MAP

மக்களுக்கும் தனது சீடருக்கும் படிப்பினைகள் வழங்கும் இயேசு மக்களுக்கும் தனது சீடருக்கும் படிப்பினைகள் வழங்கும் இயேசு  

பொதுக் காலம் 8-ஆம் ஞாயிறு : நற்கனிகள் தரும் நல்ல மரங்களாவோம்!

நான் இயேசுவில் வேரூன்றி நற்கனிகள் தரும் நல்லவரா, அல்லது வெளிவேடம்கொண்டு அலகையில் வேரூன்றி தீய கனிகள் தரும் தீயவரா என்று சிந்திப்போம்.
பொதுக் காலம் 8-ஆம் ஞாயிறு : நற்கனிகள் தரும் நல்ல மரங்களாவோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம்  : வத்திக்கான்

(வாசகங்கள் I. சீஞா 27: 4-7   II. 1கொரி 15: 54-58; III. லூக் 6: 39-45)

பொதுக் காலத்தின் எட்டாம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் நம்மிடம் துலங்கும் வெளிவேடத்தைப் போக்கவும், நற்கனிகள் தரும் நல்லமரங்களாக வாழவும் நமக்கு அழைப்புவிடுகின்றன. "சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது; அவ்வாறே, மனிதரின் பேச்சில் மாசுபடிந்துவிடுகின்றது. குயவரின் கலன்களை, சூளை பரிசோதிக்கின்றது; மனிதரை, உரையாடல் பரிசோதிக்கின்றது. கனி, மரத்தின் கண்காணிப்பைக் காட்டுகின்றது; சொல், மனிதரின் உள்ளப் பண்பாட்டைக் காட்டுகின்றது. ஒருவர் பேசுவதற்குமுன்பே அவரைப் புகழாதே; பேச்சைக் கொண்டே அவரை அறிந்து கொள்ளலாம்" (சீஞா 27:4-7) என்று கூறுகிறது இன்றைய முதல் வாசகம். அகப்பார்வையை விட புறப்பார்வையே மிகவும் சிறந்தது என்று இவ்வுலகம் கருதுகிறது. இது அகத்தூய்மையைவிட புறத்தூய்மைக்குத்தான் இட்டுச்செல்லும். ஆன்மிகத்தைப் பொறுத்தமட்டில் அகப்பார்வையே சிறந்தது மற்றும் உண்மையானது. ஆனால், புறப்பார்வை என்பது போலியானது மற்றும் உண்மைத்தன்மையற்றது. இதுதான் மனிதர்களிடத்தில் வெளிவேடம் என்னும் போலி வாழ்க்கையை தோற்றுவிக்கிறது. பார்த்தால் ஒன்று, பார்க்கவில்லையென்றால் ஒன்று என மனிதர்களை இரட்டைவேடம் அணியத் தூண்டுகிறது. ஒருவரைப் போலியாகப் புகழ்வது, வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரை எடைபோடுவது. தவறு செய்யும் ஒருவருடன் இணங்கிப்போவது, தவறு செய்துவிட்டு எவ்வித குற்றவுணர்வுமின்றி வாழ்வது, எல்லாவற்றிலும் சுயநலமுடன் செயல்படுவது, மற்றவர்களின் துன்ப துயரங்களால் தான் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பது ஆகிய வெளிவேடத்திற்குரிய பண்புகளை இது உருவாக்குகிறது. இத்தகைய பண்புகளைத் தன்னகத்தே கொண்டோர் நற்கனிகொடுக்கும் மரங்களாக இருக்க மாட்டாரக்ள்.

இரஷ்யா உக்ரைன்மீதும், இஸ்ரயேல் பாலஸ்தீனத்தின்மீதும் நடத்திவரும் போர்கள் தற்போது ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி வருகின்றன. இத்துடன் மியான்மார், காங்கோ ஜனநாயகக் குடியசு மற்றும் இன்னும்பிற பகுதிகளில் இடம்பெற்று வரும் மோதல்களும் இந்தப் பயத்தை இன்னும் அதிகரித்துள்ளன. ஒருபுறம் இந்தப் போர் குறித்து வல்லரசு நாடுகளும், வளர்ந்த நாடுகளும் மிகவும் அனுதாபப்படுவதாக நீலிக்கண்ணீர் வடித்தாலும், மறுபுறம், தாங்கள் உற்பத்தி செய்யும் ஆயுதங்களை விற்பனை செய்து இத்தகைப் போர்களை மறைமுகமாக ஊக்குவிக்கின்றன என்பது, அவற்றின் வெளிவேடத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. உலகளாவிய ஆயுத வர்த்தகத்தின் வருவாய் கடந்த 2023-ஆம் ஆண்டில் 63,200 கோடியாக உயர்ந்துள்ளது என்றும், இது 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 4.2 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளது SIPRI என்றழைக்கப்படும், Stockholm உலக அமைதி ஆய்வு மையம். குறிப்பாக, மியான்மாரில் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஐ.நா.வின்  சிறப்புப் பார்வையாளர் Tom Andrews அவர்கள் "கொடுஞ்செயல்களை செயல்படுத்துதல்" என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவ்வறிக்கையில், ஐ.நா.வின் பாதுகாப்பு அமைப்பில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் இரஷ்யா, சீனா, மற்றும் செர்பியா ஆகியவை பொது மக்களைக் கொல்ல இராணுவ ஆட்சிக் குழு பயன்படுத்தும் ஆயுதங்களை வழங்கி வருகின்றன என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆக, இப்படி வெளிவேடம் கொண்ட சிலரின் மாபாதகச் செயல்களால் பெரும்பாலானோரின் வாழ்வு நிர்மூலமாக்கப்பட்டு வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. இதைத்தான் கவிஞர் வாலியும், “மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே” என்று எழுதினார்.  இயேசுவும், தனது பணிவாழ்வு முழுவதும் வெளிவேடத்தையும் போலியான பக்தி முயற்சிகளையும் கடுமையாகச் சாடுவதைப் பார்க்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில், “பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா?” என்று நடைமுறை வாழ்விலிருந்து ஒரு நிகழ்வை எடுத்துக்காட்டுகிறார். அதாவது, வெளிவேடக்காரர்  ஒருவர், இன்னொரு வெளிவேடக்காரருக்கு வழிகாட்ட முடியுமா என்று கேட்கின்றார் இயேசு. இதனை இன்னும் அவர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ளும் விதமாகத்தான், “நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்து கொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ‘உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்க முடியும்?" என்றும் கேள்வி எழுப்புகின்றார்.

மரக்கட்டை என்பது என்ன?

உத்திரம் என்பது மரக்கட்டை என்று பொருள்படுகிறது. அதனால்தான் நமது பழைய திருவிலிய மொழிபெயர்ப்பில், "உன் கண்ணியுள்ள உத்திரத்தைக் கவனியாது" என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கும். ஆனால் இப்போதுள்ள நமது புதிய மொழிபெயர்ப்பில் உத்திரம் என்பதை மரக்கட்டை என்று மொழிபெயர்த்துள்ளோம். மரக்கட்டை போல மிகப்பெரிய தவறு நம் பக்கம் இருக்கிறது என்பதை உணராமல், மற்றவர்களின் துரும்பு போன்ற சிறிய தவறையும் பெரிதுபடுத்திப் பார்ப்பது. மேலும் மரக்கட்டை என்பது Wood என்று ஆங்கிலத்தில் அர்த்தப்படுகிறது. அதனால்தான், எந்த உணர்வையும் வெளிப்படுத்தாத முகத்தை wooden face என்கிறோம். அதாவது, "நான் சொல்லும் எதையும் புரிந்துகொள்ளாமல் இப்படி மரக்கட்டை மாதிரி நிற்கிறாயே" என்று நாம் சொல்வதுண்டு. அவ்வாறே, யாரையாவது dead wood (செத்துப்போன மரம்) என்று குறிப்பிட்டால் அவரால் இனி யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்று பொருள். மேலும் நிறுவனங்களில் உயர் அதிகாரிகள் தங்களுக்குக் கீழ் பணியாற்றும் சிலரை dead wood என்று மதிப்பீடு செய்வது உண்டு. இதனை இன்னும் சில எடுத்துக்காட்டுகள் கொண்டு நாம் புரிந்துகொள்வோம். Not out of the woods என்றால் இன்னும் ஆபத்திலிருந்து அல்லது சிக்கலிலிருந்து வெளியேறவில்லை என்று பொருள். The patient is not out of the woods என்றால் அவர் இன்னமும் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளிவரவில்லை என்று அர்த்தம், The country’s economy is not out of the woods என்றால் அந்த நாட்டின் பொருளாதாரம் இன்னும் நெருக்கடியில்தான் இருக்கின்றது என்று பொருள். இப்போது இயேசு கூறும் மரக்கட்டை என்ற வார்த்தையைக் இங்குப் பொருத்திப் பார்த்தால் நமக்கு சில உண்மைகள் புரியும். ஆக, இயேசு கூறுவதுபோன்று, மரக்கட்டை என்பது வெளிவேடம் என்பதை நாம் உணர்ந்துகொண்டால், அதனை ஏன் நாம் அகற்ற வேண்டும் என்ற உண்மையையும் நாம் அறிந்துகொள்ள முடியும். அதனால்தான் முதலாவது பகுதியின் இறுதி அறிவுரையில், "வெளி வேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்” (வச. 42) என்று மொழிகின்றார் இயேசு.

மரமும் கனியும்

அடுத்து 'மரமும் கனியும்' குறித்து பேசும் இயேசுவின் வார்த்தைகளில் ‘நல்லவர் தீயவர்’ குறித்த சிந்தனைகள் வெளிப்படுகின்றன. மேலும் "நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர்" (வச. 45) என்று கூறி மனிதர்களை இருவகையாக எடுத்துக்காட்டுகிறார் இயேசு. மேலும் ஒவ்வொரு மரத்தின் கனியைக் கொண்டே அம்மரத்தின் தன்மையை அறிந்துகொள்வதுபோல, மனிதரின் வாயிலிருந்து வரும் சொற்களைக் கொண்டே அவரின் தன்மையை நாம் அறிந்துகொள்ள முடியும் என்பதை விளக்கும் விதமாக, "உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்" என்ற ஒற்றை வரியில் ஒவ்வொரு மனிதரின் அகத்தையும் புறத்தையும் படம்பிடித்துக் காட்டிவிடுகிறார் இயேசு. இதனைத்தான் நம் முன்னவர்களும், 'அகத்தின் அழகே முகத்தில் தெரியும்' என்று கூறியுள்ளனர். “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்: ஆகுல நீர பிற” (குறள் 34) என்ற குறளில், “மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை” என்கின்றார் வள்ளுவர். *நெஞ்சகமே கோவில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூசை கொள்ள வா ராய் பராபரமே", என்ற பாடலில், நெஞ்சத்தைக் கோவிலாக்கி, நினைவை மலராக்கி அன்பை மஞ்சன நீராக்கி, கடவுளுக்கு வழிபாடு செய்கிறார் தாயுமானவர். இங்கே அகம், அதாவது உள்ளம் முக்கியத்துவம் பெறுகிறது.

சமயம், அரசியல், கலை, பண்பாடு, பொருளாதாரம் என எல்லாத் தளங்களிலும், இன்று வெளிவேடம் தலைவிரித்தாடுவதை நம்மால் காண முடிகிறது. அன்றாடம் நாம் மேற்கொள்ளும் உரையாடல்களின்போதே, நம்மோடு உரையாடுபவர் நம்பகத்தன்மை நிறைந்தவரா அல்லது வெளிவேடம் கொண்டவரா என்பதை நம்மால் வெகு சுலபமாக அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக, இல்லற வாழ்விலும் துறவற வாழ்விலும் பல்வேறு உறவு முறிவுகளுக்கும், மனக்கசப்புகளுக்கும், விவகாரத்துகளுக்கும், துறவு வாழ்வைவிட்டு வெளியேறுவதற்கும், உயிரை மாய்த்துக்கொள்ளும் தவறான முடிவுகளுக்கும், பிறரின் வெளிவேடமும் நம்பகத்தன்மையற்ற நிலையுமே மிக முக்கிய காரணங்களாக அமைகின்றன. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதுதான் வெளிவேடத்தின் அடிநாதமாக அமைகிறது. இதனைத்தான், 'ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' என்று திருவருட்பாவில் வள்ளலார் பாடுகிறார்.

நற்கனிகள் தந்த காமராஜர்

இன்றைய நம் அரசியல்வாதிகளால் அதிகம் பேசப்படுபவர் பெருந்தலைவர் காமராஜர். தேர்தல் பரப்புரைகளின்போதும், அவருடைய நினைவுதினங்களைக் கொண்டாடும்போதும், ‘காமராஜர் ஆட்சியை மீண்டும் அமைப்போம்’ என்று சூளுரைக்கின்றனர். குறிப்பாக, நம் தமிழகத்தில் காமராஜர் பிறந்த தினத்தைக் கல்வி தினமாகக் கொண்டாடி வருகின்றோம். காரணம், தான் படிக்கவில்லை என்றாலும் கூட மற்ற எல்லாரும் படிக்க வேண்டும் என்பதற்காகப் பட்டிதொட்டியெல்லாம் கல்விக்கூடங்களைத் திறந்து வைத்து, அனைவரும் படிக்க வழிவகை செய்தார் காமராஜர். பள்ளிகளில், குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தையும் அவர்தான் கொண்டுவந்தார். சுருங்கச் சொல்ல வேண்டுமாயின், காமராஜர் நற்கனிகள் தந்த மரம். அவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை இங்கே நாம்  நினைவு கூர்வோம்.  காமராஜர் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது, அவருடைய கட்சித் தொண்டர்கள் சிலர் அவரைச் சந்தித்து, “தலைவரே, நீங்கள் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முதல்வராகச் செயல்படுவதாக நாடு முழுவதும் பேசிக்கொள்கிறார்கள், ஆகவே, உங்களுக்கு ஆளுயர வெண்கலச் சிலை ஒன்றை வைக்க முடிவுசெய்து, 50,000 ரூபாயை நன்கொடையாக வசூலித்துக் கொண்டு வந்திருக்கிறோம். நீங்கள் கொஞ்சம் பணம் கொடுத்தால் அதையும் இதோடு சேர்த்து விரைவில் அதற்கான பணிகளைத் தொடங்கிவிடலாம்” என்று கூறினர். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த காமராஜர், “அப்படியா.. சரி சரி.. அந்தப் பணத்தை அப்படியே வைத்துவிட்டுச் செல்லுங்கள். நான் அதோடு இன்னும் 50,000 ரூபாய் சேர்த்து ஒரு இலட்ச ரூபாய்க்கு ஐந்து கிராமங்களில் பள்ளிக் கூடங்களைத் திறக்கிறேன்” என்று கூறினாராம். இப்படி இவரைப் போன்று நற்கனிகள் கொடுத்த தூய்மையான சில அரசியல்வாதிகளும் நம்மத்தியில் வாழ்ந்துச் சென்றுள்ளனர் என்பது கண்கூடு. ஆனால் இன்று நம்மை ஆளும் அரசியல் தலைவர்கள் நற்கனிகள் தரும் நல்ல மரங்களாக இருக்கிறார்களா என்றதொரு கேள்வியை எழுப்புச் சிந்திப்போம்

பெருந்தலைவர் காமராஜர்
பெருந்தலைவர் காமராஜர்

இருவகை மனிதர்கள்

மனிதர்களிலே இருவகையினர் இருப்பதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். முதல் வகையினர் கீழ்த்தரமானவர்கள். இவர்கள் எப்போதும் பிறரைப் பற்றியும் இந்தச் சமுதாயத்தைப் பற்றியும் இழிவாகக் குறைகூறிக்கொண்டே இருக்கும் வெளிவேடம் பூண்டவர்கள். இவர்கள் எப்போதும் தனக்காக, தன் குடும்பத்திற்காக, தன் உறவுகளுக்காக வாழ்பவர்கள். ஆதாயமில்லாமல் இவர்கள் எந்தவொரு காரியத்தையும் செய்யமாட்டார்கள். ஆகவே, இவர்களால் யாருக்கும் எப்போதும் எவ்விதப் பயனும் இல்லை என்பது திண்ணம். இரண்டாம் வகையினர் மேன்மையானவர்கள். இவர்கள் வெளிவேடமகற்றி நம்பகத்தன்மையுடன் வாழ்பவர்கள். எந்நேரமும் இந்தச் சமுதாயத்தின் உயர்வுக்காக அர்ப்பண உணர்வுடன் அயராது உழைப்பவர்கள். இந்த மூன்றாவது வகை மனிதர்களால்தான் சமுதாய மாற்றமும், முன்னேற்றமும் நிகழ்கின்றன. நம் தலைவர் காமராஜர், இரண்டாம் வகை மனிதராகத் திகழ்ந்து தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக நற்கனிகள் தரும் நல்ல மரமாக வாழ்ந்தவர்.

இருவகை அடித்தளங்கள்

நற்கனிதரும் மரத்தைக் கொண்டு, 'நல்லவர் தீயவர்' என்று மனிதரை இருவகையாகத் தரம்பிரித்துக் காட்டும் இயேசு, அதனைத் தொடர்ந்து இருவகை அடித்தளங்கள் குறித்தும் பேசுகின்றார். தான் சொல்பவற்றைச் செய்யாது, தன்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே’ என வெளிவேடம் கொண்டு கூப்பாடு போடுபவர்களை அடித்தளமில்லா மண்மீது வீடுகட்டியவருக்கும் (அறிவிலி), தான் சொல்வதைக் கேட்டு அதன்படி செயல்படுபவரை ஆழமாய்த் தோண்டி, பாறையின் மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கும் (அறிவாளி) ஒப்பிட்டுப் பேசுகிறார் (வச. 49). ஆகவே, நான் இயேசுவில் வேரூன்றி நற்கனிகள் கொடுக்கும் நல்லவரா, அல்லது வெளிவேடம்கொண்டு அலகையில் வேரூன்றி தீய கனிகள் தரும் தீயவரா என்று சிந்திப்போம். நற்கனிகள் கொடுக்கும் நல்ல மரங்களாக வாழ நமதாண்டவரிடம் அருள்வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 மார்ச் 2025, 13:13