நைஜீரியாவில் கடத்தப்பட்ட அருள்பணியாளர் படுகொலை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நைஜீரியாவின் கஃபஞ்சன் மறைமாவட்டத்தில் சில்வெஸ்டர் ஒகேச்சுக்வு என்ற கத்தோலிக்க அருள்பணியாளர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று செய்திக் குறிப்பொன்று தெரிவிக்கின்றது.
மார்ச் 4, செவ்வாய்க்கிழமை மாலை கடத்தப்பட்ட அவர், மார்ச் 5, திருநீற்றுப் புதனன்று இறந்து கிடந்தார் எனக் கூறும் அச்செய்திக் குறிப்பு, தெளிவான நோக்கம் இல்லாமல் நடந்த அவரது கொலை, உள்ளூர் கிறிஸ்தவச் சமூகத்தைப் பெரிதும் பாதித்துள்ளது, ஏனெனில் அவர் ஓர் அர்ப்பணிப்புள்ள மற்றும் அன்பான அருள்பணியாளராக இருந்தார் எனவும் உரைக்கிறது.
இந்த ஆண்டு, நைஜீரியாவில் ஐந்து அருள்பணியாளர்களும் இரண்டு துறவு சபை அருள்சகோதரிகளும் கடத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் அருள்பணியாளர் சில்வெஸ்டர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளார் என்று கூறுகிறது அச்செய்தி.
கடந்த பிப்ரவரி 22, சனிக்கிழமையன்று கடத்தப்பட்ட இரண்டு அருள்பணியாளர்களை இன்னும் காணவில்லை எனத் தெரிவிக்கும் அச்செய்திக் குறிப்பு, கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும், 13 அருள்பணியாளர்கள் கடத்தப்பட்டனர் என்றும், ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
நைஜீரியா குறிப்பிடத்தக்க பாதுகாப்பின்மையை எதிர்கொண்டு வருகிறது என்றும், இதில் மத பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் பணத்திற்காகக் கடத்தல்களில் ஈடுபடும் கும்பல்களும் அடங்கும் எனவும் எடுத்துக்காட்டுகிறது இச்செய்தி.
இந்நிலையில், கத்தோலிக்கத் திருஅவை மற்றும் ACN எனப்படும் தேவையில் இருக்கும் தலத்திருஅவைக்கு உதவும் அமைப்புகள் உட்பட அருள்பணியாளர் சில்வெஸ்டருக்காக இறைவேண்டல் செய்ய அழைப்பு விடுத்துள்ள அதேவேளை, பாதுகாப்பை மேம்படுத்தவும் அரசை வலியுறுத்தியுள்ளன என்று கூறுகிறது அச்செய்தி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்