யூதர்களைக் காப்பாறிய போலந்து மக்களுக்கென தனிச் சிறப்பு நாள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
நாத்ஸி வதைப்போர் காலத்தின்போது போலந்தில் கொடுமைகளுக்கு உள்ளான யூதர்களைக் காப்பாற்ற உயிரை இழந்த தன் மக்களை இத்திங்களன்று சிறப்பான விதத்தில் நினைவுகூர்ந்தது போலந்து நாடு.
இரண்டாம் உலகப்போர் காலத்தின்போது யூதர்களைக் காப்பாற்ற தங்கள் உயிரை இழந்த போலந்து மக்களைச் சிறப்பிக்கும் விதமாக 2018ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் 24ஆம் தேதி தேசிய நினைவு தினம் சிறப்பிக்கப்படுகின்றது.
1944ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி ஜோசப் உல்மா, அவரின் மனைவி விக்டோரியா, அவர்களின் 6 இளவயது குழந்தைகளும், அவர்கள் பாதுகாப்பு வழங்கிய எட்டு யூதர்களும் ஜெர்மானிய காவல்துறையால் கொல்லப்பட்ட அதே நாளை, யூதர்களைக் காப்பாற்ற தங்களை தியாகம் செய்த போலந்து நாட்டவர்களை கௌரவிக்கும் நாளாக சிறப்பித்து வருகிறது போலந்து நாடு.
1941ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி லூப்ளின் நகரில் யூதர்களுக்கு என்று தனிப்பகுதி ஆரம்பிக்கப்பட்டு அவர்களை தனிச் சிறைவளாகம் போல் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டதன் நினைவாகவும் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லூப்ளின் பேராலயத்தில் இந்நினைவு நாள் திருப்பலியுடன் கொண்டாடப்பட்டு, யூதர்களைக் காப்பாற்ற உயிரை இழந்த உல்மா குடும்பம் குறித்த கண்காட்சியும் மக்களின் பார்வைக்கென திறந்து வைக்கப்பட்டது.
Słonim நகருக்கருகே யூதர்களுக்கு புகலிடம் கொடுத்ததற்காக கொல்லப்பட்ட கத்தோலிக்க அருள்சகோதரி Marta Wołowska அவர்களின் வீட்டிலும் மலர்க்கொத்துக்கள் வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
யூதர்களுக்கு இரண்டாம் உலகப்போர் காலத்தில் உதவியதாக 2345 போலந்து அருள்கன்னியர்கள் குறித்த விவரங்களும், பல போலந்து அருள்பணியாளர்கள் குறித்த விவரங்களும் இதுவரை திரட்டப்பட்டுள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்