 8 தேசிய விடுமுறை நாள். அன்று அந்நாட்டின் சுதந்திர தினமும் ஆகும். இந்தத் தேசிய விடுமுறை நாளில் பெருந்திரளான மக்கள் Meritxell அன்னைமரியா திருத்தலத்துக்குத் திருப்பயணம் மேற்கொள்வதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் Meritxell அன்னைமரியா Andorraவின் பாதுகாவலியாவார். Meritxell அன்னைமரியாவின் வரலாறு 12ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. Merig என்ற பெயரே "Meritxell" என்று பெயர் பெற்றது என Catalan மெய்யியலாளர் Joan Coromines விளக்குகிறார். மிகுந்த சூரிய ஒளியில் ஒரு பசும் புல்வெளியை குறிப்பதற்காக இடையர்கள் Merig என்ற சொல்லைப் பயன்படுத்தினர். இதற்கு ஆங்கிலத்தில் நண்பகல் என்று பொருள்.

12ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு சனவரி 6ஆம் தேதியன்று Andorraவின் Meritxell கிராம மக்கள் Canillo என்ற நகரத்துக்குத் திருப்பலி காண்பதற்காகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது காட்டு ரோஜா சாலையோரத்தில் பூத்திருப்பதை மக்கள் பார்த்தனர். அது குளிர்காலம். அக்காலத்தில் ரோஜா மலர் பூப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதனால் இந்த ரோஜாவைப் பார்த்ததும் மக்கள் அது பூத்திருந்த புதர் அருகேச் சென்றனர். அச்செடியின் அடியில் ஓர் அன்னைமரியா திருவுருவத்தைப் பார்த்தனர். அன்னைமரியா குழந்தை இயேசுவை வைத்திருப்பது போன்ற திருவுருவம் அது. Meritxell கிராம மக்கள் அந்த அன்னைமரியா திருவுருவத்தை எடுத்து Canilloவிலிருந்த ஆலயத்தில் வைத்தனர். அதற்கு அடுத்த நாள் அந்த அன்னைமரியா திருவுருவத்தை Canillo ஆலயத்தில் காணவில்லை. ஆனால் அது, அந்த காட்டுரோஜா பூத்திருந்த அதே இடத்தில் இருந்தது. மீண்டும் அம்மக்கள் திருவுருவத்தை எடுத்து Canilloவிலிருந்த ஆலயத்தில் வைத்தனர். ஆனால் அதற்கு அடுத்த நாளும் அந்த அன்னைமரியா திருவுருவத்தை Canillo ஆலயத்தில் காணவில்லை. ஆனால் அது, அந்த காட்டுரோஜா பூத்திருந்த அதே இடத்தில் இருந்தது.

எனவே Meritxell கிராம மக்கள் இதனை ஓர் அடையாளமாக எடுத்துக்கொண்டு, தங்களது சொந்த ஊரில் ஒரு புதிய ஆலயம் கட்டுவதற்குத் தீர்மானித்தனர். அது குளிர் காலமாகவும் பனி பெய்யும் காலமாகவும் இருந்தது. ஆயினும், பனி பெய்யாத ஒரு திறந்த வெளியை புதுமையாக அம்மக்கள் கண்டனர். அவ்விடத்தில் அன்னைமரியாவுக்கு ஓர் ஆலயம் கட்டி, அத்திருவுருவத்தை அங்கு வைத்தனர். இத்தேவதாய், Meritxell அன்னைமரியா என்று அழைக்கப்பட்டு மக்களால் மிகுந்த வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறார். ஆயினும், 1972ஆம் ஆண்டு செப்டம்பர் 8 மற்றும் 9ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் இவ்வாலயம் தீயினால் முழுவதும் அழிந்தது. அன்னைமரியா திருவுருவமும் சேதமடைந்தது. மீண்டும் 1976ஆம் ஆண்டில் புதிய ஆலயம் கட்டப்பட்டது. அதே மாதிரியான அன்னைமரியா திருவுருவம் Ricardo Bofill என்பவரால் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டது.

செப்டம்பர் 8ஆம் தேதி அன்னைமரியாவின் பிறப்பு விழா. அன்றுதான் நாம் வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னையின் விழாவைச் சிறப்பிக்கிறோம். இதே நாளில்தான் Andorra நாட்டு மக்களும் Meritxell அன்னைமரியா விழாவைச் சிறப்பிக்கின்றனர். அந்நாட்டு மக்கள், ஆண்டுதோறும் செப்டம்பர் 8ஆம் தேதி Meritxell அன்னைமரியா திருத்தலத்துக்குத் திருப்பயணம் மேற்கொள்வதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இயேசுவின் தாயாம் அன்னைமரியா ஒவ்வொரு நாட்டிலும் காட்சிக் கொடுத்து தனது மகன் இயேசுவின் பெருமையைப் பறைசாற்றி வருகிறார். அன்று கானாவூர் திருமணத்தில் செய்தது போல இயேசுவிடம் நமக்காகப் பரிந்துபேசி தீராத நோய்களைக் குணமாக்குகிறார், மக்கள் பலரின் உடல் நோயையும் உள்ள நோயையும் குணமாக்குகிறார். நம் கவலைகளை அகற்றி மனதுக்கு ஆறுதலையும் நிம்மதியையும் தருகிறார். அன்னைமரியாவை நம்பிக்கையுடன் நாமும் நாடிச் செல்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 ஏப்ரல் 2025, 10:34