தவக்காலம் முதல் ஞாயிறு : சோதனைகளைச் சாதனைகளாக்குவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. இச 26: 4-10 II. உரோ 10: 8-13; III. லூக் 4: 1-13)
தவக்காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை இன்று நாம் தொடங்குகிறோம். இன்றைய வாசகங்கள், இயேசுவின் வழியில் சோதனைகளைச் சாதனைகளாக்க வேண்டுமென நமக்கு அழைப்பு விடுக்கின்றன. விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி நாம் எல்லாரும் நன்கு அறிவோம். சோதனைகள் வழியாகப் பல சாதனைகளை நிகழ்த்தியவர் அவர். பல்வேறு சோதனைகளைத் திரும்பத் திரும்ப செய்து புதியவற்றைக் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தார். இப்படி சோதனைகளை வென்றவருக்கு அவருடைய 67-வது வயதில் மிகப்பெரும் சோதனை ஒன்று காத்திருந்தது. ஒருநாள் அவர் ஆசை ஆசையாக உருவாக்கி வைத்திருந்த அவருடைய ஆய்வகம் திடீரெனத் தீப்பற்றி எரியத்தொடங்கியது. அந்தத் தீயில் அவர் கண்டுபிடித்து வைத்திருந்த எல்லா பொருள்களும் எரிந்து சாம்பலாயின. அந்தத் தீயை அணைப்பதற்கே பல மணி நேரங்கள் பிடித்தன. அப்போது அதைப் பார்த்துக்கொண்டிருந்த அவருடை மகன் அதிர்ந்துபோனான். இந்த மிகப் பெரும் சோதனையிலிருந்து தன் அப்பா எப்படி மீளப்போகிறார் என்று அவன் வேதனையால் விம்மி வெடித்துக்கொண்டிருந்தபோது, “கவலைப்படாதே மகனே, பழையவற்றையெல்லாம் கழித்துவிட்டோம், நாளைமுதல் புதியவற்றைக் கண்டுபிடிப்போம்” என்று நம்பிக்கையுடன் கூறிவிட்டு நிம்மதியாகத் தூங்கச் சென்றார். மேலும் எடிசனுக்கு நிகழ்ந்த இந்த மாபெரும் இழப்பையும் சோதனையையும் கண்டு அவருடை நண்பர்கள் முதற்கொண்டு அனைவரும் நம்பிக்கை இழந்தனர். அத்துடன், மாபெரும் சோதனையை ஏற்படுத்திய இந்தத் துயரத்திலிருந்து அவர் எப்படி மீளப்போகிறார் என்று கலங்கித் தவித்தனர். ஆனால், எடிசன் கொஞ்சம்கூட மனம் தளரவே இல்லை. இந்தச் சோதனையையும் அவர் சாதனையாக்கிக் காட்டினார். ஆம், இந்தச் சம்பவத்திற்குப் பின்பு அவர் கண்டுபிடித்ததுதான் ஃபோனோகிராஃபி என்ற கருவி. “உன் வாழ்க்கையில் வரும் சவால்கள் உனக்கு ஏற்படும் சோதனைகள் அல்ல. அவைகள் உன்னை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் சாதனைகள். விழு, ஏழு, போராடு, நில், கவனி, சவாலை சமாளி. சாதனைகள் உனக்கு சாத்தியமாகும்” என்கிறார் கவிஞர் ஒருவர். எத்தனை சோதனைகள் நமது வாழ்க்கையில் வந்தாலும், நாம் மனம் தளராமல் கொண்ட கொள்கையில் உறுதியுடன் நின்றால் சோதனைகள் தோற்றுப்போய் ஓடிவிடும்.
இயேசுவின் பாலைநில சோதனை
தவக்காலத்தில் முதல் ஞாயிறான இன்று, லூக்கா நற்செய்தியிலிருந்து இயேசு பாலைநிலத்தில் சோதிக்கப்படுதல் குறித்த நிகழ்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஒத்தமை நற்செய்தியாளர்கள் மூவருமே இந்நிகழ்வு குறித்துப் பேசுகின்றனர் (காண்க. மத் 4:1-11; மாற் 1:12-13). ஆனால் மாற்கு இந்நிகழ்வை மிகக் குறுகியதாகக் கொடுக்கும் அதேவேளை, மத்தேயுவும் லூக்காவும் சற்று விரிவாகவும் ஒத்த கருத்துக்களுடனும் எடுத்துக்காட்டுகின்றனர். மூவருக்குள்ளும் காணப்படும் ஒரு ஒற்றுமை என்னவென்றால், "இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்" என்பதுதான். இது நமது சோதனை வேளைகளில் தூய ஆவியார் நம் உடன் இருந்து நம்மை வழிநடத்துகிறார் மற்றும் நமக்கு வெற்றியைத் தருகின்றார் என்ற நம்பிக்கை செய்தியை நமக்குத் தருகின்றது. இயேசுவுக்கும் சாத்தானுக்கும் இடையே நிகழும் உரையாடலை பாலைநில சோதனை விவரிக்கின்றது. இயேசு பாலைநிலத்தில் 40 நாள்கள் சோதிக்கப்பட்டார் என்பது இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் 40 நாள்கள் சோதிக்கப்பட்டதை நமக்கு நினைவூட்டுகிறது. அதிகாரத்தைக் கைப்பற்றவும், அரசுரிமையை ஏற்கவும், அரசராக மக்களை ஆட்சி செய்யவும் அலகை இயேசுவைத் தூண்டுகிறது. ஆனால் இந்தச் சோதனைகளை வெற்றிகொள்ள இயேசு கடுமையாகப் போராடவேண்டியிருந்தது. இயேசுவுக்கும் சாத்தானுக்குமான இந்த உரையாடலில் இயேசு வெற்றிபெற்று இறைத்தந்தைக்குத் தனது பிரமாணிக்கத்தை உறுதிப்படுத்துகிறார். ஆனால் ஏவாளுக்கும் அலகைக்குமான உரையாடலில் (காண்க. தொநூ 3:1-7), அவள் பாம்பின் நயவஞ்சகமான வார்த்தைகளுக்கு அடிமையாகி ஏமாந்துபோய் கடவுளுக்கான தனது பிரமாணிக்கத்தில் தவறிவிடுகிறாள். அவளின் சொல்லைக்கேட்டு ஆதாமும் ஏமாந்து போகிறான். ஆக, இருவருமே அலகையின் சூழ்ச்சிநிறை சோதனையில் சிக்குண்டு கடவுள்மீதான தங்களின் பிரமாணிக்கத்தில் தவறி விடுகின்றனர். இந்தப் பாலைநில சோதனையில் அலகை இயேசுவுக்கு மூவிதமான சோதனைகளைக் கொடுக்கிறது.
முதல் சோதனை
முதலாவதாக, அலகை அவரிடம், “நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்” (வச. 3) என்கிறது. இந்தச் சோதனை நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடாமல் பசியுற்று இருந்ததால், அதனைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள விரும்புகின்றது அலகை. ஆனால் அதனிடம் இயேசு, “‘மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை’” என மறைநூலில் எழுதியுள்ளதே” (வச. 4) என்று மறுமொழி தருகின்றார். உலகம் தோன்றியதுமுதல் இன்றுவரை பசிதான் மனிதரின் பலவீனமாக இருக்கின்றது. 'பசி வந்துவிட்டால் பத்தும் பறந்து போகும்' என்பார்கள். பசியைப் போக்கியே பலர் தங்கள் காரியங்களைச் சாதித்துக்கொள்வதைப் பார்க்க முடிகிறது. பல நேரங்களில் உணவு நம் உணர்வுகளையெல்லாம் அப்படியே மழுங்கடித்துவிடுகிறது. மேலும் அது நமது மானம், மரியாதை, கெளரவம் எல்லாவற்றையும் விலைபேசிவிடுகிறது. பலவேளைகளில், உணவு வழியாகவே நம் உயிருக்கும் உலை வைக்கப்படுகிறது. வாழ்க்கைக்கு உணவு தேவை என்பதைவிட உணவுக்காகவே வாழ வேண்டும் என்ற மலிவான சிந்தனைகளால் பலரின் உண்மை வாழ்வு உருக்குலைந்து போய்விடுகிறது. பலவேளைகளில் பசி நம் கண்களை மறைத்து, நமது இலட்சிய வழியை மாற்றிவிடுகிறது. இதன் காரணமாகவே இன்றைய உலகின் தலைவர்களும் அரசியல்வாதிகளும் போர்கள், மோதல்கள், வன்முறைகள், கலவரங்கள் போன்றவற்றால் மக்களுக்கு செயற்கையாக வறுமையையும் பசியையும் ஏற்படுத்தி அவர்களைக் தங்களின் கட்டுக்குள் வைத்துக்கொள்ள விரும்புகின்றனர்.
இன்றைய முதல் வாசகத்தில், எகிப்தில் தாங்கள் அடிமைகளாக வதைத்தொழிக்கப்பட்டபோது, ஆண்டவராம் கடவுள் அவர்களின் துயர நிலைக் கண்டு, ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்து பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை அளித்தார் என்பது குறித்து பலிபீடத்தில் முதல் பலனை அளிக்கும் வேளை அறிக்கையிட்டுக் கூறவேண்டும் என்பதை அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகின்றார் மோசே. காரணம், இஸ்ரயேல் மக்கள் தங்கள் வழிப்பயணத்தின்போது நீரும் உணவுமின்றி தவித்த வேளைகளில் எல்லாம் நன்றி மறந்து கடவுளுக்கு எதிராகச் செயல்பட்டனர் என்பதைப் பார்க்கின்றோம். (காண்க. விப 16:2-15; எண் 14:1-2). அவர்களால் இந்த சோதனைகளில் வெற்றிபெறமுடியவில்லை குறிப்பாக, எகிப்திலிருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குச் செல்லும் வழியில் இஸ்ரயேல் மக்கள் 15 முறைகள் கடவுளுக்கு எதிராக முறையிட்டனர் மற்றும் முணுமுணுத்தனர் என்று திருவிவிலியம் எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் இயேசு, மனிதரின் வாழ்வு உணவை மையப்படுத்தி அமைவதில்லை மாறாக, பிரமாணிக்கத்தையும் இலட்சியத்தையும் மையப்படுத்தி அமைகிறது என்பதை எடுத்துக்காட்டி சாத்தானின் முதல் முயற்சியைத் தோற்கடிக்கின்றார்.
இரண்டாவது சோதனை
இரண்டாவது சோதனையில், சாத்தான் இயேசுவிடம் அதிகார மோகத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி, தன்னை வணங்கினால் இவை அனைத்தையும் அவருக்குத் தருவதாக வாக்களிக்கின்றது. ஆனால் அவரோ, “‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக’ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று கூறி இரண்டாவது சோதனையையும் முறியடிக்கின்றார். இன்றைய உலகில் அதிகாரப் போதைதான் அனைவரையும் ஆட்டிப்படைக்கின்றது. அரசியல் வாழ்வாக இருக்கட்டும் அல்லது பொதுவாழ்வாக இருக்கட்டும், இங்கே அதிகாரத்தைப் பெற, அத்தனை அசிங்கமான காரியங்களையும் செய்யத் தயாராக இருக்கினர் பலர். இன்றைய அரசியல் வாழ்க்கையைப் பொறுத்தளவில், எனக்குப் பதவி வேண்டும் அவ்வளவுதான். அதற்காக நான் எந்த எல்லைக்கும் செல்லத் தயார். எதையும் யாருக்காகவும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கத் தயார் என்று கொள்கையற்று நிலையைப் பார்க்கிறோம். குறிப்பாக, நம் இந்திய நாட்டின் எல்லாவிதமான வளர்ச்சியற்ற நிலைகளுக்கும் இந்தப் பதவி மோகம்தான் அடிப்படைக் காரணமாக உள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. இப்படிப் பதவி மோகம் கொண்டிருப்பவர்களால்தான் மக்களின் நலன்கள் சிதைந்து சின்னாபின்னமாகி வருகின்றன. இன்றைய நமது துறவு வாழ்விலும் இந்தப் பதவி மோகத்திற்குப் பஞ்சமில்லை. ‘எனக்கு அந்தப் பெரிய பொறுப்பு வேண்டும், எனக்கு இந்தப் பெரிய பொறுப்பு வேண்டும், நான் அந்தக் கல்லூரியின் முதல்வராக வேண்டும், இந்தக் கல்லூரியின் அதிபராக வேண்டும், எனக்கு கிராமப்புற பங்குத்தளம் வேண்டாம், பணம்கொழிக்கும் நகர்ப்புற பங்குத்தளம்தான் வேண்டும், உயர்ந்த தலைமைப் பொறுப்புகளை நான் பெற வேண்டும், அல்லது என் சாதிக்காரரும் பெற வேண்டும் என்ற அதிகார வெறியால் இயேசுவின் இறையாட்சிக் கொள்கைகள் இங்கே முக்கியத்துவம் பெறுவதில்லை என்பதையெல்லாம் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆனால் மனிதத்தை சிதைத்தழிக்கும் இத்தகைய பதவி மோகத்தை சாத்தான் இயேசுவிடம் எடுத்துக்காட்டியபோது, இயேசு, தனது வழி தனி வழி (சிலுவை வழி) என்பதை சுட்டிக்காட்டி, அதன் சுயநல எண்ணங்களைத் தவுடுபொடியாக்குகின்றார்.
மூன்றாவது சோதனை
மூன்றாவது சோதனையாக அலகை இயேசுவுக்கு முன்வைப்பது வெற்றுப்புகழ்ச்சி அல்லது பொய்த்தோற்றம். இயேசுவை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, “நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்" என்று கொக்கரித்துக் கூறி அதற்கு இறைவார்த்தைகளைச் சான்றாக எடுத்துக்காட்டுகிறது. ஆனால் “உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ என்றும் சொல்லியுள்ளதே” என்று இறைவார்த்தைகளைக் கொண்டே அதற்குப் பதிலடிக் கொடுத்து மூன்றாவது சோதனையையும் முறியடிக்கின்றார் இயேசு. ஒரு மனிதர் கொண்டிருக்கின்ற தற்பெருமையை வைத்தே அம்மனிதர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் நாடிபிடித்துப் பார்த்துவிடலாம். ஒரு மனிதரின் தற்பெருமை உச்சம்தொடும்போது அது ஆணவமாக மாறுகிறது. ஆணவம் அதிகமாகத் தலைக்கேறும்போது அது அம்மனிதரை அழிவுக்குள்ளாகிறது. மெல்லக் கொல்லும் நஞ்சுபோல அது மாறிவிடும். “உங்களுக்கு இருக்கிற சக்திக்கு.... உங்களுக்கு இருக்கிற திறமைக்கு... உங்களுக்கு இருக்கிற அறிவுக்கு... உங்களுக்கு இருக்கிற அழகுக்கு... உங்களுக்கு இருக்கிற செல்வாக்குக்கு.... உங்களுக்கு இருக்கிற செல்வத்துக்கு... நீங்க நினைத்தால் எதையும் சாதிக்கலாம், நீங்கள் விரும்பினால் எதையும் விலைக்கு வாங்கிவிடலாம்...” ஆகிய இப்படியான வார்த்தைகள்தாம் ஒருவரிடம் தற்பெருமையைத் தோற்றுவிக்கின்றன. சாத்தானைப்போன்று இதனைச் சொல்லிச் சொல்லியே நம்மில் தற்பெருமையை வளர்த்துவிடுவதற்கென்றே பலர் நம் பக்கத்தில் இருப்பார்கள். ஆனால் சாத்தானின் தந்திரங்களை நன்கு அறிந்திருந்த நமதாண்டவர் இயேசு, அதனின் தீய எண்ணங்களை உடைத்தெறிகின்றார். ஆக, இயேசுவைப் போன்று நாம் மிகவும் கவனமாக இல்லை என்றால், சோதனைகளில் சிக்கி நம் வாழ்வு உடைந்துபோகும் என்பது திண்ணம். ஒட்டுமொத்தமாகக் கூறவேண்டுமெனில், ஒருவர் சோதனையில் விழாமலிருக்க தன்னிலை அறிதலும், தன் தொடக்க நிலை அறிதலும் மிகவும் அவசியம். நமது ஆதிப்பெற்றோரும், இஸ்ரயேல் மக்களும் இதனை நன்கு உணர்ந்திருப்பார்களேயானால் சோதனைக்கு ஆட்பட்டு பாவம் செய்திருக்கமாட்டார்கள்.
சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோம்
தங்கம் நெருப்பிலிட்டு மெருகேற்றப்படுவதுபோல சோதனைகள் வழியாக நாமும் நமது இறைநம்பிக்கையில் ஆழமாக வேரூன்றப்படுகிறோம் என்பதை மறவாதிருப்போம். இதனைத்தான், "சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றிவாகையினை அவர்கள் பெறுவார்கள்" (யாக் 1:12) என்கிறார் திருத்தூதர் யாக்கோபு. மேலும் சோதனை வேளைகளில் மனம் தளர்ந்தவர்களாக நாம் பாவத்தில் வீழ்ந்துவிடக் கூடாது. காரணம், சோதனை வேளைகளில் நமதாண்டவர் இயேசுவைப் போல நாம் உறுதியான மனதுடன் இருக்க வேண்டும். அதனால்தான், "நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர்" (எபி 4:15) என்கிறார் புனித பவுலடியார். மேலும் “ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர். எவரும் மீட்புப் பெறுவர்” என்ற இறைவார்த்தையை எடுத்துக்காட்டி நாமும் நமது சோதனை வேளைகளில் இயேசுவின் திருப்பெயரை அறிக்கையிட்டு அதிலிருந்து வெற்றிபெற வேண்டுமென இன்றைய இரண்டாம் வாசகத்தில் நமக்கு அழைப்பு விடுகின்றார் புனித பவுலடியார்.
இறுதியாக, 'அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது' (வச.13) என்று கூறி இயேசுவின் பாலைவன சோதனையை நிறைவு செய்கிறார் நற்செய்தியாளர் லூக்கா. மனித வாழ்வில் சோதனைகள் ஒரு தொடர்கதை என்பதுதான் இதன் பொருள். நமது வாழ்வு முழுவதும் சோதனைகள் அவ்வப்போது வந்துவிட்டுப் போகத்தான் செய்யும். இயேசுவை பாலைநிலத்தில் சோதித்த அலகை அத்துடன் அவரை விட்டுவிடவில்லை. சிறிதுகாலம் கழிந்த பின்பு யூதாஸ் இஸ்காரியோத் வழியாக மீண்டும் இயேசுவை சோதிக்கத் தொடங்குகிறது. ஆனால் இறுதியில் இயேசுவே வெற்றிபெறுகிறார். இயேசுவின் உயிர்ப்பு அலகையின் தோல்வியை உறுதிப்படுத்துகிறது. ஆகவே, நாமும் இயேசுவைப்போல சோதனைகளை மனவுறுத்தியுடன் தாங்கி அவருக்கு நமது பிரமாணிக்கத்தை வெளிப்படுத்தி நமது இறைநம்பிக்கையில் ஆழப்படுவோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்