MAP

அரசர் தாவீதின் மெய்க்காப்பாளர் அரசர் தாவீதின் மெய்க்காப்பாளர்  

தடம் தந்த தகைமை – தாவீது அரசரைக் குறித்து மகிழ்ந்த இஸ்ரயேலர்

யோயாதாவின் மகன் பெனாயா, எகிப்தியன் கையில் தறிக்கட்டை போன்ற ஈட்டி இருக்கையில், இவர் ஒரு தடியோடு அவனுக்கு எதிராகச் சென்று அந்த எகிப்தியனின் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து அதே ஈட்டியால் அவனைக் கொன்றார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கப்சியேலைச் சார்ந்தவரும் வலிமைமிக்கவருமான யோயாதாவின் மகன் பெனாயா தீரச் செயல்கள் பல புரிந்தார். மோவாபிய வீரர் இருவரைக் கொன்றார்; மேலும், உறைபனி நாளில் ஒரு குழியினுள் இறங்கி அங்கிருந்த சிங்கத்தைக் கொன்றார். ஐந்து முழ உயரமுடைய ஒரு எகிப்தியனையும் இவர் கொன்றார். அந்த எகிப்தியன் கையில் தறிக்கட்டை போன்ற ஈட்டி இருக்கையில், இவர் ஒரு தடியோடு அவனுக்கு எதிராகச் சென்று அந்த எகிப்தியனின் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து அதே ஈட்டியால் அவனைக் கொன்றார். யோயாதாவின் மகன் பெனாயா இத்தகையவற்றைச் செய்து மாவீரர் மூவருள் பெயர் பெற்றவராய் இருந்தார். அம்முப்பதின்மருள் அவர் முதல்வராய் இருந்தாலும், முந்தின மூவருக்கு அவர் இணையானவர் அல்ல. அவரையே தாவீது தம் மெய்க்காப்பாளர்க்குத் தலைவராக நியமித்தார்.

போர்வீரர் அனைவரும் போர்க்கள அணி வகுப்பில், தாவீதை இஸ்ரயேல் அனைத்துக்கும் அரசராக ஏற்படுத்துமாறு உறுதிபூண்டவராய் எபிரோனுக்கு வந்தனர். மேலும், எஞ்சியிருந்த இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஒரே மனதாய் தாவீதையே அரசராக்க விரும்பினர். அவர்கள் அங்கே தாவீதோடு உண்டு குடித்து மூன்று நாள் தங்கினார்கள். அவர்கள் உறவினர் அவர்களுக்காக எல்லாவற்றையும் தயார் செய்திருந்தனர். மேலும், இசக்கார், செபுலோன், நப்தலி நிலப்பகுதிகளில் அவர்களுக்கு அருகே இருந்தவர்கள், கழுதைகள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், மாடுகள் ஆகியவற்றின் மீது ஏராளமான அப்பங்கள், உணவுக்கான மாவு, அத்திப்பழ அடைகள், திராட்சைப் பழ அடைகள், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றையும் மேலும் ஆடு மாடுகளையும் கொண்டு வந்தார்கள். இஸ்ரயேல் மகிழ்ச்சியில் திளைத்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 ஏப்ரல் 2025, 09:02