MAP

கோதுமை கதிர் கோதுமை கதிர் 

தடம் தந்த தகைமை - கோதுமை மணி மண்ணில் விழுந்து...

கடவுளும் நாமும் இணைந்த இழப்பில் உருவாவதே புதிய உலகம். இழக்கத் துணியாமல், ‘எல்லாம் எனக்கு வேண்டும்’ என ஏங்கி வாழ்பவர் கிறிஸ்துவின் எதிரி மட்டுமன்றி மானிடக்குல எதிரி. இழப்பில் பிறப்பதே இறையாட்சி.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும். (யோவா 12:24)

கிறிஸ்துவைச் சார்ந்த ஒவ்வொருவரும் ஒரு விதை. விதையின் விருப்பம் களஞ்சியத்தில் ஓய்வு கொள்வது அல்ல, விருட்சமாகிப் பலன் ஈதலே. அந்நிலை அடைய காய்தல், மண்ணுள் புதைபடல், தோல் களைதல், உருவிழத்தல், மண்ணோடு பிணைந்து புதுத் தளிராய் முளைத்தல் எனப் பல கட்டங்களைத் தாண்ட வேண்டும். கிறிஸ்தவ வாழ்வு என்பது இழப்பின் இயக்கம். இழக்காதவரைக்கும் இறையாட்சி என்பது வெறும் கனவே.

இழப்பு வாழ்வில் தங்களை இணைத்தவர்களின் தலையாயக் கடமைகளுள் முதலாவது கடவுளுக்குள் தம்மை இழப்பது, இரண்டாவது முகமூடிகளைக் களைவது, மூன்றாவது சுயநலம் துறக்கத் தயாராவது, நான்காவது உலகை உருமாற்ற முழுமையாய் அர்ப்பணிப்பதும் ஆகும். கடவுளும் நாமும் இணைந்த இழப்பில் உருவாவதே புதிய உலகம். இழக்கத் துணியாமல், ‘எல்லாம் எனக்கு வேண்டும்’ என ஏங்கி வாழ்பவர் கிறிஸ்துவின் எதிரி மட்டுமன்றி மானிடக்குல எதிரி. இழப்பில் பிறப்பதே இறையாட்சி.

இறைவா! மண்ணோடு போராடி மடிந்து தளிர்க்கும் விதைபோல நான் என்னோடு போராடி முழு அர்ப்பணராகும் அருள்பலம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 ஏப்ரல் 2025, 07:40