விவிலியத் தேடல்:திருப்பாடல் 68-1, நேர்மையாளராய் நிலைத்திடுவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'மண்ணுலகும் மானிடரும் உறவால் ஒன்றே!' என்ற தலைப்பில் 67-வது திருப்பாடலில் 1 முதல் 7 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து அதனை நிறைவுக்குக் கொணர்ந்தோம். இவ்வாரம் 68-வது திருப்பாடல் குறித்த தமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். 'இறைவனின் வெற்றிப் பவனி' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 35 இறைவசனங்களைக் கொண்டுள்ள சற்று பெரியதொரு திருப்பாடல். இது 66 மற்றும் 67-ஆம் திருப்பாடல்களில் காணப்படும் கருப்பொருள்களை மீண்டும் எடுத்துரைக்கின்றது. மேலும் இத்திருப்பாடல், கடவுள் தனது இருப்பை நிலைநிறுத்துவதற்காக எருசலேம் என்று பொருள்படும் சீயோனுக்கு வருவதை விரித்துரைக்க தெளிவான உருவகங்களைப் பயன்படுத்துகிறது. இது ‘தாவீதின் திருப்பாடல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தாவீது தனிப்பட்ட முறையில் இதனை எழுதவில்லை என்றும், ஆனால் இப்பாடலில் கூறப்பட்டுள்ள வெற்றிக் குறித்த சித்தரிப்புகள் தாவீதின் வெற்றிகரமான வாழ்க்கையின் சுருக்கமாக இருக்கலாம் என்றும் விவிலிய அறிஞர்களால் கருதப்படுகிறது. மற்றொரு சாத்தியமான அகத்தூண்டுதல் என்னவென்றால், தாவீது எபூசியர்களைத் தோற்கடித்து எருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்படுத்தியதையும் (2 சாமு 5:6-7), அவர் உடன்படிக்கைப் பேழையை எருசலேமுக்குக் கொண்டுவந்ததையும் (2 சாமு 6:1-14) இந்தத் திருப்பாடல் நினைவுபடுத்துகிறது.
இப்போது இத்திருப்பாடலின் 1 முதல் 4 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். முதலில், அமைந்த மனதுடன் அவ்வார்த்தைகளை வாசிப்போம். "கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப்படுவார்கள்; அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்; புகை அடித்துச் செல்லப்படுவதுபோல அடித்துச் செல்லப்படுவர்; நெருப்புமுன் மெழுகு உருகுவது போலக் கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர். நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரை போற்றுங்கள்; மேகங்கள்மீது வருகிறவரை வாழ்த்திப் பாடுங்கள்; ‘ஆண்டவர்’ என்பது அவர்தம் பெயராம்; அவர்முன் களிகூருங்கள்" (வச. 1-4). வழக்கம்போல இத்திருப்பாடலிலும் மனிதரை நல்லார் பொல்லார் என இருவகையாகப் பிரித்து காட்டுகின்றார் தாவீது. மேலும் இவ்விருவகையினரையும் இறையச்சம் கொண்டோர், இறையச்சமற்றோர் எனவும் நாம் பிரித்துக்கொள்ளலாம்.
முதலில், "கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப்படுவார்கள்; அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்” என்று கூறும் தாவீதின் வார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். தனது வாழ்க்கை அனுபவத்திலிருந்துதான் இதனைத் தெளிவுபடக் கூறுகின்றார் அவர். நீங்க செய்யுற எல்லாத்தையும் கடவுள் பார்த்துக்கிட்டுதான் இருக்காரு.... ஒருநாளைக்கு அவர் உங்க எல்லாத்தையும் ஓட ஓட வெரட்டப் போறாரு... அப்ப நீங்க எல்லாம் ஒண்ணுமே இல்லாமப் போய்டுவீங்க... என்று பாதிக்கப்பட்டோர் அதிலும் குறிப்பாக, நேர்மையாளர்கள் கூறக் கேட்டிருப்போம். ஏறக்குறைய தாவீது கூறும் வார்த்தைகளின் பொருளும் இதுவாகத்தான் இருக்கின்றது. 'இஸ்ரேல் மக்கள் பாளையத்திலிருந்து புறப்பட்டபோதெல்லாம் ஆண்டவரின் மேகம் பகலில் அவர்கள்மேல் இருந்தது. பேழை புறப்படும்போதெல்லாம் மோசே, “ஆண்டவரே எழுந்தருளும். உம் பகைவர் சிதறுண்டு போகட்டும்; உம்மை வெறுப்போர் உம் முன்னின்று ஓடியொளியட்டும்” என்று கூறுவார்' (காண்க. எண் 10:34-35) என்று எண்ணிக்கை நூல் மொழிகிறது. இதனை ஏற்கனவே அறிந்திருந்த தாவீது, மோசேயின் அதே வார்த்தைகளைக் குறிப்பிட்டு கடவுளுக்கும் தனக்கும் எதிராகச் செயல்படும் தனது எதிரிகள் அனைவரும் இல்லாதொழியட்டும் என்று இறைவேண்டல் செய்கிறார். இங்கே, சிதறடிக்கப்படுவர், ஓடிப்போவர் என்று தாவீது மொழியும் இரண்டு வார்த்தைகளும் அவர் தனது எதிரிகளால் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை எடுத்துரைக்கின்றன. பொதுவாக, கடவுளுக்கும் அவர்தம் அடியவருக்கும் எதிராகச் செயல்படும் அனைவருமே எதிரிகள்தாம். ஆகவே, இந்த அர்த்தத்தில்தான், "அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்" என்று உரைக்கின்றார் தாவீது அரசர். இதனடிப்படையில்தான் நமதாண்டவர் இயேசுவும், "உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால் தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்! என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள்" (காண்க. யோவா 15:18, 20-21) என்று மொழிகின்றார்.
இரண்டாவதாக, "புகை அடித்துச் செல்லப்படுவதுபோல அடித்துச் செல்லப்படுவர்; நெருப்புமுன் மெழுகு உருகுவது போலக் கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர்" என்று கூறுகின்றார் தாவீது. இங்கே, புகை, மெழுகு என்ற இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார். இப்போதும் நாம் வானத்தில் ஒரு காட்சியைப் பார்க்கலாம். அதாவது, நாம் ஏதாவதொன்றை தீயிட்டுக் கொளுத்தும்போது அதனால் ஏற்படும் புகையானது மேலே வானத்தில் செல்லும். ஆனால் சிறிது நேரத்தில் அது மறைந்துபோகும். அதுவும் குறிப்பாக, அந்நேரம் காற்று பலமாக அடித்தால், அந்தப் புகையானது கண்ணிமைக்கும் நேரத்தால் காணாமல் போகும். இம்மாதிரிதான் கடவுளுக்கு எதிராகச் செயல்படுவோர் அனைவரும் அவரின் நீதியான செயல்களால் தண்டிக்கப்பட்டு காணாமல் போய்விடுவர் என்பதை எடுத்துக்காட்டும் விதமாகத்தான் இவ்வாறு குறிப்பிடுகின்றார் அவர். இதுவொரு சாதாரண நிகழ்வுதான், ஆனாலும் தாவீது அரசர், இதனை எவ்வளவு அழகாக ஒப்புமைப்படுத்திக் கூறுகிறார் பாருங்கள்! அதேவேளையில், இது இன்னொருவிதமான தியானச் சிந்தனையையும் நமக்குத் தருகிறது. அதாவது, மனித வாழ்க்கை நொடிப்பொழுதில் மறைந்துபோகும் புகைக்குச் சமமானது என்பதையும், இதனை நாம் புரிந்துகொண்டு இறையச்சமுடனும் நம்பிக்கையுடனும் வாழவேண்டும் என்பதை நமக்குப் பாடமாகப் படிப்பிக்கின்றது. மேலும் இக்கருத்தை மனதில் கொண்டவராகதான், "மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள். அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது; அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது" (காண்க. திபா 103: 15-16) என்றும், "மெய்யாகவே, மானிடர் நீர்க்குமிழி போன்றவர்; மனிதர் வெறும் மாயை; துலாவில் வைத்து நிறுத்தால், அவர்கள் மேலே போகின்றார்கள்; எல்லாரையும் சேர்த்தாலும் நீர்க்குமிழியை விட எடை குறைகின்றார்கள்" (காண்க திபா 62:9) என்றும், வேறுசில திருப்பாடல்களிலும் வாழ்வின் நிலையாமைப் பற்றி புலப்படுத்துகின்றார் தாவீது அரசர். அதனைத் தொடர்ந்து, நெருப்பு முன் உருகிப்போகும் மெழுகை ஒப்புமைப்படுத்தி தனது எதிரிகளின் அழிவைக் குறித்துப் பேசுகின்றார் தாவீது. காற்றில் மறையும் புகைபோல, நெருப்பில் உருகும் மெழுகும் நாம் காணும் ஒரு நிகழ்வுதான். அதாவது, மெழுகு நெருப்பில் உருகிவுடன் அது தான் முன்னர் பெற்றிருந்த ஒட்டுமொத்த உருவத்தையும் இழந்துவிடும், அவ்வாறுதான் கடவுளிடமிருந்து எழும் கோபக்கனல் அவர்தம் எதிரிகளை உருத்தெரியாமல் அழித்துவிடும் என்று குறிப்பிட்டுக் காட்டுகின்றார் தாவீது.
இரண்டாவதாக, "நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர்" என்று உரைக்கின்றார் தாவீது அரசர். நேர்மையாளருக்கு இந்த மகிழ்ச்சியும் ஆர்ப்பரிப்பும் ஏற்படுவதற்குக் காரணம் அவர்தம் இறையச்சம்தான். இதுவே அவர்களைக் கடவுளுக்குரிய வழியில் நடத்துகின்றது மற்றும் பாதுகாக்கின்றது. ஒருநாள் திருவிவிலிய வாசிப்புக் குழுவில் இருந்த பெண் ஒருவர், வெள்ளி உலோகக்கொல்லர் ஒருவர் வேலை செய்வதைப் பார்க்கச் சென்றார். அங்கே அந்தக் கொல்லர் முதலில் ஒரு துண்டு வெள்ளியை எடுத்து தீயில் வைத்து அது சூடாவதற்காகக் காத்திருந்தார். அப்போது அவர், "வெள்ளியை தீயின் நடுவில் வைக்க வேண்டும். ஏனெனில் அங்கே தான் வெப்பம் அதிகமாக இருக்கும், அது அதிலுள்ள அனைத்து மாசுகளையும் எரித்துவிடும்" என்று அப்பெண்ணிடம் எடுத்துரைத்தார். உடனே அப்பெண், "முழுநேரமும் உலையின் முன்னாலேயே உட்கார்ந்திருக்க வேண்டும் என்பது உண்மையா?" என்று கேட்டார். அதற்கு அவர், "ஆமாம் உண்மைதான்! முழுநேரமும் உட்கார்ந்திருப்பது மட்டுமல்லாமல், வெள்ளியில் இருந்து நம் பார்வையை அகற்றவே கூடாது. இல்லையென்றால் அதிகப்படியான வெப்பத்தில் சட்டென அது உருகிவிடும்" என்றும் தெரிவித்தார். அதற்கு அப்பெண், "வெள்ளி முழுவதிலும் உள்ள மாசு அகற்றப்பட்டுவிட்டது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டார். அதற்கு அந்தக் கொல்லர், "ஓ! அது ரொம்ப சுலபம், என் உருவத்தை நான் அதில் பார்க்கும் போது அது தெரிந்துவிடும்!" என்று பதில் தந்தார். இப்படித்தான் வாழ்க்கைப் பிரச்சனைகள் தன்னையும் தனது மக்களையும் அதிகமாகத் தாக்குவதாக தாவீது உணர்ந்தபோதெல்லாம், கடவுள் அவர்கள்மீது, தான் கொண்டிருந்த பார்வையை ஒருபோதும் அகற்றவில்லை. மேலும் அவரது உருவம் அவர்களில் தெரியும் வரை அவர் தனது பார்வையை அவர்கள்மீது பதித்து அவர்களைக் காப்பாற்றி தூய்மையான வெள்ளிபோன்று ஒளிரச்செய்தார். அவர்களில் தனது தூய உருவத்தையும் கண்டு மகிழ்ந்தார். இதே நம்பிக்கையை நாமும் கடவுளிடம் கொள்ளும்போது அவர் நம்மையும் காப்பாற்றி தூய வெள்ளியைப் போன்று ஒளிரச் செய்வார் என்பது திண்ணம். இவ்வருளுக்காக இந்நாளில் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்