இலங்கையில் பெண்களுக்கு ஆதரவாக அருள்சகோதரிகள் நடத்திய பேரணி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இலங்கையில் நூற்றுக்கணக்கான கத்தோலிக்க அருள்சகோதரிகள், தவக்காலத்தின் முதல் நாளான திருநீற்றுப் புதனன்று, வீதிகளில் இறங்கி, திருமணமாகாதப் பெண்கள் மற்றும் பாலியல் முறைகேடுகளுக்கு ஆளானவர்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு அரசை வலிறுத்தியதாக யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை, முறைகேடுகள், குழந்தைத் திருமணம் மற்றும் திருமணமாகாதப் பெண்களுக்கு ஆதரவாக நன்கொடைகள் சேகரிக்க மார்ச் 5-ஆம் தேதி திருநீற்றுப் புதனன்று, பேரணியில் பங்கேற்ற நல்மேய்ப்பர் சபையைச் சேர்ந்த அருள்சகோதரிகள், தங்கள் சபையின் சீருடைகளை அணிந்துகொண்டு, வெள்ளை நிறைப் பெட்டிகளை ஏந்திச் சென்றனர் என்றும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.
இதுகுறித்து இச்செய்தி நிறுவனத்திடம் பேசிய நல்மேய்ப்பர் சபையைச் சேர்ந்தவரும், மரியே வாழ்க துறவு இல்லத்தின் தலைமைச் சகோதரியுமான ரோசரி பெரேரா அவர்கள், “இந்தப் பேரணி எங்கள் சபை ஒழுங்கின் தேசிய பரப்புரையின் ஒரு பகுதியாகும்” என்று கூறியுள்ளார்.
“இறப்பின் ஆபத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஆதரவற்றக் குழந்தைகள் மற்றும் திருமணமாகாதப் பெண்களை பராமரிக்க, அருள்சகோதரிகள் மற்றும் ஒரு சில பொதுநிலையினரின் ஆதரவுடன் 12 மறைமாவட்டங்களிலும் இந்த உள்ளூர் நிதி திரட்டும் பரப்புரையை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார் அருள்சகோதரி பெரேரா. (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்