MAP

பங்களாதேஷ் கத்தோலிக்கர் பங்களாதேஷ் கத்தோலிக்கர்  (AFP or licensors)

பங்களாதேஷ் பொதைப்பொருள் சிறைக்கைதிகளிடையே திருஅவை பணி

போதைப்பொருளுக்கு அடிமையான சிறைக்கைதிகளிடையே பணியாற்ற அரசின் அனுமதி கேட்டு பல ஆண்டுகள் முயற்சித்தபின் இப்போதுதான் இந்த அனுமதி தலத்திருஅவையின் போதைப்பொருள் தடுப்பு மையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து விடுபடும் திட்டங்களுடன் பயிற்சி வகுப்புகளையும் சிகிச்சை முறைகளையும் தலைநகர் டாக்காவின் மத்திய சிறையில் செயல்படுத்த கத்தோலிக்க உதவி மையத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது பங்களாதேஷ் அரசு.

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து விடுவிக்கும் நோக்கத்துடன் பங்களாதேஷ் நாட்டில் பணியாற்றிவரும் கத்தோலிக்கத் திருஅவையின் போதைப்பொருள் தடுப்புமையம், தற்போது அரசின் அனுமதியுடன் பங்களாதேஷின் Keraniganj  மத்தியச் சிறையில் உள்ள சிறைக் கைதிகளுக்கு பயிற்சி வகுப்புக்களைத் துவக்க உள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையான சிறைக்கைதிகளிடையே பணியாற்ற அரசின் அனுமதி கேட்டு பல ஆண்டுகள் முயற்சித்தபின் இவ்வாரத் துவக்கத்தில்தான் இந்த அனுமதி பங்களாதேஷ் உள்துறை அமைச்சகத்திலிருந்து கிட்டியுள்ளதாக உரைத்த தலத்திருஅவையின் போதைப்பொருள் தடுப்பு மையத்தின் இயக்குனர் அருள்சகோதரர் பிரான்சிஸ் நிர்மல் கோமஸ் அவர்கள், சிறைகளில் கைதிகளோடு உழைத்து அவர்களை இப்பழக்கத்திலிருந்து விடுவிக்க இது நல்லதொரு வாய்ப்பு என எடுத்துரைத்தார்.

1988ஆம் ஆண்டு திருச்சிலுவை துறவு சபையின் அருள்சகோதரர் Ronald Drahozal என்பவரால் துவக்கப்பட்ட தலத்திருஅவையின் இந்த போதை தடுப்பு சிகிச்சை மையம் இதுவரை போதைப்பொருட்களுக்கு அடிமையான ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சையளித்து அவர்களை அப்பழக்கத்திலிருந்து விடுவித்துள்ளது.

இது தவிர, இக்கத்தோலிக்க  மையம், தெருவோரச் சிறாருக்கான நான்கு மையங்களையும் நடத்தி வருகிறது.

பங்களாதேஷின் 17 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையில் 80 இலட்சம்  பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தகவல் தொடர்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

2018ஆம் ஆண்டில் பங்களாதேஷ் நாடு போதைப்பொருளுக்கு எதிராக எடுத்த தீவிர நடவடிக்கைகளில் 300க்கும் மேற்பட்ட பொதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டனர், மற்றும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதுச் செய்யப்பட்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஏப்ரல் 2025, 15:19