MAP

புளோரஸ் தீவில் உள்ள மறைமாவட்டப் பேராலயம் புளோரஸ் தீவில் உள்ள மறைமாவட்டப் பேராலயம்   (Paris Foreign Missions)

இந்தோனேசியாவின் புவிவெப்ப திட்டத்தை எதிர்த்துப் போராடும் தலத்திருஅவை!

இந்தோனேசியாவின் எரிசக்தி மற்றும் கனிம வள அமைச்சகத்தின் புள்ளிவிபரங்களின்படி, புளோரஸ் தீவு 902 மெகாவாட் அல்லது கிழக்கு நுசா தெங்காரா மாநிலத்தின் மொத்த திறனில் 65 விழுக்காட்டுத் திறனைக் கொண்டுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தோனேசியாவில் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழும் புளோரஸ் தீவில் புவிவெப்ப திட்டத்தை நிறுத்தக் கோரி நூற்றுக்கணக்கான ஆர்வலர்களுடன் கத்தோலிக்க அருள்பணியாளர்களும் அருள்சகோதரிகளும் இணைந்து போராடினர் என்று தெரிவித்துள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.

மார்ச் 12, இப்புதன்கிழமையன்று, இந்தப் போராட்டம் குறித்து கூறியுள்ள அச்செய்தி நிறுவனம், இந்தத் திட்டம் கிராம மக்களின் நில உரிமைகளை மீறுவதாகவும் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டதையும் எடுத்துக்காட்டியுள்ளது.

"இந்த திட்டம் எங்களைக் கொல்கிறது என்றும், இது முதலீட்டாளர்களையும் அவர்களது நண்பர்களையும் மட்டுமே ஆதரிக்கிறது" என்றும் போராட்டத்தை ஒருங்கிணைத்த  ஃப்ளோரஸ் ஜியோதெர்மல் விக்டிம்ட்ஸ் என்ற கூட்டமைப்பு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாகவும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இக்கூட்டமைப்பின் தலைவரும் இறைவார்த்தை சபையின் அருள்பணியாளருமான பெலிக்ஸ் பாகி அவர்கள், இந்தத் திட்டம் மாதலோகோவில் உள்ள பூர்வகுடி மக்களின் 996 ஹெக்டேர் விவசாய நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் இந்தத் திட்டம் 1998-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது எனவும், ஆனால் இதுவரை மின்சாரம் உற்பத்தி செய்யத் தவறிவிட்டது எனவும் இத்திட்டம் குறித்துக் குறைகூறியுள்ள  அருள்பணியாளார் பாகி அவர்கள், பூமியைத் துளையிடும் இயந்திரம் தொடர்ந்து 500 மீட்டர் முதல் ஒரு கிலோமீட்டர் வரை சூடான சேற்றை வெளியேற்றி, விவசாய நிலங்களை சேதப்படுத்தியிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்போது இந்தத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், டிசம்பர் மாதத்திலிருந்து புதிய அளவிலான சேறுகள் பூமியிலிருந்து மீண்டும் வெளியேற்றப்பட்டு, கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் விளைநிலங்களை அழித்துவிட்டதாகவும் கவலை தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் பாகி.

மேலும் இந்தத் திட்டம் தொடர்ந்தால், "ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் இழக்கப்படும் என்றும், உள்ளூர் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்" என்றும் எச்சரித்துள்ளார் அருள்பணியாளர் பாகி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 மார்ச் 2025, 13:22