புனித வெள்ளி தரும் “இதோ! இறைவனின் செம்மறி!”
இரான்சம் அமிர்தமணி, அன்பின் மடல் நவராசன்
யோசுவா: இதோ! இறைவனின் செம்மறி! தம்பி, யோனா. ஒவ்வோர் ஆண்டும் பாஸ்கா பண்டிகைக்காக ஆடுகளை தேவாலயத்திற்கு கொடுப்பாயே? இன்றைக்கு அந்த வேலை முடிந்ததா?
யோனா: ஆம், அண்ணா! இன்று காலையிலேயே நானும், மகன் பெஞ்சமினும் ஆலயத்தில் ஒப்படைத்துவிட்டோம். பெஞ்சமின் தான் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்டு மந்தைகளைப் பார்த்துக் கொள்கிறான்.
யோசுவா: அப்படியா? இந்த இளம்வயதில் ஒரு தொழிலைக் கற்றுக்கொள்வது நல்லது தான். என்ன, பெஞ்சமின்! எத்தனை ஆடுகளை ஓட்டிக்கொண்டு போனாய்? எல்லாமே களங்கமற்றதாக இருந்தனவா?
பெஞ்சமின்: நூற்றி இருபது ஆடுகள், பெரியப்பா. எல்லா ஆடுகளுமே குறையற்றதாக இருந்ததால், எல்லா ஆடுகளையும் எடுத்துக் கொண்டார்கள். அங்கு தான் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். நாசரேத்தூர் போதகர் இயேசுவுக்கு மரணதண்டனை விதித்து, இன்று கொல்கொத்தா மலையில் சிலுவையில் அறைந்து கொல்லப் போகிறார்களாம். அதை நேரிலே பார்க்கத்தான் அப்பாவும் நானும் இங்கே வந்தோம்.
யோசுவா: பெஞ்சமின்! நாசரேத்து போதகரை உனக்கு எப்படித் தெரியும்?.
யோனா: அண்ணா நாசரேத்தூர் போதகர் இயேசுவை பெஞ்சமினுக்கு நன்றாகத் தெரியும். பல தடவை அவர் இருக்கின்ற இடங்களுக்குச் சென்று அவருடைய போதனைகளை கேட்டிருக்கிறான். அவர் மேல் பெஞ்சமினுக்கு ரொம்ப பிரியம். அவரை கொலை செய்யப் போகிறார்கள் என்று கேட்டதிலிருந்து அவன் மிகுந்த வேதனைப்படுகிறான்
பெஞ்சமின்: உங்களுக்குத் தெரியுமா, பெரியப்பா? போதகருக்கு ஏன் மரணதண்டனை?
யோசுவா: பெஞ்சமின் நேற்று இரவு தலைமை சங்கத்தார் போதகரை கைது செய்திருக்கிறார்கள் இரவு முழுவதும் தலைமை குருவின் மாளிகையிலும், இன்று காலையில் ஆளுநர் அரண்மனையிலும் விசாரணை நடந்திருக்கிறது உரோமை படைவீரர்கள் போதகரை ஒரு குற்றவாளியைப் போல கடுமையாக அடித்து, அவமானப்படுத்தி சித்ரவதை செய்தார்களாம். கடைசியாக தலைமைச் சங்கத்தார் கேட்டுக்கொண்டபடி, ஆளுநர் பிலாத்து சிலுவையில் அறைந்து கொலை செய்ய ஆணையிட்டாராம். தனது சிலுவையை போதகரே சுமந்துகொண்டு கொல்கொதா குன்றுக்குப் போகிறார் என்னும் செய்தி காலையிலேயே ஊரெங்கும் பரவியது. அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என்ன தான் நடக்கிறது என்பதை நேரிலே பார்க்கத் தான் நானும் இங்கு வந்தேன்
பெஞ்சமின்: அப்பா! நாசரேத்தூர் போதகர் ரொம்ப நல்லவராயிற்றே! நாடெங்கும் நல்லதையே போதித்து, எத்தனையோ பேருக்கு நோய்களை குணமாக்கினாரே. அவர் செய்த பல வல்ல செயல்களை நேரிலே பார்த்திருக்கிறேன். மக்களுக்கு நல்லதுச் செய்தவருக்கு மரண தண்டனையா?
யோனா: அந்த போதகர் நல்லவர் தான்; தண்டனைக்குரிய குற்றம் ஏதும் அவர் செய்யவில்லை என்பதும் உண்மை தான். நமது இஸ்ராயேல் குலத்தில் நாம் இதுவரை கேள்விப்பட்ட இறைவாக்கினர்களைவிட வல்லமையோடும் அதிகாரத்தோடும் இவர் போதித்து வந்தார். "ஆபிரகாமின் தேவன் இந்த போதகரோடு இருக்கிறார்" என்றே எல்லாரும் நம்பினோம். இன்று சிலுவையில் அறைந்து கொல்வதற்காக படைவீரர்கள் அவரை இழுத்துக் கொண்டு ஏற்கனவே மேலே சென்று விட்டார்கள். வா இதோ! நாமும் மலையின் உச்சிக்கு வந்துவிட்டோம்
யோசுவா: யோனா கவனித்தாயா? இந்த பகல் நேரத்தில் திடீரென சூரியன் மறைந்து எங்கும் இருட்டாகிவிட்து, பார்.
பெஞ்சமின்: அப்பா! அதோ பாருங்கள். போதகரை சிலுவையில் அறைந்து, அந்த மரத்தையும் தூக்கி நிறுத்திவிட்டார்கள், அவருக்கு இரண்டு பக்கத்திலும் இரண்டு பேர் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறார்களே?
யோசுவா: பெஞ்சமின்,. அங்கே சில பெண்கள் தலையிலும், மார்பிலும் அடித்துக் கொண்டு, அழுவதைப் பார். சில பெண்களும், ஒரு ஆளும் சிலுவைக்கு மிக அருகில் வேதனையோடு நிற்கிறார்கள். போதகருக்குத் தெரிந்தவர்களாக இருக்கலாம்.
யோனா: அண்ணா! அந்தப் பெண்களில் ஒருவர் போதகரின் தாயார். அருகில் நிற்பவர் அவருடைய சீடர்களில் ஒருவர். பெஞ்சமின், நீ ஏன் அழுகிறாய்?
பெஞ்சமின்: அப்பா! இந்த போதகர் எத்தனையோ பேருக்கு கைம்மாறு கருதாமல் நன்மை செய்தார். கசையடிபட்ட அவர் உடல் முழுவதும் காயங்கள். ஆணிகள் துளைத்த கை-கால்களிலிருந்து வழிகின்ற இரத்தம், சிலுவை மரத்தை நனைத்து, துளித்துளியாய் கீழே விழுந்து பாறையில் தேங்கி நிற்பதை பார்க்கும்போது என்னால் அழாமல் இருக்க முடியவில்லை.
யோசுவா: போதகர் செய்த நன்மைகளை யாரும் பெரிதாக எண்ணவில்லை. அவரும் இந்த அவமானங்களை விரும்பி ஏற்றுக்கொண்டது போல வாய் திறக்காமலே இருந்தார் என்று ஆளுநர் மாளிகையில் பார்த்தவர்கள் சொன்னார்கள்.
யோனா: பெஞ்சமின்! தோரா வகுப்புகளில் மறைநூல்களை நீ படித்திருக்கிறாய் அல்லவா? "அவர் இழிவுபடுத்தப்பட்டார்; மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார், நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்" என்று இறைவாக்கினர் எசாயா எழுதியிருப்பது இவரைப் பற்றித்தான் என்று தோன்றுகிறது.
பெஞ்சமின்: ‘கத்தாத செம்மறி’ என்றா சொன்னீர்கள், அப்பா? ஆம். இவர் செம்மறி தான், இறைவனின் செம்மறி. திருமுழுக்கு கொடுத்து போதனை செய்த யோவான் இவரைப் பார்த்து "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி" என்று கூறினார். அவர் சொன்னது உண்மை என்று இப்போது எனக்கு புரிகிறது
யோசுவா: என்ன? இந்த நாசரேத்து போதகர் 'இறைவனின் செம்மறி' என்று யோவான் சொன்னாரா? உனக்கு எப்படித் தெரியும், பெஞ்சமின்?
பெஞ்சமின்: மூன்று ஆண்டுகளுக்கு முன் நான் அதை நேரிலே கேட்டேன். பெத்தானியாவுக்கு அருகில் யோர்தான் ஆற்றங்கரையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். ஆற்றின் கரையில் திரளான மக்கள் கூட்டம். ஆற்றில் நின்றிருந்த ஒருவர் உரத்தக் குரலில் பேசினார்
(திருமுழுக்கு யோவான்: சிந்தனையற்ற மக்களே! சீக்கிரத்தில் வரவிருக்கின்ற கடவுளின் சினத்தைப் பற்றிய நினைவே உங்களுக்கு இல்லையா? ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும். எனவே, மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது. உங்கள் வழிகளைத் திருத்தி பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்.)
பெஞ்சமின்: யோவானின் குரலைக் கேட்ட பலர் ஆற்றில் இறங்கிச் சென்று அவரிடம் திருமுழுக்கு பெற்றார்கள் அவர்களோடு சென்ற என்னையும் நீரில் மூழ்கவைத்து யோவான் திருமுழுக்குக் கொடுத்தார். தலையிலிருந்து தண்ணீர் சொட்ட சொட்ட நான் ஆற்றிலிருந்து எழுந்தபோது, ஆற்றங்கரையில் யாரையோ உற்றுநோக்கி பார்த்துக் கொண்டிருந்தார் யோவான். எல்லாருமே யோவானின் பார்வை சென்ற திசையைப் பார்த்தோம் ஆற்றங்கரையில் வந்துகொண்டிருந்தவரைப் பார்த்து, "இவர் இயேசு, நாசரேத்தூர் தச்சனின் மகன்” என்று கூட்டத்தில் சிலர் சொன்னார்கள். அவரை நோக்கி கையை நீட்டிய யோவான் மரியாதையோடு அமைதியான குரலில் சொன்னார்:
(திருமுழுக்கு யோவான்: இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியான இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியேச் சொன்னேன்.)
பெஞ்சமின்: "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்” என்று யோவான் கூறியதன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. அதனால் தொழுகைக்கூடத்தின் தலைவரிடம் "இறைவனின் ஆட்டுக்குட்டி" என்றால் என்ன? என்று கேட்டேன். அவர் எனக்கு விளக்கம் சொன்னார்
(தொழுகைக்கூடத் தலைவர்:
பெஞ்சமின், மக்களுடைய பாவங்களைப் போக்குவதற்கு பரிகார பலியாக ஆடுகளை பலியிடுவது நம் குலவழக்கம் என்றும், இதற்காக ஒவ்வொரு பாஸ்கா பண்டிகையின் போதும் உனது அப்பா நல்ல ஆடுகளை தேவாலயத்திற்கு கொடுப்பார் என்றும் உனக்குத் தெரியுமல்லவா? பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோரை எல்லாம் மோசே தலைமையில் ஆபிரகாமின் தேவன் விடுதலை செய்து எகிப்து நாட்டைவிட்டு கூட்டிவந்தார். ஆனால், அந்த விடுதலை சுலபமாகக் கிடைக்கவில்லை. அடிமைகளாக இருந்த நம் முன்னோரை விடுதலை செய்ய எகிப்து அரசன் பாரவோன் விரும்பவில்லை. ஆகவே, பத்து கொள்ளைநோய்களை எகிப்து நாட்டின் மேல் கடவுள் வரச் செய்தார். பத்தாவதாக அவர் அனுப்பிய கொள்ளைநோய் தான் எகிப்தியருடைய எல்லா தலைச்சன் பிள்ளைகளின் மரணம். அன்றைய இரவில் நம் மக்கள் முதலாவது பாஸ்காவைக் கொண்டாட வேண்டுமென்று கடவுள் கட்டளையிட்டார். அந்த முதல் பாஸ்கா விருந்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு செம்மறி பலியிடப்பட்டது. கிண்ணத்திலுள்ள செம்மறியின் இரத்தத்தில் ஈசோப்பு புல்லைத் தோய்த்து, அந்த வீட்டின் தந்தை கதவின் மேல்சட்டத்திலும் இரு நிலைக்கால்களிலும் இரத்தத்தைப் பூசினார்.)
பெஞ்சமின்: இப்படி அந்தத் தொழுகைக்கூடத் தலைவர் சொன்னபோது, இரத்தம் வடிய செத்துக் கிடந்த ஆடும், கதவுநிலைக் கால்களிலும், மேல்சட்டத்திலும் பூசப்பட்ட ஆட்டின் இரத்தம் துளித்துளியாக தரையில் சிந்தும் காட்சியும் என் நினைவில் தோன்றின.
(தொழுகைகூடத் தலைவர்: முதல் பாஸ்காவை நம் முன்னோர் கொண்டாடிய அந்த மாலைப் பொழுதில், குடும்பத்தில் இருக்கின்ற அனைவரும் வீட்டினுள்ளே இருக்க வேண்டும் என்று கடவுள் ஆணையிட்டார். ஏனெனில் அன்று இரவில் கடவுள் எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, அந்த நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடித்தார். நம் மக்கள் இருந்த வீடுகளில் பூசப்பட்ட இரத்தம் அடையாளமாக இருந்ததால், அந்த வீடுகளைக் கடவுள் கடந்து சென்றார். எகிப்து நாடெங்கும் மரண ஓலம் ஒலித்த அந்த இரவில், இஸ்ராயேலின் தலைச்சன் பிள்ளைகள் எவரும் இறக்கவில்லை. மறுநாள் காலையில் நம் மக்கள் எல்லோரும் அடிமைத்தளையை களைந்து விடுதலைக் காற்றை சுவாசித்தவர்களாக எகிப்து நாட்டை விட்டு கடவுள் வாக்களித்த நாட்டிற்கு தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். முதல் பாஸ்காவை கொண்டாடக் கட்டளையிட்ட கடவுள், “இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக இருக்கட்டும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறை தோறும் கொண்டாட வேண்டும்” என்றும் ஆணையிட்டார்.)
பெஞ்சமின்: "பாஸ்கா விழாவன்று நம் பாவங்களுக்கு பரிகாரமாகத் தன் இரத்தத்தை சிந்தி பலியாகின்ற ஆடுதான் இறைவனின் செம்மறி” என்று அப்போது தான் எனக்குத் தெரிந்தது. ஒவ்வொரு பாஸ்காவின் போதும் எங்கள் கிடையிலிருந்து எருசலேமிற்கு ஆடுகளை ஓட்டிக்கொண்டு வரும்போதெல்லாம், "இன்னும் சில நாள்களில் களங்கமில்லாத, மாசற்ற இந்த ஆடுகளெல்லாம் ஏதோ ஒரு குடும்பத்திற்காக கொலை செய்யப்பட்டு தங்கள் உயிரைத் தியாகம் செய்யப் போகின்றன” என்று நான் நினைத்துக் கொள்வேன்
யோசுவா: யோர்தான் கரையில் பார்த்த போதகரை நீ மறுபடியும் பார்த்தாயா, பெஞ்சமின்?
பெஞ்சமின்: பலதடவை அவரைப் பார்த்தேன் பெரியப்பா. நான் திருமுழுக்குப் பெற்றதற்கு அடுத்த நாள் போதகரும் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். கடந்த மூன்று ஆண்டுகளில் பல முறை அவருடைய போதனைகளைக் கேட்டிருக்கிறேன். சில மாதங்களுக்கு முன் பெத்தானியாவில் இறந்து நான்கு நாள்களாக கல்லறையில் வைக்கப்பட்டிருந்த அவருடைய நண்பர் இலாசரை போதகர் உயிரோடு எழுப்பினார். இலாசர் கல்லறையின் உள்ளே இருந்து வெளியே வந்ததை நானே நேரில் பார்த்தேன். ஐந்து நாள்களுக்கு முன்னர், ஒரு கழுதைக் குட்டியின் மேலமர்ந்து இயேசு எருசலேம் நகருக்குள் வந்தபோது, மக்கள் எல்லாரும் மரக்கிளைகளை அசைத்து ஒரு ராஜாவை வரவேற்பது போல அவரை வரவேற்றபோது, நானும் ஒலிவக்கிளை ஒன்றைக் கையில் ஏந்திக் கொண்டு ``ஓசன்னா, ஓசன்னா" என்று கோஷமிட்டேன்.
யோனா: உண்மை தான், பெஞ்சமின். அவர் ஆற்றிய பல வல்ல செயல்களை நீ நேரிலே பார்த்தது பெரிய வரம் தான். ஆனால், இன்று இந்தக் கொலைகளத்தில் அவமானப்பட்டு, அடித்து நொறுக்கப்பட்டு, ஒரு குற்றவாளியை போல மிகக் கேவலமாக சிலுவையில் அறையப்பட்டு, உயிருக்குப் போராட வேண்டிய நிலை அவருக்கு வரும் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை.
யோசுவா: யோனா, துன்பப்படும் மனிதனைக் குறித்து எசாயா இறைவாக்கினர் சொன்னது போல, நடுவிலுள்ள சிலுவையில் தொங்குகின்ற நாசரேத்து போதகரின் தோற்றம் மனித சாயலற்றதாகத் தான் இருக்கிறது
பெஞ்சமின்: ஆம், பெரியப்பா! அவருடைய உடலிலிருந்து வழிகின்ற இரத்தம் சிலுவை மரத்தில் பட்டு துளித்துளியாக கீழே விழுவதைப் பார்க்கும்போது, முதல் பாஸ்கா அன்று நம் மூதாதையர் வீட்டின் கதவுநிலைகளில் பூசிய ஆட்டின் இரத்தம் சொட்டு சொட்டாக கீழே விழுவது போல எனக்குத் தெரிகிறது.
யோனா: இவர் சாதாரண மனிதப்பிறவி அல்ல, மகனே. உண்மையிலேயே இந்த நாசரேத்து போதகர் ஒரு தெய்வப்பிறவி தான். ஐயோ! அங்கே பார் இயேசு பெருமூச்சுவிட்டு உரத்தக் குரலில் ஏதோ சொன்னார், அதன் பிறகு அவர் தலை சாய்ந்துவிட்டது! பெஞ்சமின், போதகர் இறந்துவிட்டார்!
பெஞ்சமின்: போதகர் இறக்கவில்லை, அப்பா. உலக மாந்தர் அனைவரின் பாவங்களுக்கு பரிகாரப் பலியாக தன்னையே தியாகம் செய்திருக்கிறார். இந்த நாசரேத்தூர் இயேசு தூய்மையானவராக, குற்றமற்றவராக, களங்கமில்லாதவராக, இறைவல்லமை கொண்டவராக தன் வாழ்வில் விளங்கினார். குற்றநீக்க பலியாக பாஸ்கா விழாவன்று கொல்லப்படுகின்ற ஆட்டைப் போல, பாஸ்கா பண்டிகையாகிய இன்று மாசற்ற இவரும் கொலை செய்யப்பட்டார். திருமுழுக்கு கொடுத்த யோவான் சொன்னது போல, உலகின் பாவங்களைப் போக்குகின்ற இறைவனின் செம்மறி இவர் தான்.
யோசுவா: உண்மை தான், பெஞ்சமின். இவர் பலியாகத் தன்னையே கையளித்த இறைவனின் செம்மறி தான். ஆனால், அவரிடம் விளங்கிய இறைவல்லமை அளவற்றது. துன்புறும் மனிதனைப் பற்றிக் கூறிய இறைவாக்கினர் எசாயா, "அவரை நொறுக்கவும், நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்" என்றும் எழுதியுள்ளார். எனவே இயேசுவின் வாழ்வும், பணியும் இன்றோடு முடிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. ஆண்டவரின் திருவுளப்படி அவர் சிறப்படைந்து நிச்சயமாக சீக்கிரமே நம் முன் வருவார். இனிவரும் நாள்களிலும் நாசரேத்தூர் இயேசு நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துவார். பொறுத்திருப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்