விவிலியத் தேடல் : திருப்பாடல் 68-2, கடவுள் திக்கற்ற பிள்ளைகளின் தந்தை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில் 'நேர்மையாளராய் நிலைத்திடுவோம்! என்ற தலைப்பில் 68-வது திருப்பாடலில் 1 முதல் 4 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 5 முதல் 6 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது உள்ளத்தில் அமைதி கொண்டவர்களாக அவ்வார்த்தைகளைப் பொருளுணர்ந்து வாசிப்போம். “திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்! தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார்; ஆனால், அவருக்கு எதிராகக் கிளம்புவோர் வறண்ட நிலத்தில் வாழ்வர்" (வச. 5-10). இன்று நாம் தியானிக்கும் இறைவார்த்தைகளில், நாம் வாழும் இன்றைய சமூகத்தில், திக்கற்றோர், கைம்பெண்கள், தனித்திருப்போர், சிறைப்பட்டோர் ஆகியோர் மிகவும் கவலைக்கு உரியவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு உதவி செய்வதற்கு எத்தனையோ நல்லுள்ளங்கள் முன்வந்தபோதிலும், இவர்களைக் குற்றம் சுமத்தி மேலும் மேலும் இவர்களின் வாழ்க்கையை கறைபடுத்துபவர்கள்தாம் அதிகம் என்பதும் கண்கூடு. இந்த நால்வரின் துயரங்களையும் நேரில் கண்ணுற்றதால்தான் தாவீது இப்படி கூறுகின்றார் என்பதை நாம் புரிந்துகொள்வோம்.
திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தை
முதலில் “திக்கற்ற பிள்ளைகளுக்கு கடவுளை தந்தை” என்கின்றார் தாவீது. இன்றைய நம் உலகில் இயற்கையான வறுமையைவிட, போர்களும், மோதல்களும், வன்முறைகளும், கலவரங்களும் ஏற்படுத்தும் செயற்கையான வறுமைதான் இலட்சக்கணக்கான குழந்தைகளை திக்கற்ற பிள்ளைகளாக்கி வருகின்றது என்பது திண்ணம். இப்படிப்பட்ட தருணங்களில் இவர்களுக்கு உதவ எத்தனையோ தனது அடியார்களைக் கடவுள் தூண்டியெழுப்புகிறார். அவர்களில் முதன்மையானவர் நமது அன்னை தெரேசா. திக்கற்ற குழந்தைகளுக்கெல்லாம் தாயாக மட்டுமன்றி, தெய்வத்தின் மறு உருவமாகவும் வாழ்ந்தவர் அன்னை தெரேசா. இன்று, உலகமெங்கும் அவரது பெயரில் இயங்கிவரும் சபை, ஆதரவற்ற குழந்தைகளுக்காக எண்ணற்ற காப்பகங்களை ஏற்படுத்தி அன்புப் பணிகள் ஆற்றி வருகின்றது. இதில் பிறந்த உடனேயே குப்பைத் தொட்டில்களில் வீசி எறியப்படும் குழந்தைகள்தாம் மிகவும் அதிகம். இதுமட்டுமன்றி வறுமையின் காரணமாக வாடும் குழந்தைகளின் பெற்றோருக்கும் அன்னை தெரேசாவின் காப்பகங்கள் பல்வேறு வழிகளில் உதவி வருகின்றன.
கைம்பெண்களின் காப்பாளர் கடவுள்
அடுத்து, "கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர் கடவுள்" என்கின்றார் தாவீது. கடந்த 2021-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதத்திற்கான தனது செபக்கருத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பல்வேறு வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு துயருறும் பெண்களுக்காக, அதிலும் குறிப்பாக, மன அளவிலும், உடல் ரீதியாகவும், வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படும் அனைத்துப் பெண்களுக்காகவும் இறைவேண்டல் செய்ய உலக மாந்தர் அனைவருக்கும் அழைப்புவிடுத்திருந்தார். இன்றைய உலகில், எத்தனையோ பெண்கள் பல்வேறு வழிகளில் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்து வருவது அதிர்ச்சித் தருவதாக உள்ளது என்றும், பெண்கள் அடையும் இத்தகையத் துன்பங்கள், மனித குலத்தின் கோழைத்தனமான நடவடிக்கைகளையும், மாண்பற்ற செயல்களையும் வெளிப்படுத்துவதாக உள்ளன எனவும் அதில் தெரிவித்திருந்தார். அத்துடன் தங்கள் மௌனத்தைக் கலைத்து, தங்கள் துயர்களுக்கு விடிவு வேண்டி அழைப்பு விடுக்கும் இவர்களின் குரல்களை நாம் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது என்றும், இத்தகைய வன்முறைச் செயல்கள் குறித்து, நம் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு நாம் சென்றுவிடமுடியாது என்றும் அவர் எடுத்துக்காட்டியிருந்தார். இறுதியாக, சமுதாயத்தில் பல்வேறு வன்முறைகளால் துயர்களை அனுபவிக்கும் பெண்களின் உதவிக்கான குரல், அனைவராலும் செவிமடுக்கப்பட்டு அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கப்பட வேண்டும் என இம்மாதத்தில் சிறப்பான விதத்தில் நாம் இறைவேண்டல் செய்வோம் எனவும் கூறி தன் செய்தியை நிறைவு செய்திருந்தார் திருத்தந்தை.
தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளைக் களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி, நலவாழ்வு, வேலைவாய்பு, சிறப்பு சுயஉதவிக்குழுக்களை அமைத்தல், தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடனும் மனிதமாண்புடனும் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் ஒன்றை கடந்த 02.09.2022 அன்று உருவாக்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இவ்வாரியம் ஏற்படுத்தப்பட்டு, மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களைத் தலைவராகக் கொண்டு 10 அலுவல்சார் மற்றும் 14 அலுவல்சாரா உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது எனத் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்திலுள்ள இயேசு சபையினர் தஞ்சை மறைமாவட்டம் நாகப்பட்டினத்தில் ‘கலங்கரை’ என்ற அமைப்பைத் தொடங்கி சுனாமிக்குப் பிறகு கைம்பெண்களான எண்ணற்ற மகளிருக்கு உதவி வருகின்றனர் என்பதும் நமது கருத்தில் கொள்ளத்தக்கது. இவ்வாறே இன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் கைம்பெண்கள் பல்வேறு வழிகளில் பல நல்லுள்ளம் கொண்டோரால் கைதூக்கிவிடப்படுகின்றனர்.
தனித்திருப்போருக்கு உறைவிடமான கடவுள்
மன்றாவதாக, "தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்" என்கின்றார் தாவீது. இங்கே, தனித்திருப்போர் என்பது ஆன்மிக, அரசியல், சமூக, பொருளாதார மற்றும் ஏற்றத்தாழ்வுகளால் தனிமைப்படுத்தப்பட்டோர் என்றும் நாம் பொருள்கொள்ளலாம். பலவேளைகளில் எதிரிகளின் வேண்டத்தகாத செயல்பாடுகளாலும் நாம் தனித்திருக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம். மேலும் தனிமை என்பது ஒரு மனிதரைக் கொல்லும் பெரும் நோய் என்றும் கூட நாம் சொல்லலாம். மன்னர் சவுல் மற்றும் தனது மகன் அப்சலோம் இருவராலும் தனிமையின் பெரும் கொடுமைகளை அனுபவித்தவர் தாவீது. அதனால்தான் அவர் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார். இருவகையான தனிமை உண்டு. இப்போது நாம் மேலே கண்டது முதல்வகையான தனிமை. இரண்டாவது வகையான தனிமை என்பது ஆன்மிகத் தனிமை ஆகும். இது ஆபத்தானது அல்ல, மாறாக ஆறுதலும் அகமகிழ்வும் அளிக்கக் கூடியது. ஆக, இந்த இருவகையான தனிமைகளுக்குள்ளும் தள்ளப்படுபவர்களுக்கு ஆண்டவர்தாமே அடைக்கலமும், ஆறுதலுமாக இருக்கின்றார் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இவ்வாறு கூறுகின்றார் தாவீது அரசர்.
சிறைப்பட்டோருக்கு விடுதலை வாழ்வு அருள்பவர்
இறுதியாக, "சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார்" என்கின்றார் தாவீது. இங்கும் இதனை நாம் இரண்டு விதத்தில் பொருள்கொள்ளலாம். முதலாவது அகச்சிறை, இரண்டாவது புறச்சிறை. இவை இரண்டுமே மனிதரைக் கொல்லும் ஆயுதங்கள்தாம். ஆகவே, இந்த இரண்டிலும் சிறைப்பட்டவர்களை ஆண்டவர் விடுவிக்கின்றார் என்கின்றார் தாவீது. ஆனாலும் இன்றைய உலகில் அகவிடுதலையைக் காட்டிலும் புறவிடுதலைதான் மிகவும் அவசியமாகிறது. சிறப்பாக, இந்த யூபிலி ஆண்டின் தொடக்கத்தில், அனைத்து நாட்டின் அரசுகளும் சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கி, அவர்களை விடுதலை செய்து, அவர்களுக்குப் புதுவாழ்வு அளிக்க வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அவரின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஒரு சில நாடுகள் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளன. அதற்கோர் எடுத்துக்காட்டு கியூபா. இந்நாடு ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளை விடுவித்துள்ளது. இங்கே தாவீதின் வாழ்வைப் பொறுத்தமட்டில், இந்த இரண்டு விதமான சிறைகளையும் மனதளவிலும் உடலளவிலும் அனுபவித்தவர். இறுதியாக, "அவருக்கு எதிராகக் கிளம்புவோர் வறண்ட நிலத்தில் வாழ்வர்" என்று உரைக்கின்றார் தாவீது. அப்படியென்றால், இதன் பொருள் என்ன? திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும், கணவனை இழந்தாளின் காப்பாளராகவும், தனித்திருப்போருக்கு உறைவிடம் அமைத்துத் தருபவராகவும், சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்பவராகவும் இருக்கின்ற கடவுளின் செயல்களுக்கு எதிராகச் செயல்படுபவரை கடவுள் ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார், அதாவது, துயர்நிறைந்த வாழ்வுக்குள் தள்ளிவிடுவார் என்பதைத்தான் "அவருக்கு எதிராகக் கிளம்புவோர் வறண்ட நிலத்தில் வாழ்வர்" என்று குறிப்பிடுகின்றார். அதேவேளையில், தாவீது அரசர் இந்த நால்வகையான மனிதருக்கும் கடவுளின் வழியில் நற்காரியங்கள் செய்திருக்கிறார் என்பதையும் நாம் பார்க்கின்றோம். அப்படியென்றால், அவரது சொற்களும் செயல்களும் எப்போதும் ஒன்றிணைந்தே சென்றிருக்கின்றன என்பதும் தெளிவாகிறது.
ஆகவே, நாமும் நமது அன்றாட வாழ்வில், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும், கணவரை இழந்த கைம்பெண்களுக்குக் காப்பாளராகவும், தனித்திருப்போருக்கு உறைவிடம் அமைத்துத் தருபவராகவும், சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்பவராகவும் விளங்கிடுவோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்