MAP

இரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் சிதிலமடைந்த கட்டிடங்கள் இரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் சிதிலமடைந்த கட்டிடங்கள்  

உக்ரைனின் போராட்டம் ஐரோப்பா மற்றும் உலகின் நிலையை மாற்றியமைக்கும்!

ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு உக்ரைனையும் அதன் மக்களையும் தொடர்ந்து ஆதரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மார்ச் 4, இச்செவ்வாயன்று, ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு இரஷ்யாவின் தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைனுக்குத் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தப் போரில் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் உட்பட, அனைவருக்கும் தொடர்ந்து இறைவேண்டல் செய்வதாகத் கூறியுள்ள அதேவேளை, உக்ரைனுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மனிதாபிமான, அரசியல் மற்றும் இராணுவ உதவிகளை வழங்கி வருவதற்காக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளது.

மேலும் உக்ரைனின் போராட்டம் உலகளாவியத் தாக்கங்களைக் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்தும் அந்த அறிக்கை, ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பினர்களும் உக்ரைனை ஆதரிப்பதில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

உக்ரைன்மீதான இரஷ்யாவின் தாக்குதல் அனைத்துலகச் சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று அவ்வறிக்கையில் கண்டித்துள்ள அதன் ஆயர்கள், பொதுமக்களுக்கு எதிராகச் செய்யப்படும் இந்தச் செயல்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

உக்ரைனின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நிலைநிறுத்தப்பட்டு, பேச்சுவார்த்தைகள் மற்றும் அனைத்துலக ஒத்துழைப்பு வழியாக மட்டுமே அந்நாட்டில் நீடித்த அமைதியை அடைய முடியும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இரஷ்ய மொழி பேசும் சிறுபான்மையினர் உட்பட உக்ரைனில் உள்ள அனைத்துச் சமூகங்களின் பாதுகாப்பிற்கும் அழைப்பு விடுத்துள்ள ஆயர்கள், அந்நாட்டின் மறுகட்டமைப்புக்கு இரஷ்யா பங்களிக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 மார்ச் 2025, 12:53