வாரம் ஓர் அலசல் – மார்ச் 25. உருவாகியும் பிறவா குழந்தைகள் தினம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஒரு தாயின் வயிற்றில் உருவாகும் கருவுக்கு உயிரில்லாத ஜடமான ஒரு பெயரை எப்போதாவது சூட்டியது குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ‘கரு’ என்றும், ‘சிசு’ என்றும், ‘உயிர் வளர்கிறது’ என்றுதான் நாம் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். உயிர் இல்லை என்றால் அது வளர முடியாது. ஆகவே உயிர் உள்ள ஒரு சிசுவை தாயின் வயிற்றிலேயேக் கொல்வதற்கு, அல்லது கருவறையை கல்லறையாக மாற்ற நமக்கு அனுமதி தந்தது யார்? எத்தனை காரணங்கள் இருந்தாலும் உயிரைக் கொல்ல நமக்கு உரிமையில்லை என்பதுதான் உண்மை. இன்றைய உலகம் கருக்கலைத்தலை தனிமனித உரிமைகளுள் ஒன்றாகப் பார்க்கிறது. கருக்கலைத்தல் என்பது, அடிப்படையான நலச்சேவை என்றும், அடிப்படை மனித உரிமை என்றும் காரணம் காட்டி அதனை அனுமதிக்கின்றனர். கருவில் வளரும் குழந்தையின் வாழ்வதற்கான உரிமையை மறந்து, கருக்கலைத்தலை ஒரு பெண்ணிற்குரிய நலச்சேவையாகவும், உரிமையாகவும் மட்டும் நோக்க அழைப்பு விடுப்பது நமக்கே நியாயமாகத் தெரிகின்றதா? தனக்காகக் குரலெழுப்ப முடியாத ஒரு சிசுவின் பக்கம் நிற்காமல், சுயநல உரிமைகளுக்காகப் போராடும் ஒரு மனிதனின் பக்கம் நிற்பது நமக்கே சுயநலமாக, ஒரு பக்கச் சார்புடையதாக, நியாயமற்றதாகத் தோன்றவில்லையா? கருவில் வளரும் குழந்தை, தான் பாதுகாக்கப்படுவதற்கும், வாழ்வதற்குமான உரிமையை கொண்டிருப்பதால், கருக்கலைத்தல் என்பது, குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகவோ, சாதாரண நலச்சேவையாகவோ மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்போம். கருக்கலைத்தலுக்குரிய மனித உரிமை என்பது, எந்த அனைத்துலக மனித உரிமை சட்டத்திலோ, அனைத்துலக ஒப்பந்தத்திலோ ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை முதலில் நாம் புரிந்துகொள்வோம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கருக்கலைத்தலை ஒரு நலச்சேவையாக கொணர முயல்வதால், மனச்சான்றின்படி செயல்பட முனைந்து, இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் மருத்துவப் பணியாளர்கள் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஏனெனில் உயிர்களைக் கொல்வதில் அனைவருக்கும் உடன்பாடில்லை. அரசின் சட்டம் உயிர்களை கருவிலேயேக் கொல்ல அனுமதிக்கும்போது, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் இதற்கு எதிராகச் செல்லமுடியாது என்பது உண்மை. ஒன்று கொள்கையை தளர்த்த வேண்டும் அல்லது வேலையை விடவேண்டும். இப்படிப்பட்ட ஒரு சூழலில் சிக்கிக் கொண்டுதான் உலகம் உழன்றுக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மை மக்கள் விரும்புவது, அது தவறாகவே இருந்தாலும், ஏனையோர் அதோடு ஒத்திணங்கிப் போக வேண்டிய ஒரு கட்டாய நிலை உருவாக்கப்படுவதுதான் இங்கு வேதனையாக இருக்கிறது. ஆனால் ஒன்றை நாம் மிக எளிதாக மறந்து விடுகிறோம். அதாவது, ஓர் உரிமையை வலியுறுத்திக் கூறும்போது, அதனோடு தொடர்புடைய மற்ற அனைத்து உரிமைகளின் சட்டரீதியான, மற்றும் அறநெறி சார்ந்த சமநிலை காப்பாற்றப்பட வேண்டும் என்பதைத்தான்.
கருக்கலைத்தல் குறித்தும், கருவில் வளரும் சிசுவின் வாழ்வதற்கான உரிமை குறித்தும் ஏன் திடீரென்று பேசவருகிறோம் என்பது குறித்து நீங்கள் சிந்திக்கலாம். ஆம் அதற்கும் ஒரு காரணம் இருக்கின்றது. மார்ச் 25ஆம் தேதி, உயிராக உருவாகி ஆனால் உலகில் பிறப்பெடுக்காத குழந்தைகளுக்கான தினம். ஒவ்வோர் ஆண்டும் இந்நாளில் கருவறையில் உருவாகி, வெளிச்சத்தைக் காணாமலேயே இருளுக்குள் மடிந்துபோகும் குழந்தைகளை நாம் நினைவுகூர்கிறோம். இந்த நாளை நாம் ஏன் மார்ச் 25ஆம் தேதி சிறப்பிக்கின்றோம் என்பதற்கும் ஒரு காரணம் இருக்கின்றது. மார்ச் 25ஆம் தேதி இயேசு பிறப்பு குறித்த மங்கள வார்த்தை அறிவிப்பு இடம்பெற்ற நாள். அதாவது, டிசம்பரில் பிறக்கவிருக்கும் இயேசு ஒன்பது மாதங்களுக்கு முன்னர் மார்ச் 25ஆம் தேதிதான் கபிரியேல் தூதுவரால் அறிவிக்கப்பட்டார். இந்த மார்ச் 25ஆம் தேதிதான் ஒரு காலத்தில் புத்தாண்டு தினமாகவும் சிறப்பிக்கப்பட்டதாக வரலாறு உண்டு. ஒளியை காண அனுமதிக்கப்படாமல், இருளுக்குள்ளேயே மறைந்துவிட்ட குழந்தைகளை நம்மால், அதாவது மனச்சான்று உள்ள எவராவது மறக்க முடியுமா?. கருவில் வளரும் குழந்தைகளின் உரிமைகளுக்காக எல்லா திருத்தந்தையர்களும் குரல் கொடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், இவர்களுக்காக குரல் எழுப்புவதை தன் வாழ்வின் முக்கியக் குறிக்கோளாகவேக் கொண்டிருந்தார். மனிதனின் மாண்பு எந்த ஒரு சூழலிலும் மதிக்கப்பட வேண்டும், கட்டிக்காக்கப்பட வேண்டும் என்பதற்கு ஓங்கிக் குரல் கொடுத்தார். கத்தோலிக்கர்கள் பெருமெண்ணிக்கையில் வாழும் தென் அமெரிக்காவில் வாழ்வுக்கு ஆதரவான இயக்கம் 90ஆம் ஆண்டுகளில் உருவாகியபோது அதனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதற்கு ஆதரவு அளித்தது மட்டுமல்ல, பிறவா குழந்தைகளுக்கென ஒரு நாளையும் உருவாக்கினார், அதாவது, இயேசு கருவில் உருவாகிய அந்த நாளை. இயேசு இறைமகன் என்ற வகையில் அவர் நேரடியாகவே இவ்வுலகிற்கு வந்திருக்கலாம், ஆனால் ஒரு தாயின் வயிற்றில் கருவாகி அங்கேயே வளர்ந்து பிறப்பெடுக்க அவர் ஆவல் கொண்டார். ஒவ்வொரு குழந்தையின் வாழ்வதற்கான உரிமையை தன் தாயின் வயிற்றிலிருந்து பெறவேண்டும், அந்த உரிமையை தன் தாயிடமிருந்தே பெறவேண்டும் என கற்றுக்கொடுக்க விரும்பினார். அதனால்தான் இறைவனே மனிதனாக, குரல் எழுப்பமுடியாத குழந்தையாக பிறப்பெடுத்தார்.
ஆனால், இன்றைய உலகில் நடப்பதென்ன? கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் 300 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் கருவிலேயே சமாதியாக்கப்பட்டுள்ளனர். இந்த கொலைகளுக்கு சாதி, மதம், இனம், நாடு, மொழி என்ற பாகுபாடு இல்லை, எல்லாருக்கும் இங்கு ‘சுயநலம்’ என்பது பொதுவாக இருக்கிறது. WHO என்னும் உலக நலவாழ்வு நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒவ்வோர் ஆண்டும் இவ்வுலகில் 7 கோடியே 30 இலட்சம் கருக்கலைத்தல்கள் இடம்பெறுகின்றன. அதாவது, கருவில் வளரும் குழந்தைகளுள் 29 விழுக்காட்டு குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றன என இந்த ஐ.நா. அமைப்பே புள்ளிவிவரங்களோடு கூறும்போது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் இரண்டு இலட்சம் சிசுக்கள் தாயின் வயிற்றிலேயே கொல்லப்படுவது நம் மனச்சான்றிற்கு விடப்படும் கேள்வி. அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் ஒவ்வொரு நாளும் 1500 முதல் 2500 கருக்கலைத்தல்கள் இடம்பெறுகின்றன. 15 வயதிற்கும் 44 வயதிற்கும் இடைப்பட்ட வயதில் கருக்கலைத்தலை மேற்கொள்வது எண்ணிக்கை அளவில் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. இதில் வியட்நாம், மடகாஸ்கர், கினி பிசாவ் ஆகிய நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. மெக்சிகோ மற்றும் போர்த்துக்கல்லில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே கருக்கலைத்தல்கள் இடம்பெறுகின்றன. வியட்நாமில் குழந்தை பெறும் தகுதியுடைய பெண்களுள் ஆயிரம் பேருக்கு 64 கருக்கலைத்தல்கள் இடம்பெறுவதாகவும், மடகாஸ்கரில் இது 62 என்றும், கினி பிசாவ் நாட்டில் இது 59 என்றும், கியுபாவில் 55, கேப் வெர்தே நாட்டில் 49 என்றும் கூறும் ஐ.நா.வின் அறிக்கை, இந்தியாவில் இது 48 எனவும் தெரிவிக்கிறது. அதாவது, ஒவ்வொரு ஆயிரம் பெண்ணுக்கு 48 கருக்கலைத்தல்கள் இடம்பெறுகின்றன. அதேவேளை, குழந்தை பிறப்பு விகிதம் என்று பார்க்கும்போது, மால்ட்டா நாடு, இஸ்பெயின், இத்தாலி போன்றவை மிகப் பின்னணியில் இருக்கின்றன. பொதுவாகவே ஐரோப்பாவில் குழந்தை பிறப்புக்கள் குறைந்தே வருகின்றன.
இப்படிப்பட்ட ஒரு பின்னணியில்தான் உலகத்தின் நல்மனதுகொண்டோர் விழித்துக் கொள்ள வேண்டிய ஓர் அவசியம் ஏற்பட்டது. வருங்காலத் தலைமுறையைக் காக்கவும், மனித மாண்பு குறித்த விழிப்புணர்வை ஊட்டவும் சில நாடுகள், ஆம், கிறிஸ்தவ நாடுகள் முன்வந்தன. 1993ஆம் ஆண்டில் முதன் முதலில் எல் சல்வதோர் நாட்டில் ‘பிறப்பதற்கான உரிமை தினம்’ சிறப்பிக்கப்பட்டது. 1998ஆம் ஆண்டுதான் மார்ச் 25ஆம் தேதியை அர்ஜெண்டினா நாட்டு அரசுத் தலைவர் Carlos Menem அவர்கள்தான் தாயின் வயிற்றில் உருவாகி, ஆனால் பிறக்காத குழந்தைகளுக்கான தினம் என அறிவித்தார். இதற்கு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களும் முக்கியக் காரணம். இதனை சிலே, குவாத்தமாலா, கோஸ்டா ரிக்கா, நிக்கராகுவா, தொமினிக்கன் குடியரசு, பெரு, பரகுவாய், பிலிப்பீன்ஸ், ஹொண்டூராஸ், ஈக்குவதோர், புவோர்தோ ரிக்கோ ஆகியவை அடுத்தடுத்த ஆண்டுகளில் சிறப்பிக்கத் துவங்கின. அதன் பின்னர் இந்த நாள் அனைத்துலக அளவில் அங்கீகாரம் பெற்றது.
இந்த உலகில் இரு விதமான குழுக்களை நாம் பார்க்கிறோம். ஒன்று, நாம் இதுவரை பேசிவரும் வாழ்வுக்கான உரிமை குழு. இன்னொன்று, இதற்கு நேர் எதிரானது, அதாவது கருக்கலைத்தலை ஆதரிப்பது. இவர்கள், தேர்ந்தெடுப்பதற்கான மனிதனின் உரிமை சார்ந்த குழு என்று தங்களைக் கூறிக்கொள்கின்றனர். தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடவில்லை, ஆனால் கரு உருவாகி விட்டது, இதனை அகற்றும் உரிமை எங்களுக்கில்லையா என இவர்கள் வாதிடுகின்றனர். பொருளாதார கஷ்டம் இருக்கும்போது, இந்தக் குழந்தையை வளர்க்க முடியாது, நலப்பிரச்சனைகள் இருக்கின்றன, சமூகப் பொருளாதார காரணங்கள் உள்ளன என காரணங்களைக் கூறி கருக்கலைத்தலை நியாயப்படுத்துகின்றனர். ஆனால், உருவாகிவிட்ட ஓர் உயிரைக் கொலைச் செய்ய எந்த தர்க்கவாதத்தாலும் மனச்சான்றை திருப்திப்படுத்த முடியாது. ஒரு மனிதனின் உரிமை என்பது, இன்னொரு உயிரைக் கொல்லும் அளவுக்குச் செல்ல முடியாது. எந்த ஓர் உயிரும் கருவில் உருவானது முதல் மதிக்கப்பட வேண்டும் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த உயிருக்கு குரலாக இருக்க வேண்டியது நமது கடமை.
நம்மால் இயன்றதை நாம் ஆற்றுவோம். மனித மாண்பு குறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவரிலும் ஏற்படுத்துவோம். பொருளாதார நிலைகளால் துன்புறும், அதேவேளை பிரசவத்திற்காகக் காத்திருக்கும் குடும்பங்களுக்கு நம்மால் ஆன உதவிகளை வழங்குவோம். அவர்களுக்காக இறைவேண்டல் செய்வோம். உருவாகி, ஆனால் பிறக்க முடியாத குழந்தைகளின் உரிமைகளை புரிந்து கொள்வோம். அவர்களுக்கும் வாழ்வதற்கான உரிமை உள்ளது. அவர்களும் மனித குடும்பத்தின் ஒரு பகுதிதான். கருவைக் கலைப்பது என்பது, மனித உயிர்களுக்கு எதிரான வன்முறை, அது ஒரு கொலையன்றி, வேறில்லை. அந்த பிஞ்சு சிசுக்களைக் கொஞ்சம் எண்ணிப் பார்ப்போம். அவர்களும் வாழத்தான் விரும்புகிறார்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்