MAP

மண்ணுலகும் மானிடரும் உறவால் ஒன்றே மண்ணுலகும் மானிடரும் உறவால் ஒன்றே 

விவிலியத் தேடல்: திருப்பாடல் 67-1, மண்ணுலகும் மானிடரும் உறவால் ஒன்றே!

மானிடரும் இந்த நானிலமும் ஒன்றுக்கொன்று புனித உறவில் ஒன்றிக்கப்பட்டுள்ளதை உள்ளத்தால் உணர்ந்து வாழ்ந்திடுவோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 67-1, மண்ணுலகும் மானிடரும் உறவால் ஒன்றே!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், “வல்லமை ஆண்டவரின் இடைக்கச்சை!” என்ற தலைப்பில் 64-வது திருப்பாடலில் 13 முதல் 20 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவு செய்தோம். இவ்வாரம் 67-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். 'நன்றிப் புகழ்ப்பா' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 7 இறைவார்த்தைகளை மட்டுமே கொண்டுள்ள சிறியதொரு திருப்பாடல்தான். இது "பாடல்கள்" என்று பெயரிடப்பட்ட நால்வர் அடங்கிய பாடகர் குழு பாடும் திருப்பாடல்களில் ஒன்று. இது இசை இயக்குநருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதுடன், பாராட்டு மற்றும் நன்றியை வெளிப்படுத்துகிறது. 65 முதல் 68 வரையுள்ள திருப்பாடல்கள் எபிரேய திருவிவிலியத்தின் முதல் வசனத்தில் வரும் ‘அரெட்ஸ்’ என்ற எபிரேய வார்த்தையைப் பயன்படுத்தி அடிக்கடி இந்த மண்ணுலகைக் குறிப்பிடுகின்றன. (காண்க. 65:5,9; 66:1,4; 67:2,6,7; 68:8) கடவுள் இந்த மண்ணுலகு முழுவதையும் அதன் நீல ஆறுகள் மற்றும் கடல்கள், பொன்விளையும் தானிய வயல்வெளிகள், பசுமையான மேய்ச்சல் நிலங்கள் மற்றும் காடுகளுடன் ஆசீர்வதித்துள்ளார் என்பதை 65-வது திருப்பாடல் எடுத்துரைக்கிறது (வச. 9-13). அவ்வாறே, திருப்பாடல் 66 மண்ணுலகிலுள்ள அனைத்து மக்களும் அவர்கள் மத்தியில் கடவுளின் வல்லமையான செயல்களைப் பாராட்ட அழைக்கிறது (வச. 1-4). திருப்பாடல் 67 மண்ணுலகு முழுவதும் வாழ்பவர்கள் தொடர்ந்து ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று இறைவேண்டல் செய்கிறது (வச. 2, 7). திருப்பாடல் 68 கடவுளால் உந்தப்பட்ட நிலநடுக்கத்தைப் பற்றி பேசுகிறது (வச. 8). மேலும் இந்த நான்கு திருப்பாடல்களிலும், 'பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பாடல்' என்று ஒரே மாதிரி துணைத்தலைப்பிடப்பட்டுள்ளது.

இன்று நாம் தியானிக்கும் திருப்பாடல் இரண்டு முக்கிய தலைப்புகளை உள்ளடக்கியுள்ளது. முதல் தலைப்பு, ஆசி வழங்குதல், புனிதப்படுத்தல் மற்றும் மீட்புக் குறித்துப் பேசுகிறது (வச.1-3). இரண்டாவது தலைப்பு, ஆசி வழங்கல் மற்றும் பணி குறித்துப் பேசுகிறது (வச. 4-7). இப்போது இத்திருப்பாடலின் ஏழு இறை வார்த்தைகளையும் குறித்துத் தியானித்து இதனை நிறைவுக்குக் கொணர்வோம். முதலில் இறை அமைதியில் அந்த வார்த்தைகளைப் பக்தியுடன் வாசிப்போம். “கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார். கடவுள் நமக்கு ஆசி  வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!” (வச 1-7)

முதலில், “கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர்" என்கின்றார் தாவீது. கடவுளின் ஆசி இல்லாமல் மனிதரும் சரி, இம்மண்ணுலகும் சரி வளமைக்காண முடியாது என்பது திண்ணம். நமது வாழ்வில் நாம் செய்யும் அனைத்துக் காரியங்களுக்கும் கடவுள் வழங்கும் ஆசி முக்கியம். இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். அதனால்தான், எந்தவொரு நற்காரியத்தைத் தொடங்கும்போதும் நாம் அருள்பணியாளர்களை அழைத்து வந்து இறைவேண்டல் செய்து கடவுளின் ஆசீரை இறைஞ்சி மன்றாடுகிறோம். ஒவ்வொரு மதத்தினரும் இவ்வாறே செய்கின்றனர். அதிலும் குறிப்பாக, கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொரு புத்தாண்டுக் கொண்டாட்டத் திருப்பலியின்போதும், எண்ணிக்கை நூலிலிருந்து ஆண்டவர் மோசேயிடம், ஆரோனும் அவன் புதல்வர்களும் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை குறித்துக் குறிப்பிடுவதை வாசித்து இறையாசீர் வேண்டுகின்றோம். அப்பகுதியை இப்போது வாசிப்போம். ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” (எண் 6: 22-26). அடுத்து கடவுளின் ஆசி வேண்டி இறைவேண்டல் செய்தபிறகு, திருப்பலியின் முடிவில் அருள்பணியாளர்களிடம் ஆசி வேண்டுகின்றோம். அதனைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஆசி வழங்கி நமது மகிழ்வைப் பகிர்ந்துகொள்கின்றோம். இது  புத்தாண்டு மற்றும் கிறிஸ்து பிறப்பு போன்ற சிறப்பு வழிபாடுகளின்போது மட்டுமல்ல, பங்குத் திருவிழாக்கள், பிறந்தநாள் விழாக்கள், திருமண விழாக்கள், ஆண்டுவிழாக்கள், பொன்விழாக்கள், நூற்றாண்டுவிழாக்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளின்போதும் ஆசி பெறும் இந்த நிகழ்வு இடம்பெறுவதைப் பார்கின்றோம்.

இங்கே முக்கிமானதொன்றையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது. அதாவது, கடவுள் வழங்கு ஆசியால் கடவுளின் மக்கள் மட்டுமல்ல பிற இன மக்களும் அவர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வதாகக் கூறுகின்றார் தாவீது. எனது சொந்த ஊரில் இன்றும் ஒரு வழக்கம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி விண்ணேற்பு அன்னைப் பெருவிழாவைக் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் கொண்டாடும்போது, முதல் நாள், அதாவது 14-ஆம் தேதி இரவு முழுவதும் மூன்று தேர்கள் எங்கள் ஊரை வலம்வரும். அப்போது அனைத்து மத மக்களும் வாழும் தெருக்களுக்கும் இந்த மூன்று தேர்களும் கொண்டுசெல்லப்படும். அப்போது அவர்கள் அனைவரும் அன்னை மரியாவிடம் மனமுருகி மன்றாடுவர். அப்படியென்றால், கடவுளைப் பொறுத்தமட்டில் எவ்வித வேறுபாடும் இன்றி எல்லாருக்கும் அவர் ஆசி வழங்குகிறார் என்பது தெள்ளத்தெளிவாகிறது. ஆனால் அற்ப மனிதர்களாகிய  நாம்தான் கடவுளின் பெயரால் வேறுபாடுகளை உருவாக்கி, வன்முறைகளை விதைத்து, மனிதர்களை அழித்தொழித்து வருகின்றோம். அன்னை மரியா கோவில்களாகட்டும் அல்லது, அந்தோணியார் கோவில்களாகட்டும் மதவேறுபாடுகள் பாராமல் அனைவரும் சென்று இறையாசீர் பெறுகின்றனர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மிகவும் சிறப்பாக, நாம் கொண்டாடும் மூன்று அரசர்கள் பெருவிழாவிலும் (திருக்காட்சிப் பெருவிழா), இயேசுவை எருசலேம் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணித்த பெருவிழாவிலும் (பிப்ரவரி 2), இயேசு ஆண்டவர் தன்னை எல்லா மக்களுக்கும் வெளிப்படுத்தியதாகவும், அனைத்து மக்களின் மீட்புக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தாகவும் பார்க்கின்றோம். ஆக, நம் ஆண்டவராம் கடவுள் எவ்வித வேறுபாடுமின்றி எல்லாருக்கும் ஆசி வழங்குகின்றார் என்பதை மனதில் கொண்டவராகத்தான், "மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக!" என்றும் உரைக்கின்றார் தாவீது.

இறுதியாக, "நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார். கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!” என்று கூறி இந்தத் திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது. ஆக எல்லா மக்களும் கடவுள் தரும் ஆசியையும் மீட்பையும் பெற்றுக்கொண்டு ஒன்றிணைந்து ஒரே மனத்தவராகப் பயணிக்கும் போது, இந்த நானிலம் நற்பலனைத் தரும் என்கின்றார். இங்கே நானிலம் என்பது எதைக் குறிக்கிறது? நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு வகை திணைகளாகப் பிரித்தனர் நம் முன்னவர்கள்.   முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்ளும்போது அது ஐந்தாக எண்ணப்பட்டது. இவையே தமிழர் நிலத்திணைகள். மலையும் மலை சார்ந்த இடம் குறிஞ்சி எனவும், காடும், காடு சார்ந்த நிலம் முல்லை எனவும், வயலும் வயல் சார்ந்த நிலம் மருதம் எனவும், கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்டன. இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த மணலும் மணல் சார்ந்த இடமும் பாலை எனப்பட்டது. தமிழர் பண்பாட்டு வழியில் நாம் இதனைக் குறித்துச் சிந்திக்கும்போது, மனிதர் வாழ்வு இயற்கையுடன் எவ்வளவு ஒன்றித்துள்ளது என்பதையும் நாம் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே, மானிடர் போர்கள், மோதல்கள், கலவரங்கள், பிரிவினைகள் மற்றும் பிணக்குகள் இன்றி மனம் ஒன்றித்து வாழும்போது இந்த நானிலம் அதற்குரிய பலனைத் தரும் என்று நாம் இங்கே தாவீதின் வழியில் பொருள்கொள்ளலாம். காரணம், மனிதர் ஏற்படுத்தும் போர்களும் மோதல்களும் இந்த நானிலத்தைக் குத்திக் கிழித்துக் காயப்படுத்துகின்றன. இதனால்தான் அது மானிடருக்குப் பயன்தர முடியாமல் போகின்றது. எடுத்துக்காட்டாக, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போரினாலும், இரஷ்யா உக்ரைன்மீது நடத்தும் போரினாலும், இஸ்ரயேல் பாலஸ்தீனத்தின்மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள போரினாலும் இந்தப் பூமித்தாய் அதாவது, இந்த நானிலம் எப்படிக் கொடூரமாகப் பாழ்ப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் அறிகிறோம். இதனால், சிதைந்துபோன மனிதத்தைக் கட்டியெழுப்புவதைக் காட்டிலும், குண்டுகளால் கூறுபோடப்பட்ட இந்த நானிலத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில்தான் நமக்கு மிகப்பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. ஆகவே, மானிடரும் இந்த நானிலமும் ஒன்றுக்கொன்று புனித உறவில் ஒன்றிக்கப்பட்டுள்ளதை உள்ளத்தால் உணர்ந்து வாழ்ந்திடுவோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 மார்ச் 2025, 13:43