MAP

மியான்மாரில் பாதிப்புகள் மியான்மாரில் பாதிப்புகள் 

மியான்மாரில் போர் நிறுத்தத்திற்கு தலத்திருஅவை விண்ணப்பம்

கர்தினால் போ : மக்களுக்கு அவசரகால மருந்துக்கள், உணவு மற்றும் தற்காலிக முகாம்கள் தேவைப்படுகின்றன. போரிடும் துருப்புக்கள் தங்களுக்குள் இசைவைக் கொண்டாலொழிய நிவாரணப் பணிகளை நிறைவேற்ற முடியாது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நிலநடுக்கத்தால் 1700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள மியான்மார் நாட்டில், மக்களின் துயர்களைக் கருத்தில் கொண்டு உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்புவிடுமாறு அரசை விண்ணப்பித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

உள்நாட்டு மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மியான்மாரில் எவ்வித அரசு உதவியுமின்றி எண்ணற்ற மக்கள் நில அதிர்ச்சியின் விளைவுகளை அனுபவித்துவரும் நிலையில், போர் நிறுத்தம் என்பது இன்றியமையாதது எனக் கூறியுள்ளனர் மியான்மார் ஆயர்கள்.

புத்தமதத்தினரை பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மாரில் 2021ஆம் ஆண்டு முதல் ஆயுதம் தாங்கிய குழுக்கள் அரசுப் படைகளை எதிர்த்துப் போராடிவரும் நிலையில், இந்த பேரிடர் காலத்திலாவது இடைக்காலப் போர் நிறுத்தம் இடம்பெறவேண்டும் என அழைப்புவிடுத்தார் மியான்மார் ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் Charles Bo.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடி உதவிகளை எடுத்துச் செல்வதற்கு தல அதிகாரிகளுக்கும் வெளிநாட்டு உதவி நிறுவனங்களுக்கும் இந்த போர் நிறுத்தம் வழியாக உதவ முடியும் என உரைத்தார் கர்தினால்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால மருந்துக்கள், உணவு மற்றும் தற்காலிக முகாம்கள் தேவைப்படுவதாக உரைத்த கர்தினால் போ அவர்கள், போரிடும் துருப்புக்கள் தங்களுக்குள் இசைவைக் கொண்டாலொழிய நிவாரணப் பணிகளை நிறைவேற்ற முடியாது என்றார்.

நகர்களில் சுற்றிவரும் அரசு இராணுவ வண்டிகள் மக்களுக்கு எவ்வித உதவியையும் செய்யவில்லை எனவும், மீட்புப் பணிகளில் கூட அவை ஈடுபடவில்லை எனவும் குற்றம்சாட்டும் நிவாரணப் பணியாளர்கள், மக்கள் ஒருவருக்கொருவர் ஒருமைப்பாட்டுடன் உதவுகிறார்களேயொழிய அரசின் இருப்பு அங்கு இல்லை எனவும் தெரிவித்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஏப்ரல் 2025, 16:02