தடம் தந்த தகைமை - அன்பிலிருந்து அறிந்துக் கொள்வர்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர், (யோவா 13:35) என்றார் இயேசு.
பெரும்பாலும் இயேசு தம் போதனைகளைக் ‘கேட்கச் செவியுள்ளவர் கேட்கட்டும்’ என நிறைவு செய்வார். ஆனால் தாம் சாவைச் சந்திக்குமுன், சீடர்களோடு உரையாடுகையில் எல்லாவற்றையும் கட்டளையாகவே கொடுத்தார். அதனில் முன்னிற்பதே புதிய கட்டளையான அன்பு. அந்த அன்பில் நிலைத்தலும் பகிர்தலுமே தம்மைப் பின்தொடர்தலின் அடையாளங்கள் என அழுத்திச் சொன்னார். அதுவும் தம்மை அன்பு செய்யச் சொல்லாமல் அடுத்து வாழ்வோருக்கு அன்பு காட்டச் சொன்ன யுக்தி ஒரு யுகப்புரட்சிக்கு வித்திட்டது.
இயேசு கட்டளையாகத் தந்த அன்பு நம் புரிதல்களைக் கடந்தது. அதன் மூல வார்த்தையான ‘அகாப்’ ((Ahab) என்பதன் பொருள் ‘விரும்புதல்’ என்பதாகும். உண்மையான அன்பை 1. உடனிருப்பால், 2. உடன் உழைப்பால், 3. உறுதியூட்டலால், 4. உளம் தொடும் செயலால், 5. உளம் விரும்பும் பரிசுகளால், 6. உண்மையான வாழ்வால், 7. உயர் வழிகாட்டலால் 8. உண்மைத் தோழமையால் வெளிப்படுத்தலாம். இயேசு கற்றுத் தந்த அன்புக் கலைதான் இன்று நம்மை நொடிதோறும் நகர்த்துகிறது. எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு இருக்கிறது.
இறைவா! அன்பு மயமான உம் வாழ்வைப் போல் என் வாழ்வும் மிளிர வரம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்