தீரா நோயாளிகளின் தற்கொலைக்கு உதவும் இங்கிலாந்து சட்டப் பரிந்துரை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
குணமாக்க முடியாத நோயால் வாடும் வயது வந்தோர் தற்கொலைச் செய்துகொள்ள உதவும் சட்டம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருவது குறித்து தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையின் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆயர் Richard Moth அவர்கள், கடவுள் கொடுத்த மாண்புடன் கடவுளின் கொடையாக வழங்கப்பட்டுள்ள மனித வாழ்வை பறிக்க முயலும் எந்த ஒரு முயற்சியையும் கத்தோலிக்கர்கள் என்ற முறையில் நாம் எதிர்க்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
தீரா நோயைக் கொண்டிருப்பவர்கள் தங்கள் உயிரை தாங்களேப் பறித்துக்கொள்ள உதவும் இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தங்கள் பாராளுமன்ற அங்கத்தினர்களை ஒவ்வொரு கத்தோலிக்கரும் வலியுறுத்தவேண்டும் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் சார்பில் அனைவரையும் விண்ணப்பித்துள்ளார் ஆயர்.
தற்கொலைச் செய்து கொள்ள நோயாளிகளை அனுமதிக்கும் சட்டம் என்பது குடும்பத்திற்குள்ளும், நோயாளி-மருத்துவர் என்ற உறவுகளுக்குள்ளேயும், நல ஆதரவு அமைப்புகளிலும் பெரும் முரண்பாடுகளையும், உறவு நிலை சரிவுகளையும் கொணரும் எனக்கூறும் ஆயர் Moth, மனச்சான்று உறுத்துவதால் தற்கொலைக்கு உதவ மறுக்கும் நலப்பணியாளர்கள் தண்டிக்கப்படுவார்களா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.
முதியோரின் இருப்பின் பலன் குறித்து நாம் மகிழ்ச்சியடைவதை விடுத்து, அவர்களை சுமையாகக் கருதி, முதியோர், எளிதில் பாதிக்கப்படுவோர் மற்றும் பலவீனமானவர்கள் இறக்க நாமே உதவுவது, நம் சமுதாயக் கடமைகளிலிருந்து நாம் தப்பிச் செல்லவே உதவும் என தன் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார் ஆயர் Moth.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்