MAP

தன் சீடர்களுடன் இயேசு தன் சீடர்களுடன் இயேசு 

தடம் தந்த தகைமை - என் அன்பில் நிலைத்திருங்கள்

ஆழமான அன்பு தன்னை இழந்துகொண்டே இருக்கும். அந்த இழப்பே இயேசுவின் சீடர் என்பதன் அடையாளம். நம் அன்புகள் இழந்தவைகளால் பெற்றவையா, எதிர்பார்ப்புகளால் ஆனவையா? அன்பில் நிலைத்தல் என்பது இயேசுவில் வாழ்தலே.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது. என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள், (யோவா 15:8&9) என்றார் இயேசு.

சீடர் என்றால் ‘கற்றுக் கொள்பவர்’, ‘பின்பற்றுபவர்’, ‘கட்டளைகளைக் கடைபிடிப்பவர்’ எனப் பொருள் ஏற்கலாம். இது ஒரு மாணவர் நிலை. அம்மாணவரின் அர்ப்பணத்தையே சீடத்துவம் என்கின்றோம். அச்சீடத்துவத்தின் தனிச்சிறப்பு ஏதெனில் மிகுந்த கனிதருதல். குருவோடும், குரு காட்டும் கடவுளோடும், மக்களோடும் ஒன்றித்து வாழ்தலும் பணி தொடர்தலுமே சீடரின் கடமை. இயேசு வானகத் தந்தையின் மகனாக மட்டுமன்றி ஓர் அர்ப்பணச் சீடராகவே தன் வாழ்வை வடிவமைத்துக்கொண்டார்.

சீடத்துவம் என்பது அப்பழுக்கற்ற அன்பில் கரைவது. குருவின் வாழ்வோடும் கொள்கைகளோடும் வழிகாட்டுதல்களோடும் தன்னை முழுமையாக இணைப்பது. ஆழ்ந்த, இணைந்த வாழ்வில்தான் இமாலயச் சாதனைகளைச் சாதிக்க முடியும். சீடர் இயேசுவின் அன்பில் நிலைத்தல் என்பது வாழும் சமூகத்தில் தன்னை உப்பாய் ஆக்குதலாகும். ஆழமான அன்பு தன்னை இழந்துகொண்டே இருக்கும். அந்த இழப்பே இயேசுவின் சீடர் என்பதன் அடையாளம். நம் அன்புகள் இழந்தவைகளால் பெற்றவையா எதிர்பார்ப்புகளால் ஆனவையா? அன்பில் நிலைத்தல் என்பது இயேசுவில் வாழ்தலே.

இறைவா! உம் அன்பில் நிலைப்பதும், அந்த அன்பைப் பகிர்வதும் என் தலையாய பணி என புரிந்து வாழச் செய்யும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 ஏப்ரல் 2025, 12:24