MAP

சிரியாவில் போர்ச்சூழல் சிரியாவில் போர்ச்சூழல்  

உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாகத் தொடரும் சிரியா!

சிரியாவில் அத்தியாவசிய சேவைகள், நலப்பணிகள் மற்றும் தூய்மையான நீர் கிடைப்பது மிகவும் குறைவாக உள்ளதுடன், பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர் : யுனிசெஃப் அறிக்கை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அரசுத் தலைவர் பஷார் அல்-அசாத்தின் சர்வாதிகாரம் வீழ்ச்சியடைந்த 100 நாட்களுக்குப் பிறகு, மார்ச் 18, இச்செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்பட்ட அண்மைய யுனிசெஃப் அறிக்கையின்படி, சிரியா உலகின் மிகக் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாக உள்ளது என்று எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் 75 இலட்சம் குழந்தைகள் உட்பட 1 கோடியே 67 இலட்சம் மக்களுக்கு உதவி தேவைப்படுவதாக அவ்வறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ள அந்நிறுவனம், 74 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், அவர்களில் பாதி பேர் குழந்தைகள் என்றும் பெரும் கவலை தெரிவித்துள்ளது.

இந்த நெருக்கடி பரவலான துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், குழந்தைகள் கடுமையான துயரத்தையும், ஊட்டச்சத்து குறைபாட்டையும், வெடிக்காத வெடிபொருட்களின் அச்சுறுத்தலையும் எதிர்கொள்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது அதன் அறிக்கை.

கல்வி சவால்கள் குறிப்பிடத்தக்கவை என்றும், இலட்சக் கணக்கான குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறுகின்றனர் அல்லது பள்ளியை விட்டு வெளியேறும் ஆபத்தில் உள்ளனர் என்றும் தெரிவிக்கிறது அவ்வறிக்கை.

மேலும் அத்தியாவசிய சேவைகள், நலப்பணிகள் மற்றும் தூய்மையான நீர் கிடைப்பது மிகவும் குறைவாக உள்ளது என்று எடுத்துக்காட்டியுள்ள அந்நிறுவனத்தின் அறிக்கை, வறுமை பரவலாக உள்ளது எனவும், பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 மார்ச் 2025, 15:43