இந்திய அருள்சகோதரிகளுக்கு விழிப்புணர்வு தரும் பயிற்சிப் பட்டறைகள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்தியாவில் உள்ள கத்தோலிக்க அருள்சகோதரிகள் பாலியல் முறைகேடுகள், மனநல பாதிப்புகள் மற்றும் தற்கொலை போக்குகள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளப் பயிற்சிப் பட்டறை ஒன்றில் பங்கேற்றதாக யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியக் கத்தோலிக்கப் பெண் துறவு சபைகள் அமைப்பு (CRWI) அண்மையில் கோவாவில் தனது பத்தாவது பயிற்சிப் பட்டறையை நிறைவு செய்தது என்றும், இதில் 50 அருள்சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் என்றும் அச்செய்தி நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
பெங்களூரில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்தப் பயிற்சிப் பட்டறை, மனநலம், கடுந்துன்ப மதிப்பீடு, ஆற்றுப்படுத்துதல், அறநெறிமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் வழியாக அருள்சகோதரிகள் மீள்தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது என்றும் குறிப்பிட்டுக்காட்டியுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், மனநலம் மற்றும் நலவாழ்வு குறித்த இந்தப் பயிற்சி திட்டத்தால் ஏறக்குறைய 350 அருள்சகோதரிகள் பயனடைந்துள்ளனர் என்றும், இந்தப் பயிற்சி துறவற உருவாக்கத்தை (religious formation) திருத்தம் செய்வதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது மற்றும் அருள்சகோதரிகளிடையே நிலவும் மனநலப் பிரச்சினைகளுக்கு ஆதரவை வழங்குகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளது இச்செய்தித் தொகுப்பு.
இந்தியாவில் அருள்சகோதரிகளிடையே காணப்படும் பாலியல் முறைகேடுகள் மற்றும் தற்கொலைகள் பற்றிய அறிக்கைகள் இதுபோன்ற திட்டங்களின் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன என்று கூறும் அச்செய்திக் குறிப்பு, 1997 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், குறைந்தது 20 அருள்சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்றும், மேலும் திருஅவைப் பணியாளர்களாலும் இந்தப் பாலியல் முறைகேடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்