MAP

அருள்சகோதரி Ivančica Fulir அருள்சகோதரி Ivančica Fulir  (Foto Saša Ćetković)

கடவுள் தரும் நம்பமுடியாத அளவிலான ஆற்றல்

“நீ விரைவாக செல்ல விரும்பினால், தனியாகச் செல், தூரமாகச் செல்ல விரும்பினால் இணைந்து செல்” என்ற பழமொழிக்கேற்ப மக்களோடு இணைந்து மறைப்பணியாற்றும்போது நாம் நீண்ட காலம் தொலைதூரம் பணியாற்றலாம்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மறைப்பணியில் வேலைக்கான பற்றாக்குறை ஒருபோதும் இருக்காது என்றும், நம்மைச் சுற்றிலும் உள்ள மக்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பணியாற்ற திறந்த உள்ளம் உடையவர்களாக நாம் மாறும்போது கடவுள் நமக்கு நம்ப முடியாத வகையில் அப்பணியினைச் செய்ய ஆற்றலைத் தருகின்றார் என்றும் கூறினார் அருள்சகோதரி இவான்சிகா ஃபுல்லர்.

மார்ச் 31, திங்கள்கிழமை ஆப்ரிக்காவின் பெனினில் 3,800 குழந்தைகளுக்குப் பணியாற்றிவரும் அருள்சகோதரி இவான்ஜிசா ஃபுல்லர் தனது மறைப்பணி அனுபவம் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு இவ்வாறு எடுத்துரைத்துள்ளார்.

மறைப்பணியாளர்கள் தங்கள் இதயங்களில் அனுபவிக்கின்ற மற்றும் உணர்கின்றவற்றைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள குரோவேசியாவைச் சார்ந்த அருள்சகோதரி ஃபுல்லர் அவர்கள்,  “சொல்லப்படாத விடயங்கள் எப்போதும் அறியப்படாத விடயங்களாகவே இருக்கின்றன” எனவே மறைப்பணியாளர்கள் தங்களது கருத்துக்களை, அனுபவங்களை எடுத்துரைப்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மறைப்பணியாளர்களின் அனுபவங்கள் எடுத்துரைக்கப்படும்போது, மக்கள் தாராளமாக உதவ தங்கள் கரங்களை நீட்டுகின்றார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ள அருள்சகோதரி ஃபுல்லர் அவர்கள், “நீ விரைவாக செல்ல விரும்பினால், தனியாகச் செல், தூரமாகச் செல்ல விரும்பினால் இணைந்து செல்” என்ற பழமொழிக்கேற்ப மக்களோடு இணைந்து மறைப்பணியாற்றும்போது நாம் நீண்ட காலம் தொலைதூரம் பணியாற்றலாம் என்றும் கூறியுள்ளார்.

கவலை, வருத்தம், விரக்தி, எதிர்மறையான எண்ணம் போன்றவற்றிற்கு எதிர்ப்பு மருந்து நற்செய்தி என்றும்,  அன்றாட வாழ்க்கை அனுபவங்களை நேர்மறையான கண்ணோட்டத்தில் பகிர்ந்து கொள்ளல், மக்களுடனான சந்திப்புக்கள் மற்றும் அனுபவங்களில் கடவுளின் உடனிருப்பை வெளிப்படுத்துதல் போன்றவற்றைத் தொடர்ந்து செய்து வருகின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு குழந்தை மற்றும் உடல் நலமற்ற நபரிலும் துன்புறும் கிறிஸ்து இருக்கின்றார் என்று வலியுறுத்தியுள்ள அருள்சகோதரி ஃபுல்லர் அவர்கள், நமது கவனம் அவர்களது துன்பத்தில் அல்ல. மாறாக, துன்பத்திலிருந்து மீண்ட இயேசுவின் உயிர்ப்பின் மகிழ்வில் நமது கவனம் இருக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 மார்ச் 2025, 15:01