MAP

சூடான் மக்களிடையே பணியாளர்கள் சூடான் மக்களிடையே பணியாளர்கள் 

சூடான் நாட்டில் துயருறும் மக்களுக்கு காரித்தாசின் உணவு உதவிகள்

மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்துவரும் சூடான் நாட்டில் 2 கோடியே 50 இலட்சம் பேர் தற்போது உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுவந்தாலும், இவ்வெண்ணிக்கை ஜூனுக்கும் செப்டம்பருக்கும் இடைப்பட்டக் காலத்தில் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சூடான் நாட்டில் புலம்பெயர்ந்துள்ள பல இலட்சக்கணக்கானோர் உணவில்லா நிலையை எதிர்நோக்கி துயர்களை அனுபவிப்பதாக கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் அதிகாரி அறிவித்தார்.

இரண்டாண்டுகளாக உள்நாட்டுப் போரால் மிகப்பெரும் மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்துவரும் சூடான் நாட்டில் 2 கோடியே 50 இலட்சம் பேர் தற்போது உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுவந்தாலும், இவ்வெண்ணிக்கை ஜூனுக்கும் செப்டம்பருக்கும் இடைப்பட்டக் காலத்தில் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது என காரித்தாஸ் அமைப்பின் அதிகாரி Philemon Hemadi கவலையை வெளியிட்டுள்ளார்.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள பல இலட்சக்கணக்கான மக்களுக்கு உணவு மற்றும் ஏனைய உதவிகளை வழங்கிவரும் காரித்தாஸ் அமைப்பு, தலைநகர் Khartoumல் இடம்பெற்றுவரும் வன்முறைகளால் எண்ணற்ற மக்கள் தங்கள் நிலம், பணம், வேலை என அனைத்தையும் இழந்து குடிபெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது குறித்த கவலையையும் வெளியிட்டுள்ளது.

அரிசி, மாவு, சர்க்கரை, உப்பு, எண்ணெய் ஆகியவை அடங்கிய பொட்டலங்களை கார்ட்டூம் மற்றும் எல்பெய்ட் மறைமாவட்டங்களில் உள்ள 12 பங்குதளங்களின் குடும்பங்களுக்கு வழங்கிவருகிறது காரித்தாஸ் அமைப்பு.

உணவுப் பொட்டலங்களை வழங்குவதுடன் பொது சமையல் அறைகளை உருவாக்கி, எவர் வந்தாலும் அவர்களுக்கு சமைத்த உணவை வழங்கும் பணியையும் செய்து வருகிறது காரித்தாஸ் அமைப்பு.

சூடான் நாட்டில் ஏறக்குறைய 7 இலட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் சத்துணவுக் குறைவால் துன்புற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 ஏப்ரல் 2025, 14:19